

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களைக்கட்டியுள்ளது. கூட்டணியின்றி எப்போதும் தனித்து தேர்தல் சந்திக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், இன்று (மார்ச் 19) 462 பக்கங்களை கொண்ட விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு சில முக்கிய அம்சங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.
தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்படும். நாம் தமிழர் அரசு ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கவனத்தில் கொண்டு அன்பான சர்வாதிகார ஆட்சி முறையை கடைபிடிக்கிறது.
நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும், சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசிற்கு உண்டு, என்கிற வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வரப் பாடுபடுவோம்.
தமிழ்நாட்டின் நிர்வாக செயல்பாடுகளுக்காக 5 தலைநகரங்கள் அமைக்கப்படும், அவை சென்னை, திருச்சி, கோவை, குமரி, மதுரை ஆகியன.
மாநில எல்லைக்குள் பயணிக்கும் தொடர் வண்டி நிர்வாகத் துறையினை, நாம் தமிழர் அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டமன்றம் மூலம் கையகப்படுத்தும்.
நீதிமன்ற மேலாண்மையைக் குறைத்து, மக்கள் உணர்வுகளுக்கு, மக்களாட்சிக்கு மதிப்பளிக்கக்கூடிய, உரிய சட்ட மாற்றங்களைக் கொண்டுவரத் தகுந்த முயற்சிகளை முன்னெடுப்போம்.
மாநில உயர்நீதிமன்றத்தில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவரே தலைமை நீதிபதியாக இருக்கச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.
சென்னையில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தரக் கிளையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழே இருக்கும்.
குடிநீர் என்பது விற்பனைக்கு அல்ல, நீர் என்பது உலக உயிர்களின் உயிர் தேவை, அதன் விற்பனையை தடை செய்கிறது.
நமது நீர் வளத்தினை சேமித்து பாதுகாக்கும் பொருட்டு புதிய நீர் கொள்கை, மழை நீர் மறை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும்.
ஏரிகள், குளங்கள், ஆறுகள், நீர்நிலைகள் ஆகியவற்றில் கலக்கும் கழிவுநீர் முற்றிலும் தடுக்கப்படும்.
புதிய ஏரிகளுக்கு ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், குந்தவை நாச்சியார், நம்மாழ்வார் போன்ற முன்னோர்களின் பெயர் சூட்டப்படும்.
மரபு நெல் பயிரிடுவோர்களுக்கு அரசு தரப்பில் அனைத்து சலுகைகளையும் வழங்கி மானியங்களும் வழங்கப்படும். தேசிய நெல் வகைகள் அனைத்தையும் இயற்கை வேளாண் முறையில் விளைவிப்பதற்கான அனைத்து ஆதரவையும் அரசு வழங்கும்.
ஐந்தாண்டு காலத்திற்குள் ரசாயன பூச்சிக்கொல்லிகள் அனைத்தையும் முற்றிலும் தடை செய்யப்படும், அதற்கு மாற்றாக இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை உருவாக்கி வேளாண் குடிகளுக்கு வழங்குவோம்.
ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானம் இல்லை, வருமானம், வெகுமானம் கொண்ட அரசு பணியாக்கப்படும்.
ஜெர்சி போன்ற வெளிநாட்டு பசு வகைகளை முற்றிலும் தடை செய்துவிட்டு, உள்நாட்டு பசு வகைகளை திட்டமிட்டு பெருக்குவோம்.
பொருளாதார வளமிக்க கழுதை வளர்ப்பு ஊக்கு விக்கப்படும்.
நாம் தமிழர் ஆட்சியில் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும். இனி தமிழ்நாட்டில் படிக்காதவர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
உடல்நலம் என்பது பணம் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல , ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை, அது நாம் தமிழர் அரசின் கடமை.
மருத்துவ படிப்புகள் அனைத்தும் எளிய தமிழில் கற்பிக்கப்படும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் தரம் வாய்ந்த விளையாட்டு திடல்கள் அமைத்து , பயிற்சியாளர்கள் ஊராட்சி அளவிலேயே அமர்த்தப்படுவார்கள்.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் சரி பாதி வேலை வாய்ப்புகள் பெண்களுக்கு வழங்கப்படும்.பெண்களுக்கு தனித்தொகுதிகள் உருவாக்கப்படும்.
திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு மருத்துவ உதவிகள், மனநல அறிவுரைகள் மற்றும் பாலின அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றை இலவசமாக அரசாங்கமே வழங்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.
விவசாயம் சார்ந்த தற்சார்பு பொருளாதாரம் கொண்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.
ஊழல் குற்றச்சாட்டுகள், நெறிமீறல் குறித்து புகார் அளிப்பவர்களின் பெயர் வெளியே தெரியாதபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.