

மாருதி சுசுகி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற பல வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சமீபத்தில் தங்கள் வாகனங்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.30,000 வரை உயர்த்தியிருந்தாலும், இந்நிறுவனங்கள் இந்த மாதம் பல்வேறு கார் மாடல்களுக்குச் சலுகைகளை அறிவித்துள்ளதால், இந்த மாதம் (ஜூன்) கார் வாங்குபவர்கள் ரூ.3.50 லட்சம் வரை சேமிக்க முடியும்.
இந்த மாதம் (ஜூன் மாதம்)ஒரு புதிய காரை வாங்கத் திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு முன்னணி கார் நிறுவனங்கள் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. ஹூண்டாய், மாருதி சுசுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய பல பிரபலமான மாடல்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளையும் சலுகைகளையும் வழங்குவதாக அறிவித்துள்ளன. இதன் மூலம், வாங்குபவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் வாகனத்தைப் பொறுத்து, சில ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 3.50 லட்சம் வரை சேமிக்க முடியும்.
குறிப்பாக இந்தச் சலுகைகளில் ரொக்கத் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள், ஸ்கிராப்பேஜ் ஊக்கத்தொகைகள், லாயல்டி ரிவார்டுகள் மற்றும் கார்ப்பரேட் சலுகைகள் ஆகியவற்றின் கலவையின் மூலம் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் இந்த சலுகைகள் ஹேட்ச்பேக்குகள், செடான்கள், எஸ்யூவிகள் மற்றும் மின்சார வாகனங்கள் (EVs) எனப் பல வகைகளில் கிடைக்கின்றன. மேலும், நாட்டின் மிகவும் பிரபலமான சில பயணிகள் வாகனங்களையும் (PVs) இது உள்ளடக்கியுள்ளது.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த மாதம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கு ரூ. 3.50 லட்சம் வரையிலான சலுகைகள் கிடைக்கின்றன. நிறுவனத்தின் மின்சார வாகன வரிசையில், டாடா கர்வ்.இவி (Tata Curvv.ev) அதிகபட்ச தள்ளுபடியைப் பெறுகிறது. ஹாரியர்.இவி (Harrier.ev), நெக்ஸான்.இவி (Nexon.ev), பஞ்ச்.இவி (Punch.ev) மற்றும் டியாகோ.இவி (Tiago.ev) உள்ளிட்ட பிற மாடல்களும் ஜூன் மாதத்தில் பல்வேறு சலுகைகளுடன் கிடைக்கின்றன.
அந்த வகையில் நெக்ஸான் மற்றும் கர்வ் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ.55,000 வரை சலுகைகள் வழங்கப்பட்டுகின்றன. ஹாரியர் மற்றும் சபாரி எஸ்.யூ.வி.களுக்கு ரூ.45000 வரையும் ஆல்ட்ரோஸுக்கு ரூ.40000 வரையும் சலுகைகள் கிடைக்கின்றன.
மேலும் பழைய டியாகோ மாடலுக்கு ரூ.35000 மற்றும் டிகோருக்கு ரூ.30000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகளில் பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஸ்கிராப் பேஜ் பலன்கள் இடம்பெற்றுள்ளன. புதிய டியோகோ பேஸ்லிப்ட் மற்றும் பஞ்ச் மாடல்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தாது.
மாருதி சுசுகி
மாருதி சுசுகி காரை வாங்க நினைக்கும் வாங்குபவர்களுக்கு, அந்நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ரக கார்கள் தற்போது அதன் வரிசையில் அதிகபட்ச தள்ளுபடிகளை வழங்குகின்றன. இன்விக்டோ காருக்கு ரூ.2.15 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல, கிராண்ட் விட்டாரா கார் ரூ. 1.35 லட்சம் வரையிலான தள்ளுபடியில் கிடைக்கிறது. மேலும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களில் கூடுதல் சாலை வரிச் சலுகைகளுடன், மொத்த சேமிப்பு ரூ. 1.85 லட்சம் வரை கிடைக்கும். இதன் மூலம், இந்த மாதம் சந்தையில் அதிக தள்ளுபடி வழங்கப்படும் வாகனங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. ஃபிரான்க்ஸ் (Fronx)மற்றும் பலேனோ (Baleno)உள்ளிட்ட மற்ற நெக்ஸா மாடல்களுக்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன.
