தங்கம் விலை கடந்த சில நாட்களில் அதிரடியாகச் சரிந்துள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களுக்கு விலை உயர வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே சர்வதேசச் சந்தையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை, அதன் பின்னர் கடுமையாகச் சரிந்து மீண்டும் உயரத் தொடங்கியது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்களும், புதிதாக நகைகள் வாங்கத் திட்டமிடுபவர்களும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 17-ம்தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்து ஒரு சவரன் ரூ.560 வரை குறைந்து ரூ.99,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.12,470 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,280 குறைந்துள்ளது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை, ஓராண்டுக்குப் பிறகு நேற்று மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த நவம்பர் 10-ம்தேதி ஒரு சவரன் ரூ.1,05,680-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 6 வர்த்தக நாட்களில் மட்டும் சவரனுக்கு ஏறக்குறைய ரு.6000 வரை வீழ்ச்சியடைந்து தற்போது ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் வந்துள்ளது.
கடைசியாக 2025 டிசம்பர் 23-ம்தேதி தங்கம் விலை ஒரு லட்சத்துக்கும் கீழ் இருந்தது. அதன்பிறகு ரூ.1.02 லட்சமாக அதிகரித்து தொடர்ந்து உச்சங்களைத் தொட்டது.
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1,34,400 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்த நிலையில், கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் 25.8 சதவீதம் வரை விலை சரிந்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் தங்கம் சார்ந்த முதலீட்டு நிதிகளிலிருந்து முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெறுவதும், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வுமே இந்தத் தொடர் விலை சரிவுக்கு முக்கியக் காரணங்களாக பொருளாதார நிபுணர்களால் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், 2026-ம் ஆண்டு விலைமதிப்புள்ள உலோகங்களுக்குச் சவாலான ஆண்டாக அமைந்துள்ளது.
இதற்கிடையே தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், மேலும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பை உண்மையாக்கும் வகையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.78,000 வரை குறையும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தக் கணிப்பு பலித்து விட்டால் இந்திய சந்தையில் தங்க விற்பனை மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
மறுபுறம் தங்கம் விலை குறைந்தாலும், தங்கத்தை இப்போதே வாங்கலாமா அல்லது மேலும் குறைவதற்காக இன்னும் காத்திருக்காலாமா என்ற குழப்பமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் வருங்காலத்தில் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் நாட்களை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் சரிவு தொடரும் வாய்ப்பு இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதேநேரம் வரும் நாட்களிலும் தங்கம் விலை மேலும் 4 முதல் 5 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும், அவர்கள் கூறுகின்றனர். தங்கம் வாங்க திட்டமிடுவோருக்கு இது சாதகமான தருணமாக அமையும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக அமெரிக்க பணவீக்கம், டிசம்பர் மாத வட்டி விகித முடிவு, டாலர் மதிப்பு ஆகியவை தங்கத்தின் அடுத்தகட்ட விலையை நீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.
ஒரு சில சந்தை ஆய்வாளர்களின் கருத்துப்படி, குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை உடனடியாக உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதாவது தங்கத்தின் விலை அடுத்த இரு காலாண்டுகளுக்கு (6 மாதம்) குறைய வாய்ப்புள்ளது என்றே கணித்துள்ளனர். தங்கத்தின் விலை ஓரளவிற்கு ரூ.12,000 முதல் ரூ.12,5000ஐ சுற்றியே இருக்கும். பெரியளவில் மாற்றம் இருக்காது என்றும் கூறுகின்றனர்.
டிசம்பர் மாதம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது. அங்கே வட்டி விகிதம் உயர்ந்தால் இங்கே தங்கத்தின் விலை குறையும்.
குறிப்பாக 10% தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. நகை வாங்கத் திட்டமிடுவோருக்கு இது ஒரு சிறந்த தருணமாக அமையும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கத்தின் மீது மேலும் அழுத்தம் ஏற்படலாம். அதேநேரம், வட்டி உயர்வு எதிர்பார்ப்பு குறைந்தாலோ, உலகளாவிய பொருளாதார அல்லது புவிசார் பதற்றங்கள் அதிகரித்தாலோ தங்கம் மீண்டும் விலை உயர வாய்ப்பும் உள்ளது.
அதேசமயம் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் சந்தை கணிப்புகளின்படி, 2027-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்க வாய்ப்புள்ளது. வரலாற்று சராசரி வருமானத்தின் அடிப்படையில், அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம் ரூ.25,000 என்ற இலக்கை எட்டும் என்றும் சாத்தியமான பொருளாதாரக் கணிப்பாகக் கருதப்படுகிறது.
தங்கத்தின் விலை எப்போது உயரும், எப்போது குறையும் என்பதை யாராலும் சரியாக சொல்ல முடியாது. ஆகையால் தங்கம் விலை குறையும் போதே வாங்கி விடுவது நல்லது என்றே சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். மறுபுறம் இதுவரை குறைந்ததே பெரிய விஷயம் என நினைத்து தங்கம் வாங்குவதும் நல்லதுதான், இல்லை மேலும் விலை குறைந்தால் வாங்கலாம் என்று தைரியமாக காத்திருப்பதும் அவரவர் விருப்பம்தான் என்கின்றனர்.
சாமானிய மக்கள் தங்கத்தை ஆபரண நகையாக வாங்குவதோடு, முதலீட்டிலும் கவனம் செலுத்துவது நல்லது.