

15 வயதுக்குட்பட்ட சிறார்களின் பாஸ்போர்ட் விதிமுறைகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாஸ்போர்ட்டுகளின் செல்லுபடிக்காலம் குறித்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
'பாஸ்போர்ட் (திருத்த) விதிகள், 2026'-ன் (Passports Amendment Rules 2026) கீழ், 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வழங்கப்படும் 36 பக்கங்களைக் கொண்ட சாதாரண பாஸ்போர்ட், அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகள் அல்லது அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் வரை (எது முதலாவதாக வருகிறதோ அதுவரை) செல்லுபடியாகும்.
புதிய திருத்தத்தின்படி கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்தத் திருத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பதின்ம வயதினர், பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து வயதுப் பிரிவினருக்கும் பொருந்தும் வகையில், பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் (Validity) மற்றும் கட்டணங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. இந்தியப் பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரங்கள் இதோ.
வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிடும் குடும்பங்களுக்கு இது ஒரு முக்கியமான மாற்றமாகும்; ஏனெனில், குழந்தையின் வயதைப் பொறுத்து அவர்களின் பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் மாறுபடலாம். 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் 36 பக்கங்களைக் கொண்ட சாதாரண பாஸ்போர்ட், ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே அல்லது அந்தச் சிறுவர்/சிறுமியின் வயது 18 ஆகும் வரை, இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை மட்டுமே செல்லுபடியாகும். உதாரணமாக, 10 வயது குழந்தைக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டு ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்; அதாவது, அந்தக் குழந்தைக்கு 15 வயது ஆகும் வரை அது பயன்பாட்டில் இருக்கும்.
இதற்கு முன்பு, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எடுக்கப்படும் பாஸ்போர்ட் 5 ஆண்டுகள் அல்லது அவர்களுக்கு 15 வயது ஆகும் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்ற கட்டுப்பாடு இருந்தது. உதாரணமாக, 14 வயதில் பாஸ்போர்ட் எடுத்தால் 15 வயதானதும் அது காலாவதியாகிவிடும். இதனால் பெற்றோர்கள் அடிக்கடி புதுப்பிக்க வேண்டியிருந்தது. தற்போது அந்த 15 வயது உச்சவரம்பு நீக்கப்பட்டு, 18 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதே பாஸ்போர்ட் ஒரு குழந்தைக்கு 14 வயதாக இருக்கும்போது வழங்கப்பட்டால், அது ஐந்து ஆண்டுகள் முடிவதற்கு முன்பாகவே, அந்தக் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகும்போது காலாவதியாகிவிடும். எனவே, வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிடும் பெற்றோர்கள், விமான டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்வதற்கு முன்பாக, இதைக் கவனத்தில் கொள்வது அவசியம். பெற்றோர்களின் பாஸ்போர்ட்டுகளைக் காட்டிலும், குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகள் மிக முன்னதாகவே காலாவதியாகக்கூடும்.
அதேபோல் 15 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பதின்ம வயதினருக்கு ஒரு தேர்வு வாய்ப்பு உள்ளது. 'பாஸ்போர்ட் சேவா' (Passport Seva) வழிகாட்டுதலின்படி, அவர்கள் 18 வயது பூர்த்தியாகும் வரை செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது முழு கால அளவு கொண்ட (வழக்கமான) பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம்
பள்ளிச் சுற்றுலாக்கள், உயர்கல்வி, விளையாட்டுப் போட்டிகள், குடும்பச் சுற்றுலாக்கள் அல்லது பிற சர்வதேச நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு செல்லும் பதின்ம வயதினருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். எனவே, அடிக்கடி வெளிநாடு செல்லத் திட்டமிடும் குடும்பங்கள், விண்ணப்பிக்கும்போதே பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் கால அளவு குறித்த இந்தத் தேர்வை கவனத்தில் கொள்ள வேண்டும்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, சாதாரண பாஸ்போர்ட் 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 15 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட விண்ணப்பதாரர்கள் முழு கால அளவு கொண்ட பாஸ்போர்ட்டைத் தேர்ந்தெடுக்கும்போதும், அவர்களுக்கும் இதே வகைப்பாடே பொருந்தும்.
