சென்னையில் Lulu Hypermarket போறதுக்கு முன்னாடி, இதெல்லாம் தெரிஞ்சிட்டு போங்க..!!

மக்கள் ஒரே இடத்தில் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம், நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப பொருள்களை வாங்கவும் செய்யலாம்.
LuLu Hypermarket Shenoy Nagar
LuLu Hypermarket Shenoy Nagarimage credit-@IndianTechGuide
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

சென்னையில் பலரும் ஆவலோடு எதிர்பார்த்த லூலூ ஹைப்பர்மார்க்கெட் (LuLu Hypermarket) கடந்த அக்டோபர் 12-ம்தேதி அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுவிட்டது! நீங்கள் அங்கு ஷாப்பிங் செய்யப் போவதற்கு முன்னாடி, திட்டமிட்டுச் செல்வதற்கு உதவக்கூடிய முக்கிய தகவல்கள் இதோ...

சூப்பர் மார்கெட் தொழிலை மிகப் பிரம்மாண்டமாக நடத்தும் நிறுவனங்களில் உலகளவில் முக்கியமானது லூலூ நிறுவனம். 1995ஆம் ஆண்டு எம்.ஏ. யூசுப் அலி (M.A. Yusuff Ali) என்பவரால் அபுதாபியில் தொடங்கப்பட்டு, தற்போது உலக அளவில் 22 நாடுகளில் சுமார் 230 லூலூ ஹைபர் மார்கெட்டுகள் உள்ளன.

உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் மொத்தம் 57,000க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிகின்றனர். நிறுவனத்தின் மொத்த மதிப்பு 56,500 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் இரண்டு இடங்களிலும், சமீபத்தில் கர்நாடகாவிலும் கிளை பரப்பிய லூலூ நிறுவனம், தமிழ்நாட்டில் கோவையைத் தொடர்ந்து தற்போது சென்னையில் இரு இடங்களில் கால் பதித்துள்ளது.

எல்லா பொருள்களும் ஒரே இடத்தில் கிடைப்பது சூப்பர் மார்கெட் என்றால் அதைவிட மிகப் பெரியதாகவும், அனைத்து தரத்திலான பொருள்களும் கிடைக்கும் இடமாக ஹைபர் மார்கெட்டுகள் உள்ளன. எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நம் ஊர் சரவணா ஸ்டோர்ஸும், ஷாப்பிங் மால்களும் இணைந்து இருந்தால் எப்படி இருக்குமோ அதேபோன்ற தன்மையில்தான் இந்த ஹைபர் மார்கெட்டுகள் இருக்கும். இதனால் மக்கள் ஒரே இடத்தில் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம், நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப பொருள்களை வாங்கவும் செய்யலாம்.

முதலாவதாக, இது கோயம்புத்தூர் அல்லது கொச்சியில் இருப்பது போன்ற மிகப்பெரிய லூலூ மால் கிடையாது. இது சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களுக்குள் (Metro Stations) அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக ஹைப்பர்மார்க்கெட் மற்றும் ரீடெய்ல் ஸ்டோர்கள் மட்டுமே ஆகும். ஆனால் கடைகளின் உள்கட்டமைப்பு, சர்வதேச தரத்திலான வடிவமைப்பு மற்றும் தூய்மையான சூழல் ஆகியவை சிறந்த ஷாப்பிங் அனுபவத்தைத் தருவதாக உள்ளது.

இங்கு மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், எலக்ட்ரானிக்ஸ், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைப்பது மிகப்பெரிய பிளஸ்.

சென்னையில் தற்போது செனாய் நகர் மெட்ரோ மற்றும் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ஆகிய 2 இடங்களில் கடந்த அக்டோபர் 12-ம்தேதி லூலூ கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

செனாய் நகர் மெட்ரோ நிலையத்தின் அடித்தளத்தில் (Basement 1 & 2) அமைந்துள்ள இந்த லூலூ ஹைப்பர்மார்க்கெட் (LuLu Hypermarket) சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில், இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ ஹைப்பர்மார்க்கெட் ஆகும். மெட்ரோ பயணிகள் மற்றும் ஷெனாய் நகர், அமைஞ்சிக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எளிதில் அணுகும் வகையில் அமைந்துள்ளது.