மாருதி சுசுகியின் அரீனா(Arena range) ரக கார்களும் இந்த தள்ளுபடி திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விக்டோரிஸ் (Victoris)காருக்கு ரூ. 90,000 வரையிலான சலுகைகள் கிடைக்கின்றன. ஆல்டோ(Alto), வேகன்ஆர்(WagonR), ஸ்விஃப்ட்(Swift), டிசையர்(Dzire), பிரெஸ்ஸா(Brezza) மற்றும் எர்டிகா(Ertiga) போன்ற பிரபலமான மாடல்களிலும் வாங்குபவர்கள் சலுகைகளைப் பெறலாம். இருப்பினும், சரியான சலுகைகள் மாடல், வேரியன்ட் மற்றும் இடத்தைப் பொறுத்து மாறுபடும்.
ஹூண்டாய் நிறுவனம்
ஹூண்டாய் நிறுவனமும் இந்த தள்ளுபடி போட்டியில் இணைந்துள்ளது. க்ரெட்டாவின் (Creta)தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களுக்கு ரூ. 1.05 லட்சம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது.
இந்த சலுகைகள், கொரிய கார் தயாரிப்பாளரின் தயாரிப்பு வரிசையில் உள்ள கிராண்ட் i10 நியோஸ் (Grand i10 Nios)மாடலுக்கு ரூ. 80,000 வரையிலும், i20 (i20)மாடலுக்கு ரூ. 65,000 வரையிலும், வெர்னா (Verna)மாடலுக்கு ரூ. 55,000 வரையிலும், எக்ஸென்ட் (Exter)மாடலுக்கு ரூ. 40,000 வரையிலும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்நிறுவனம் அப்கிரேட் போனஸ்கள் மற்றும் கவர்ச்சிகரமான நிதித் திட்டங்களையும் வழங்குகிறது.
அதிகபட்ச தள்ளுபடி கிடைக்கும் கார்கள்
இந்த ஜூன் மாதத்துக்கான மிகப்பெரிய சலுகை மாருதி சுசுகி நிறுவனத்தின் இன்விக்டோ காருக்கு கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் ரூ. 2.15 லட்சம் வரையிலான சலுகைகளைப் பெறலாம். ஹூண்டாய் கிரெட்டா கார்டுக்கு ரூ. 1.05 லட்சம் வரையிலும், டாடா நெக்ஸான் மற்றும் கர்வ் கார்களில் ரூ. 55,000 வரையிலும் சேமிப்புகள் உள்ளன. இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் மற்றும் வாங்குபவர் ஏற்கனவே உள்ள வாகனத்தை மாற்றுகிறாரா என்பதைப் பொறுத்து சரியான மதிப்பு மாறுபடலாம்.
பல்வேறு பிராண்டுகளிலும் தள்ளுபடிகள் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் எந்த வகையிலான வாகனத்தைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும் அவர்களுக்குப் பல தேர்வுகள் உள்ளன. அது ஒரு ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் (hatchback) கார், குடும்பத்திற்கான எஸ்யூவி (SUV) அல்லது மின்சார வாகனம் (EV) என எதுவாக இருந்தாலும், ஜூன் மாதம் பயணிகள் வாகனச் சந்தையின் பெரும்பாலான பிரிவுகளில் குறிப்பிடத்தக்க சேமிப்புகளைக் கொண்டு வந்துள்ளது.
வாகனத்தை வாங்கத் திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தச் சலுகைகள் பொதுவாக மாதம் இறுதி வரை(ஜூன் 30-ம்தேதி) மட்டுமே செல்லுபடியாகும் என்பதையும், டீலர்களுக்கு இடையே இவற்றில் மாறுபாடுகள் இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வாகனத்திற்குப் பொருந்தக்கூடிய இறுதிச் சலுகை அல்லது பலனை உறுதிப்படுத்த, அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலரைத் தொடர்புகொள்வதே சிறந்த வழியாகும்.
இறுதியாக வாடிக்கையாளர்கள் விலை குறைவு என்பதற்காக மட்டும் ஏதேனும் ஒரு காரை வாங்குவதை விட மேலே கூறிய அம்சங்களையும் பார்த்து வாங்கினால் நன்மைகள் அதிகம்.