பல கோடிகளை முடக்கிய ஜனநாயகன் திரைப்படம், கரூர் சம்பவம் குறித்த சிபிஐ விசாரணை, இவற்றுக்கு மத்தியில் தாங்கள் கேட்ட விசில் சின்னம் கிடைத்த மகிழ்ச்சி இத்தனை முரணான உணர்வுகளுடன், மாமல்லபுரத்தில் இன்று நடந்த தவெகவின் செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தலைவர் விஜய்க்கு விசிலடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று விஜய் தலைமையில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 2500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கள் பாடப்பட்டு கட்சியின் கொள்கை உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு செயல் வீரர்கள் கூட்டத்தில் மேடையில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தவெக கொள்கைத் தலைவர்களின் படங்களுக்கும் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கட்சியின் மூத்த தலைவர்களான செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத், ஜேசிபி பிரபாகர் போன்றவர்களுக்கு மேடையில் பேசுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
‘பல தலைவர்களை கண்டிருக்கிறேன், ஆனால் தளபதிக்கு கூடிய கூட்டம் போல் பார்த்ததில்லை. எந்த சக்தியாலும் நம்மை தடுக்க முடியாது. திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே தளபதி விஜய். அவர் முதல்-அமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று செங்கோட்டையன் பாராட்டி பேசினார்.
‘வீட்டுக்கு ஒரு ஓட்டு விஜய்க்கு உள்ளது. இப்படி ஒரு மக்கள் வரவேற்பு எந்த தலைவருக்கும் கிடையாது எனவும் வீட்டுக்கு ஒரு ஓட்டு என்றால் மொத்த ஓட்டுகளில் சுமார் 40% ஓட்டுக்கள் விஜய் பக்கம் உள்ளது. இந்தியாவில் ஒரு முன்னுதாரண அரசாக தவெக அமையும் ’ என நிர்மல் குமார் உறுதியளித்து பேசினார்.
ஒரே நாளில் ட்ரெண்டிங்கானது விசில் சின்னம். அதுதான் தவெகவின் பலம். உண்மையான பணி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தான். ஆனால் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பணத்துக்காக அல்ல மக்கள் நலனுக்காகவே விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என அருண்ராஜ் பேசினார்.
கடந்த இரண்டு மாதங்களாக தவெக தலைவர் விஜய் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் இன்று திமுக, அதிமுக வீடுகளிலும் விஜய்க்கு ஆதரவு உள்ளது. திமுககாரர், அதிமுககாரன் என எந்த நபரிடம் கேட்டாலும், எங்கள் வீட்டில் தளபதிக்குத்தான் ஓட்டு என்கிறார்கள். நாங்கள் பாஜகவை எங்கு எதிர்க்க வேண்டுமோ அங்கு எதிர்ப்போம்.
நீட், ஜிஎஸ்டி, இந்தி மொழி எது வந்தாலும் முதல் எதிர்ப்பு எங்களிடமிருந்துதான் வரும். 2016-ல் தனித்து நின்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தது போல, 2026-ல் விஜய் ஆட்சி அமைப்பார். தேர்தல் ஆணையத்தில் உள்ள விஜய் ரசிகர்கள்தான் கையெழுத்திட்டு விஜய்க்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு வாக்கு வங்கி உள்ளது. தமிழ்நாட்டில் நிச்சயம் வெற்றிப் பெறும் என்று ஆதவ் அர்ஜூனா கூறினார்.
தலைவர்கள் அன்பால் உருவாவதில்லை தியாகத்தால் தான் உருவாக்கப்படுகிறார். உச்சத்தை விட்டு விட்டு வந்துள்ள விஜய்யை முதல்-அமைச்சர் பதவியின் அமர வைப்பதற்காக அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசினார்.
விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திய பின்னர் கிட்டதட்ட 38 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் மாமல்லபுரத்தில் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது மேடையில் பேசிய விஜய், ‘மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறேன். நமக்கு ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? அழுத்தமா? நமக்கா? அதெல்லாம் இல்லை. இந்த மாதிரி அழுத்தங்களுக்கு எல்லாம் அடங்கிப் போகிற ஆளா நான்?
அழுத்தம் இருக்கிறதா என்று கேட்டால், அழுத்தம் உள்ளது; ஆனால் நமக்கு இல்லை. மக்களுக்கு இருக்கிறது. மாற்றி மாற்றி ஏமாந்த மக்கள் அழுத்தத்தில் இருக்கின்றனர். ஏமாந்த மக்கள் தவெகவை நம்புகின்றனர். அடிமையாக இருக்க நான் அரசியலுக்கு வரவில்லை.
இதற்கு முன் இருந்தவர்கள் போலவும் இப்போது இருப்பவர்கள் போலவும் நாம் ஊழல் செய்ய மாட்டேன். ஊழல் செய்பவர்களை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். தவெக மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் கட்சியினர் செயல்பட வேண்டும் என்ன சூழ்ச்சி செய்தாலும் அழுத்தம் கொடுத்தாலும் அடங்கிப் போக மாட்டேன்.
எனக்கென்று மக்கள் ஒரு தனி இடத்தில் தந்து இருக்கிறார்கள். சரியாகவே நம்மை மதிப்பிட்டு இருக்கிறார்கள். முதல்வன் படத்தைப் போல் ஒரே நாளில் நீங்கள் கிளீன் பண்ணிடுவீர்களா என்று கேட்கலாம். முடியாது. ஆனால் பிராஸஸ் இருந்தால் முடியும். தப்பு செய்தால் யாராலும் தப்பிக்கவே முடியாது என்ற பயம் இருக்க வேண்டும். ஒற்றுமையாக கூடியிருந்து ஜெயிக்க வேண்டும்.
யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் கூடாது. தயவு செய்து எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும். இது தேர்தல் அல்ல ஒரு ஜனநாயகப் போர். வரப்போகும் தேர்தல் இதுவரை தமிழ்நாடு பார்த்திராத ஒரு முக்கியமான தேர்தலாக இருக்கும். உண்மையாக, ஒற்றுமையாக உழைத்து ஜெயிப்போம் என தொண்டர்களிடம் உற்சாக வேண்டுகோள் விடுத்த விஜய் தொடர்ந்து கட்சியின் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.