அடுத்து சென்னை சென்ட்ரல் மெட்ரோவில் அமைந்துள்ள LuLu Daily 35,000 சதுர அடியில் அமைந்துள்ள சிறிய அளவிலான கடையாகும். இது பெரிய ஹைப்பர் மார்க்கெட்டைப் போலன்றி, பயணம் செய்யும் பயணிகள் எளிதாக மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும் மெட்ரோ பரிமாற்ற மையத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முகவரி மற்றும் கடையின் நேரங்கள் (Timings & Location)

இடம்: லூலூ ஹைப்பர்மார்க்கெட், செனாய் நகர் மெட்ரோ ஸ்டேஷன், புல்லா அவென்யூ, திரு.வி.க பார்க் அருகில், சென்னை - 600030.

இதையும் படியுங்கள்:
ஷாப்பிங் பண்ணியாச்சா? அடுத்து சாப்பாடுதான்... உணவு டெலிவரியில் அதிரடியாக களமிறங்கும் Flipkart..!
LuLu Hypermarket Shenoy Nagar

திறந்திருக்கும் நேரம்: கூகுள் மேப்ஸ் (Google Maps) தகவல்படி, வாரத்தின் 7 நாட்களும் (திங்கள் முதல் ஞாயிறு வரை) காலை 9:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை செயல்படுகிறது.

கடையின் செயல்பாட்டு நேரங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், நீங்கள் செல்ல திட்டமிடுவதற்கு முன் தற்போதைய நேர விவரங்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

உள்ளே என்னென்ன பொருட்கள் கிடைக்கும்?

ஒரே கூரையின் கீழ் உங்களுக்குத் தேவையான அனைத்தும் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன:

* Supermarket: புதிய காய்கறிகள், பழங்கள், இறக்குமதி செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகள், மளிகைப் பொருட்கள், வீட்டிற்கு தேவையான அனைத்தும் இங்கு கிடைக்கும்.

* LuLu Bakery & Hot Food: லூலூவின் ஸ்பெஷல் பிரெஷ் கேக்குகள், பேஸ்ட்ரிகள், பிரெட் வகைகள் மற்றும் பிரியாணி, கறிகள் போன்ற உணவுப் பொருட்கள்.

* LuLu Fashion Store: ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், காலணிகள் மற்றும் ஃபேஷன் ஆபரணங்கள்.

* LuLu Connect: மொபைல், லேப்டாப், டிவி போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்.

* உள்ளேயே ஒரு மல்டி-குசின் ஃபுட் கோர்ட் (Food Court) மற்றும் கஃபேக்களும் உள்ளன. நீங்கள் ஏதாவது meat varieties தேர்வு செய்து கொடுத்தால் சமைத்தும் தரப்படுகிறது.

லூலூ ஹைப்பர்மார்க்கெட்
லூலூ ஹைப்பர்மார்க்கெட்image credit-@luluhypertn

* இங்குள்ள ரெடி-டு-ஈட் (Ready-to-eat) உணவுப் பகுதியும், மினி ஃபுட் ஸ்ட்ரீட் போன்ற லைவ் கவுண்டர்களும் (பிரியாணி, ஷவர்மா, சாட் வகைகள், ஸ்நாக்ஸ்) மிகக் குறைந்த விலையில், சுவையாகவும் தரமாகவும் கிடைக்கிறது.

* ஆட்டிறைச்சி, கோழி, காடை, முயல் கறி மற்றும் பல வகையான மீன்கள் ஒரே இடத்தில் சுத்தமாக வெட்டி, பேக் செய்யப்பட்டு நியாயமான விலையில் கிடைப்பது அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

* பழங்கள் எத்தனை சதவீதம் பழுத்துள்ளது என்பதை காட்டுவதற்கும் மிஷின் உள்ளது. இதில் நீங்கள் ஒரு அவகேடோ பழத்தை அந்த மிஷினில் காண்பித்தால் அந்த பழம் எவ்வளவு பழுத்துள்ளது என்பதை திரையில் காட்டுகிறது. இதன் மூலம் நீங்கள் பழுத்த பழம், 2,3 நாட்கள் கழித்து பழுக்கும் பழம் எது என்பதை பார்த்து வாங்க முடியும்.

* உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து விட்டு மொத்தமாக ஒரே இடத்தில் பில் போட வேண்டும் என்பதில்லை. உதாரணமாக நீங்க ஏதாவது பழத்தை எடுத்தால் அதை அங்கேயே பில் போடும் வசதி உள்ளது. அதே போல் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு அங்கேயே பில் போடலாம். இதற்காக அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு மொத்தமாக பில் போடும் கவுண்டரில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை.

