இந்தியாவில் நடுத்தர மக்களின் அவசரத் தேவைகளுக்கும் தொழில்களுக்கும் எப்போதும் கைகொடுப்பது நகைக் கடன்கள்தான். குறிப்பாக, அவசர மருத்துவ செலவுகளுக்காக மக்கள் மிகக் குறைந்த நேரத்தில் கிடைக்கும் நகைக்கடனைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், இப்போது இந்திய வங்கிகளில் தங்க நகைக்கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் நகைக்கடன் சுமார் 83 சதவீதம் உயர்ந்து, ஐந்து லட்சத்து எழுபத்தேழாயிரம் கோடி ரூபாய் என்ற இமாலய சாதனையைப் படைத்துள்ளது. அதாவது, கடந்த பன்னிரண்டு மாதங்களில் மட்டும் கூடுதலாக மூன்று லட்சம் கோடி ரூபாய் தங்கத்தின் மீது கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதர நிதி நிறுவனங்களையும் (NBFCs) சேர்த்தால் ஒட்டுமொத்த நகைக்கடன் சந்தை மிக வேகமாக விரிவடைந்து வருகிறது.
ஆனால் தங்கம் விலை உச்சத்திலிருந்து மெல்ல சரியத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், ஒருவேளை தங்கம் விலை மேலும் பதினைந்து சதவீதம் குறைந்தால் என்ன நடக்கும் என்ற மிகப்பெரிய எச்சரிக்கையை நிதித்துறை வல்லுநர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
தங்கத்தின் விலை திடீரென பதினைந்து சதவீதம் சரியும்போது, வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் நாம் அடமானம் வைத்த நகைகளின் சந்தை மதிப்பு கணிசமாகக் குறையும்.
பொதுவாக ஒரு நகையின் மதிப்பில் அறுபது முதல் எழுபது சதவீதம் வரை மட்டுமே வங்கிகள் கடனாகத் தரும். இதை எல்டிவி (LTV) எனப்படும் லோன்-டு-வேல்யூ விகிதம் என்பார்கள். அதாவது, உங்கள் நகையின் மதிப்பு ரூ.1,00,000 என்றால், வங்கி உங்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 மட்டுமே கடனாக வழங்கும்.
அதாவது, சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்ததால், நுகர்வோர்கள் தங்களிடம் உள்ள அதேயளவு நகையை அடமானம் வைத்து முன்னரைக் காட்டிலும் அதிக தொகையைக் கடனாகப் பெற (Loan-to-Value) முடிந்தது.
தங்கம் விலை சரியும்போது, வாடிக்கையாளர் வாங்கிய கடன் அப்படியே இருக்கும்; ஆனால் அடமானம் வைக்கப்பட்ட நகையின் மதிப்பு குறைந்துவிடும் என்பதால், இந்த கடன் விகிதம் எழுபத்தாறு சதவீதத்திற்கும் மேலாக எகிறிவிடும்.
கடன் பெறுபவர்களின் பாதுகாப்பிற்காக மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளன. இதன்படி ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு நகையின் சந்தை மதிப்பில் 85% வரை கடன் வழங்கப்படுகிறது.
தங்கத்தின் சந்தை விலை கணிசமாகக் குறையும் போது, நீங்கள் அடமானம் வைத்துள்ள நகையின் ஒட்டுமொத்த மதிப்பும் குறைகிறது. நகையின் மதிப்பு குறையும் போது, உங்களுடைய கடன் தொகை (LTV) 75%-ஐ தாண்டி 85% அல்லது 90% ஆக உயர்ந்துவிடும். இது வங்கிகளுக்கு அதிக ஆபத்தை (Risk) ஏற்படுத்துகிறது.
மேலும் தங்கம் உச்ச விலையில் இருந்தபோது (Peak Price) நகையை வைத்து 75% முழுமையான LTV-இல் கடன் வாங்கியவர்களை இது நேரடியாகப் பாதிக்கும்.
அதேசமயம் ஏற்கனவே கடனைத் திருப்பிச் செலுத்தி, LTV 50-60%க்குள் இருப்பவர்களுக்கு இந்த விலை வீழ்ச்சியால் பெரிய பாதிப்பு இருக்காது.
தங்கம் விலை தற்போதைய உச்சத்தில் இருந்து 15% அல்லது அதற்கு மேல் குறைந்தால், தங்க நகைக் கடன் (Gold Loan) வாங்கியவர்களுக்கு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் (NBFCs) கூடுதல் பிணைத்தொகை (Margin Call) அல்லது கூடுதல் நகைகளைக் கேட்கும் சூழல் நிச்சயம் உருவாகலாம் என சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதேசமயம், விலை குறைந்த உடனேயே வாடிக்கையாளர்கள் கூடுதல் நகையை வைக்க வேண்டும் என்றோ, பணத்தை உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றோ வங்கிகள் கட்டாயப்படுத்தாது என்றாலும், பழைய நகையின் மீது கூடுதலாக டாப்-அப் கடன் வாங்க நினைப்பவர்களுக்கும், புதிதாக அடமானம் வைப்பவர்களுக்கும் இனி குறைவான தொகையே கடனாகக் கிடைக்கும்.
வங்கிகள் என்ன நடவடிக்கை எடுக்கும்?
LTV விகிதம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகரிக்கும் போது, வங்கிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் 3 விருப்பங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்:
• நடப்பு சந்தை விலைக்கு ஏற்ப LTV விகிதத்தை 75%க்குள் கொண்டு வர, கூடுதலாக சில தங்க நகைகளை (Additional Collateral) அடமானம் வைக்கக் கோருவார்கள்.
• கடனின் ஒரு பகுதியை (Cash Margin) உடனடியாகப் பணமாகச் செலுத்தி, அசல் தொகையைக் குறைக்கச் சொல்வார்கள்.
• வாடிக்கையாளர் குறிப்பிட்ட காலத்திற்குள் கூடுதல் நகையோ அல்லது பணமோ தராவிட்டால், வங்கிகள் நகையை ஏலம் (Auction) விட்டுத் தங்கள் கடனை வசூலிக்க சட்டப்பூர்வமாக முற்படுவர்.
உங்களிடம் தற்போதைய தங்கக் கடன் இருந்தால், இந்தச் சூழலை எதிர்கொள்ள, உங்கள் தற்போதைய கடன் கணக்கின் LTV விகிதத்தைச் சரிபார்க்கவும். அது 75%-க்கு அருகில் இருந்தால் எச்சரிக்கையாக இருக்கவும். தங்கம் விலை தொடர்ந்து சரிந்தால், அவசரத் தேவைக்காகச் சிறிய அளவிலான பணத்தையோ அல்லது மாற்று நகையையோ தயாராக வைத்திருக்கவும். உங்களால் முடிந்தால், மாதந்தோறும் அசலில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தி (Part-payment) கடன் சுமையைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தங்க நகைக்கடன் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் (சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், தங்கம் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கண்காணித்து மக்கள் கடன்களைத் திட்டமிடுவது அவசியமாகிறது.
அதுமட்டுமின்றி, தங்கம் விலையில் வரப்போகும் அடுத்தகட்ட மாற்றங்கள் சாதாரண பொதுமக்களையும் நிதி நிறுவனங்களையும் எத்தகைய நெருக்கடியில் தள்ளப்போகிறது என்பதை நாம் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது.