

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை (Magalir Urimai Thogai Scheme) ரூ.1,000 நேற்று (அக்டோபர் 15) மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் (செப்டம்பர்) ரூ.1,000 பெற்ற பயனாளிகள் பலர் தங்களுக்கு தற்போது வரை பணம் வரவு வைக்கப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
கடந்த திமுக ஆட்சியில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியுள்ள குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தை தொடர்ந்து இந்த திட்டம் மற்ற மாநிலங்களிலும் தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டு, வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் விஜய்.
அந்த வகையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ளது. ஆனால், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி இதுவரை மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 உயர்த்தி வழங்கப்படவில்லை. குடும்ப தலைவிகளும் ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2,500-ஆக உயர்த்தி வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் திட்ட மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தவெக ஆட்சி அமைந்து தற்போது வரை குடும்பத் தலைவிகளுக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டதை போல் மாதம் ரூ. 1,000 மட்டுமே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 நேற்று (அக்டோபர் 15) மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம், அதாவது செப்டம்பர் மாதம் ரூ.1,000 பெற்ற பயனாளிகள் பலரும் தங்களுக்கு தற்போது வரை பணம் வரவு வைக்கப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பெண் பயனாளிகள் யாரும் நீக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், தற்போதைய அக்டோபர் மாதத்திற்கான உரிமைத்தொகை உங்கள் கணக்கிற்கு இன்னும் வராமல் இருப்பதற்கு அல்லது தாமதமாவதற்கு பின்வரும் காரணங்கள் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
பொதுவாக தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்குள் தகுதியான பயனாளிகளின் வங்கித் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இந்த மாதம் சில பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படாததற்கு ஒருவேளை வங்கியின் சர்வர் கோளாறு காரணமாக இருக்கலாம். அரசு தரப்பில் இருந்து நிதி விடுவிக்கப்பட்டாலும், லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் பணம் அனுப்பப்படுவதால், வங்கிகளின் சர்வர் நெரிசல் காரணமாக உங்கள் கணக்கிற்குப் பணம் வந்து சேர 1 முதல் 2 நாட்கள் கூடுதலாக ஆகலாம்.
திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி பயனாளிகளின் தகுதி நிலை, குடும்ப வருமானம், நில விவரங்கள் மற்றும் Dynamic தரவுகள் தொடர்ந்து டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தாலோ அல்லது உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அங்கீகாரத்தில் (Aadhaar Seeding/Authentication) ஏதேனும் சிக்கல் இருந்தாலோ தற்காலிகமாகப் பணம் நிறுத்தி வைக்கப்படலாம்.
வங்கிக் கணக்கு ஆதார் இணைப்பு (Aadhaar seeding), e-KYC சரிபார்ப்பு அல்லது ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் தொகை தற்காலிகமாக தடைபடலாம். உடனே உங்களது வங்கியை தொடர்பு கொண்டு இதுகுறித்து கொள்ளுங்கள்.
குறைகளை நிவர்த்தி செய்து, நீங்கள் தகுதியானவராக இருந்தால் அடுத்தடுத்த மாதங்களில் நிலுவைத் தொகையுடன் சேர்த்து வரவு வைக்கப்படும்.
அதாவது, இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை வராதவர்களுக்கு, அடுத்த மாதங்களில் வர வாய்ப்புள்ளது.
உங்களுக்கு இன்னும் பணம் வரவில்லை என்றால், சமூக ஊடகப் பதிவுகளைப் பார்த்து குழப்பமடையாமல், அதிகாரப்பூர்வமாக உங்களது கணக்கு நிலையை ஆன்லைனில் சரிபார்க்கலாம்:
நீங்கள் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட போர்ட்டல் (kmut.tnega.org) பக்கத்திற்குச் சென்று, 'பயனாளிகள் உள்நுழைவு' (Beneficiary Login) பிரிவில் லாகின் செய்து, உள்ளே நுழைந்தவுடன், உங்கள் சுயவிவரப் பக்கத்தில் 'வழங்கப்பட்ட நிலை' (Payment Status) என்ற பகுதி இருக்கும்.
அதை கிளிக் செய்து, அக்டோபர் மாதத்திற்கான ரூ.1000 தவணைப் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுவிட்டதா (Success) அல்லது என்ன நிலையில் உள்ளது என்பதைத் துல்லியமாகப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.