இதையும் படியுங்கள்:
இனி போலி ஆஃபர்களுக்கு ஆப்பு: விரைவில் மாறப்போகும் ஆன்லைன் ஷாப்பிங் விதிகள்..!
LuLu Hypermarket Shenoy Nagar

* லூலூ ஹைப்பர்மார்க்கெட்டில் உள்ள பொருட்கள் அனைத்திற்கும் சுமார் 40 முதல் 50 சதவீதம் தள்ளுபடி (discount) உள்ளது. இந்த தள்ளுபடி எப்போதுமா அல்லது சில நாட்கள் மட்டுமா என்பது தெரியாது. அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமா அவ்வள சீக்கிரம் வந்து உங்க ஷாப்பிங்கை முடிச்சிடுங்க.

* ஒவ்வொரு பொருட்களின் விலையும் அந்த பொருட்களின் மேல் உள்ள கவுண்டர்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதனால் விலையை பார்த்து நீங்க அதை வாங்க முடியும்.

எப்படிச் செல்வது?

கடையானது மெட்ரோ நிலையத்திற்குள்ளேயே இருப்பதால், Chennai Metro Green Line மூலமாக நேரடியாக செனாய் நகர் (Shenoy Nagar) மெட்ரோ ஸ்டேஷனுக்கு டிக்கெட் எடுத்துச் செல்வதே மிக எளிதான வழி.

கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்த 1,000 வாகனங்களுக்கும் மேல் இடவசதி கொண்ட பிரம்மாண்ட பார்க்கிங் வசதி மெட்ரோ வளாகத்தில் செய்யப்பட்டுள்ளது.

போவதற்கு முன் கவனிக்க வேண்டிய ‘முக்கிய எச்சரிக்கை’!

* கடை திறந்து 4 நாட்களே ஆவதால், தற்போது மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதி வருகிறார்கள். அதாவது, சென்னையில் லூலூ ஹைப்பர்மார்க்கெட் (Lulu Hypermarket) திறக்கப்பட்டுள்ளதாலும், சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், இந்த கடையை பார்க்கும் அதீத ஆர்வத்தில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட மிக அதிகமாக உள்ளது.

* கடையில் 28 பில்லிங் கவுண்டர்கள் இருந்தாலும், கூட்ட நெரிசலால் பில் போடுவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக எந்த பொருளை பில் போடுவதற்கும் நீண்ட வரிசையில் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

* நீங்கள் நிதானமாகவும், எந்தவித பதற்றமும் இன்றி ஷாப்பிங் செய்ய விரும்பினால், இன்னும் சில நாட்கள் அல்லது சில வாரங்கள் கழித்துச் செல்வதே மிகச் சிறந்த முடிவாகும்.

* கூட்டம் அதிகமாக இருப்பதால் நெட்வொர்க் கிடைக்காமல் (Down) பில் போடும் இடத்தில் UPI பேமெண்ட் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் முன்எச்சரிக்கையாக கையில் கொஞ்சம் ரொக்கமாக பணம் எடுத்து செல்வது நல்லது.

* அல்லது வார இறுதி நாட்களைத் தவிர்த்து (Weekend), வார நாட்களின் (Weekdays) மதிய வேளையில் சென்றால் கூட்ட நெரிசலை ஓரளவுக்குத் தவிர்க்கலாம். அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், திங்கள் முதல் வியாழன் வரையிலான வார நாட்களில் செல்லலாம். இது சுற்றி பார்ப்பதற்கு நல்ல இடம்.

* மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, காலையில் ஹைப்பர்மார்க்கெட் திறந்தவுடன் (சுமார் 10:00 AM முதல் 1:00 PMக்குள்) சென்றால் நிதானமாகப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
திருச்சி பொன்மலை சந்தை: உழவர் சந்தை டூ தமிழ்நாட்டின் மிகப்பெரிய செல்லப்பிராணிகள் மார்க்கெட்!
LuLu Hypermarket Shenoy Nagar

* ஆரம்பகால நெரிசல் குறைந்த பிறகு சென்றால் வாகன நிறுத்துமிடம் (Parking) மற்றும் பில்லிங் கவுண்டர்களில் (Billing counters) நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com