அடிக்கடி வெளிநாடு பயணம் செய்பவர்களுக்கு, நீண்ட கால செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருப்பதால், அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறையும்.
இருப்பினும், பயணம் செய்வதற்கு முன்பாக எப்போதும் பாஸ்போர்ட்டின் காலாவதி தேதியையும், செல்ல வேண்டிய நாட்டின் நுழைவு விதிகளையும் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
அதேபோல் இந்தியாவில் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கும் புதிய பாஸ்போர்ட்டுக்கு (Fresh Applications) கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே உள்ள பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கோ (Re-issue / Renewal) அல்லது தொலைந்துபோன பாஸ்போர்ட்டுக்குப் பதிலாக விண்ணப்பிப்பதற்கோ இந்த சலுகை பொருந்தாது. வெளிநாடுகளுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும், குடும்பத்தினரைச் சந்திக்கச் செல்லும் அல்லது வெளிநாடுகளில் விடுமுறையைக் கழிக்கத் திட்டமிடும் முதியவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
புதிய விதிகளின்படி பாஸ்போர்ட் கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன:
வெளிவிவகார அமைச்சகம் (MEA) ஜூலை 1, 2026 முதல் பாஸ்போர்ட் சேவை கட்டணங்களை மாற்றியமைத்ததைத் தொடர்ந்து, இந்த நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கான 36 பக்க புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்கான கட்டணம் தற்போதைய ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பிரிவில் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பக்கங்கள் கொண்ட 60 பக்க பாஸ்போர்ட்டுக்கான சாதாரண கட்டணம் ரூ.2,000-லிருந்து ரூ.3,500 ஆகவும், தட்கல் கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான (Minors) 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் சாதாரண முறையில் ரூ.1,750 ஆகவும், தட்கல் (Tatkaal)முறையில் ரூ.4,250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொலைந்த/சேதமடைந்த கடவுச்சீட்டை மாற்ற சாதாரண முறையில் ரூ.4,250 மற்றும் தட்கல் முறையில் ரூ.6,750 வசூலிக்கப்படும்.
உங்கள் குழந்தைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பழைய பாஸ்போர்ட் இருந்தால், அதில் குறிப்பிட்டுள்ள காலாவதி தேதி (Expiry Date) வரை அது வழக்கம்போல் செல்லுபடியாகும். அதை உடனே மாற்ற வேண்டிய அவசியமில்லை.
தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு மாற்றாகப் புதிய பாஸ்போர்ட் பெற இனி பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
அதன்படி, 36 பக்க மாற்று பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறையில் ரூ.5,000 மற்றும் தட்கல் முறையில் ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், 60 பக்க மாற்று பாஸ்போர்ட்டுக்குச் சாதாரண முறையில் ரூ.6,000 மற்றும் தட்கல் முறையில் ரூ.8,500 கட்டணம் செலுத்த வேண்டும்.
இது தவிர, காவல்துறை சரிபார்ப்பு (PCC) சான்றிதழ், பாஸ்போர்ட் சரண்டர் சான்றிதழ் (Surrender Certificate) மற்றும் உலகளாவிய நுழைவுத் திட்ட (GEP) சரிபார்ப்பு போன்ற இதர சேவைகளுக்கான கட்டணமும் இந்தியாவில் ரூ.500-லிருந்து ரூ.750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குழந்தைகள், பதின்ம வயதினர் அல்லது வயதான பெற்றோருடன் சர்வதேசப் பயணம் மேற்கொள்ளும் குடும்பத்தினர், புறப்படுவதற்கு முன்பாகவே பாஸ்போட்டின் செல்லுபடியாகும் காலத்தைச் சரிபார்ப்பதன் மூலம், கடைசி நேரப் புதுப்பித்தல்கள், விசா சிக்கல்கள் மற்றும் விமான நிலையத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.