பூமிக்கு காத்திருக்கும் புது வகை ஆபத்து! 1° வெப்பம் உயர்ந்தால் நடக்கப்போகும் விபரீதம் இதுதான்!

புவி வெப்பமாதலால் 140% வரை உயரப்போகும் மின்னல் தாக்குதல்: ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
Sun
Sun
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

மழைக் காலங்களில் தான் வழக்கமாக பூமியை நோக்கி மின்னல் தாக்குதல் இருக்கும். மின்னல் தாக்குதலின் போது அதிகப்படியான மின்சாரம் பூமியில் பாயும் என்பதால் மனித உயிரிழப்புகள் ஏற்படுவதோடு, மரங்களும் சேதமடையும். இந்நிலையில் இந்த நூற்றாண்டின் (2100) இறுதிக்குள் மின்னல் தாக்குதல் சுமார் 76% முதல் 140% வரை உயரும் என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

கடந்த 1995 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலை விடவும் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பருவகால மாற்றத்தால் புவி வெப்பமாதல், மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறி வருகின்றன. அவ்வகையில் மின்னல் தாக்குதல் அதிகரிப்புக்கும் புவி வெப்பமாதல் தான் முக்கிய காரணியாக இருக்கிறது.

புவி வெப்பமாதல் 1 டிகிரி அதிகரித்தால், புவியில் மின்னல் தாக்குதல் 30% வரை உயரும் என ஜெர்மனியின் மியூனிக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்ப மண்டலப் பகுதிகளான அமேசான், ஓசியானியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகச் சாதாரணமாக ஏற்படும் மின்னல் தாக்குதல்களின் எண்ணிக்கை இந்த நூற்றாண்டு இறுதிக்குள் மிக அதிகமாக உயரும்.

ஒவ்வொரு டிகிரி புவி வெப்பமயமாதலுக்கும் மேகத்தில் இருந்து பூமிக்கு வரும் மின்னல்களின் அதிர்வெண் 8% முதல் 17% வரை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் குறித்து மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புவி அமைப்பு விஞ்ஞானியும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான ஆண்ட்ரியாஸ் க்ராஸ் கூறுகையில், “மின்னல் தாக்குதல்களின் அளவு குறைவாகவே உயரும் என நினைத்தேன். ஆனால் இந்த அளவிற்கு கணிப்புகள் உயரும் என நான் எதிர்பார்க்கவில்லை” எனத் தெரிவித்தார்.

பருவகால மாற்றத்தால் உலகளவில் காற்றின் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. அதிகப்படியான வெப்பச்சலனமானது மேகங்களைக் கிளறி, கூடுதல் மின்னல்களை உருவாக்க வாய்ப்புள்ளது.

வெப்பக்காற்று என்பது வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் பனிக்கட்டிகள் குறைவான அளவில் இருப்பதையும் குறிக்கலாம். இதன் காரணமாக வலுவான மின்புலங்கள் உருவாவதும், அதனைத் தொடர்ந்து மின்னல் உருவாவதும் கடினமாகிறது.

இவையிரண்டில் எது முக்கியமானது என்பதைத் தெளிவாக கூற முடியவில்லை என ஆண்ட்ரியாஸ் க்ராஸ் தெரிவித்துள்ளார்.

மின்னல்
மின்னல் தாக்குதல்
இதையும் படியுங்கள்:
ஆபத்தாக மாறும் பருவநிலை மாற்றம்: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!
Sun

பருவகால மாற்றத்தால் உலகளவில் ஏற்கனவே வெப்பநிலை உயர்ந்து வருகிறது. நடப்பாண்டில் கோடை காலம் முடிந்தும் கூட, வெப்பநிலை உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டனர். இது போதாதென சூப்பர் எல்-நிலோ விளைவால், வரும் ஆண்டுகளில் கடுமையான வறட்சியும், வெப்பநிலையும் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் மின்னல் தாக்குதல்களின் எண்ணிக்கையும் 140% வரை உயரும் என்ற ஆய்வு முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கையின் சமநிலை பாதிப்பால் ஏற்பட்ட விளைவு தான் பருவகால மாற்றம். இதனால் இனி என்னென்ன ஆபத்துகள் வரப் போகிறதோ என ஆராய்ச்சியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். புவி வெப்பமடைதலை குறைக்க ஐநா சபையில் ஏற்கனவே பலமுறை விவாதம் நடந்துள்ளது. இருப்பினும் கூட பெரிய அளவில் மாற்றங்கள் நடக்கவில்லை என்பதே நிதர்சனம்.

புவி வெப்பமாதலால் மின்னல் தாக்குதல் அதிகரித்தால், அது பூமியில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக உலக நாடுகள் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது இனி தான் தெரிய வரும்.

இதையும் படியுங்கள்:
பெரிய ஆபத்து காத்திருக்கு..நெருப்பாய் மாறப் போகும் பசிபிக் பெருங்கடல்: எச்சரிக்கை விடும் ஐநா..!!
Sun