

10-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 7-ம்தேதி தொடங்கியது. இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 20 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் தென்ஆப்பிக்கா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதியை எட்டின. முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை பந்தாடி 2-வது முறையாகவும், இரண்டாவது அரைஇறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாகவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இன்று பலப்பரீட்டையில் இறங்கின.
இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றி சரித்திரம் படைக்குமா? அல்லது நியூசிலாந்து அணி முதல் முறையாக உலகப்கோப்பையை கையில் ஏந்துமா என்பதை காண கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி, இந்த இறுதி யுத்தத்தை காண ஆமதாபாத் மைதானத்தில் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் திரட்டிருந்தனர்.
மொத்தத்தில் இதுபோன்ற ஆட்டத்தில் இரு அணிக்குமே உச்சபட்ச நெருக்கடி இருக்கும். எனவே அழுத்தமான சூழலை எந்த அணி சாதுர்யமாக சமாளிக்கிறதோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு சற்று தூக்கலாக இருக்கும்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் இந்தியாவும், 11-ல் நியூசிலாந்தும வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்துள்ளது.
20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை பொறுத்தவரை இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மோதிய 3 முறையும் தோல்வியே சந்தித்து இருக்கிறது. ஒருதடவை கூட வெற்றி பெற்றது கிடையாது. மொத்தத்தில் வெள்ளை நிற பந்து ஐ.சி.சி. உலக போட்டியில் நியூசிலாந்தின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இரு அணிகளும் 16 முறை மோதியதில் நியூசிலாந்து 9-7 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதே மைதானத்தில் 2023-ம் ஆண்50 ஓவர் உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது.
அதனால் இந்தியாவிற்கு இது ராசியில்லாத மைதானம் என விமர்சனம் முன்வைக்கப்படுவதுடன், சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வெல்ல வேண்டிய அழுத்தமும் இந்திய அணிக்கு அதிகமாக உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
உலக ரசிகர்களின் ஆவலுக்கு இடையே இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் சான்னெர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
அந்த வகையில் இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி, முதலில் நிதானமாக விளையாடிய நிலையில் 4-வது ஓவரில் இருந்து அதிரடி காட்ட தொடங்கினர். 5 ஓவரில் இந்தியா 72 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 18 பந்தில் அரைசதமும், 21 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவரில் 98 ரன்கள் குவித்தது.
அடுத்து இஷான் கிஷன் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்து நியூசிலாந்தின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சஞ்சு சாம்சன் 33 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்த நிலையில் இந்தியா 11.3 ஓவரில் 150 ரன்களைத் தொட்டது.
அதனை தொடர்ந்து 16-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேற, அதே ஓவரில் இஷான் கிஷன் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 16-வது ஓவரின் கடைசி பந்தில், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆவுட்டாகி வெளியேறினார். இந்த ஒரு ஓவரில் மட்டும் 3 பேர் அவுட்டாகி வெளியேறினர். கடைசியில் இந்திய அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது.
இதன் மூலம் டி20 உலககோப்பை இறுதி போட்டியில் 250 ரன்கள் மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்தது. டி20 உலககோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்டுள்ள 3வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணியின் டிம் சீஃபர்ட் - ஃபின் ஆலன் ஜோடி களமிறங்கிய நிலையில், ஒரு பவுண்டரி விரட்டி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஃபின் ஆலன் அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து களம் இறங்கிய ரச்சின் ரவீந்திரா ஒரு ரன்னிலும், க்ளென் பிலிப்ஸ் 5 ரன்னிலும், டிம் சீஃபர்ட் 52 ரன்னிலும், மார்க் சாப்மேன் 3 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு நியூசிலாந்து 95 ரன்கள் எடுத்தது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்த நிலையில் நியூசிலாந்து அணி நிதானமாக விளையாடிய நிலையில் டேரில் மிட்செல் 17 ரன்னிலும், ஜேம்ஸ் நீஷம் 8 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினார்.
கடைசியில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா, அபிஷேக் சர்மா 1 விக்கெட்டும, வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றி சரித்திரம் படைத்தது.
கடைசியில் அனைத்து சவால்களையும் தகர்த்து, உலக கோப்பையை வென்ற சாதனை பட்டியலில் கபில்தேவ், தோனி, ரோகித் சர்மா வழியில் சூர்ய குமார் யாதவ் இணைந்தார்.
நரேந்திரமோடி மைதானம் இந்தியாவிற்கு ராசியில்லாத மைதானம் என விமர்சனம் முன்வைக்கப்பட்ட நிலையில், சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இமாலய வெற்றி பெற்று அந்த விமர்சனத்தை சரித்திரமான மாற்றி உள்ளது.