மக்களே உஷார்..!! இந்த மருந்துகளால் பார்வையே பறிபோகுமாம் - FDA எச்சரிக்கை..!

உடல் எடை குறைப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் சில மாத்திரைகளால் பார்வையே பறிபோகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
GLP-1|எடை குறைப்பு
GLP-1|எடை குறைப்புimage credit-mirror.co.uk
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

உடல் எடை குறைப்பு மற்றும் நீரிழிவு நோய்க்காகப் பயன்படுத்தப்படும் GLP-1 (Glucagon-Like Peptide-1) வகை மருந்துகளால் (Ozempic, Wegovy, Mounjaro மற்றும் Zepbound போன்றவை) அரிய மற்றும் நிரந்தர பார்வை இழப்பு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

ஆகையால், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) உட்பட பல்வேறு மருத்துவ அமைப்புகள், பிரபலமான GLP-1 வகை மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம், அவர்களுடைய மருந்து லேபிள்களில் (Labels), ‘NAION’ (Non-Arteritic Anterior Ischemic Optic Neuropathy) எனப்படும் இந்த அரிய பார்வை இழப்பு ஆபத்து குறித்த எச்சரிக்கையைத் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளன.

நோவோ நோர்டிஸ்க் (Novo Nordisk) நிறுவனத்தின் Ozempic, Wegovy, Rybelsus மற்றும் எலி லில்லி (Eli Lilly) நிறுவனத்தின் Mounjaro, Zepbound உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட GLP-1 வகை மருந்துகளின் பாதுகாப்புப் பிரிவிலும் இந்த எச்சரிக்கை சேர்க்கப்பட வேண்டும். தற்போது சந்தையில் உள்ள அனைத்து GLP-1 மருந்துகளுக்கும் இது பொருந்தும்.

இந்த மருந்துகளைப் பயன்படுத்துவோருக்கு NAION எனப்படும் பாதிப்பு அல்லது "கண் பக்கவாதம்" (Eye stroke) ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

NAION என்பது கண்ணிலிருந்து மூளைக்குச் சிக்னல்களைக் கொண்டு செல்லும் பார்வை நரம்பிற்குச் (Optic nerve) செல்லும் இரத்த ஓட்டம் திடீரெனக் குறைவதால் ஏற்படும் பாதிப்பாகும். இதனை மருத்துவர்கள் "கண் பக்கவாதம்" (Optic nerve stroke) என்றும் குறிப்பிடுகின்றனர். அதாவது, கண் நரம்புகளுக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, ​​நரம்புகளுக்குச் செல்ல வேண்டிய ஆக்சிஜன் தடைபடுவதால் இந்தப் பாதிப்பு உண்டாகிறது.

இது பெரும்பாலும் விழித்து எழும் போது (Morning) மங்கலான அல்லது திடீர் பார்வை இழப்பாகத் தென்படும். இந்த பாதிப்பினால், ஒரு கண்ணில் வலி ஏதுமின்றி பார்வைத்திறன் குறையக்கூடும்; இது நிரந்தரமான இழப்பாகவும் மாற வாய்ப்புள்ளது என்று FDA தெரிவித்துள்ளது.

சுமார் 1,34,253 நோயாளிகள் பங்கேற்ற 126 மருத்துவப் பரிசோதனைகளை FDA ஆய்வு செய்தது. இதில் GLP-1 மருந்துகளை உட்கொண்டவர்களில் ஆண்டுக்கு 1 லட்சம் பேரில் சராசரியாக 6.4 பேருக்கும், மற்ற மருந்துகள் அல்லது மருந்துப்போலி (Placebo) எடுத்தவர்களில் 3.8 பேருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் இந்த மருந்துகள்தான் நேரடியாகக் கண் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று FDA மற்றும் அமெரிக்க கண் மருத்துவ அகாடமி' (American Academy of Ophthalmology) குறிப்பிட்டுள்ளன. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep apnea) உள்ளவர்களுக்கு ஏற்கனவே இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
உடல் பருமன் பெரும் அச்சுறுத்தலா? லான்செட் ஆணைய அறிக்கை!
GLP-1|எடை குறைப்பு

"நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு GLP-1 மருந்துகள் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகின்றன. எனவே, நோயாளிகளுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது இதுதான்.

உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் மருந்துகளை நிறுத்தாதீர்கள். ஒருவேளை, ஒரு கண்ணில் திடீரென, வலி ​​ஏதுமின்றி பார்வைத்திறன் குறைவதை உணர்ந்தால், உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுகுங்கள்" என்று அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

NAION-ல் ஏற்படும் பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய இதுவரை எந்தச் சிகிச்சையும் கண்டறியப்படவில்லை. 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே, கண் நரம்புகளில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளுக்கு இதுவே மிக முக்கியமான காரணமாக உள்ளது என்று அந்த அகாடமி தெரிவிக்கிறது.

மிகவும் பிரபலமான உடல் எடை குறைப்பு மருந்துகளில் ஒன்றான Wegovy-ஐத் தயாரிக்கும் 'நோவோ நோர்டிஸ்க்' (Novo Nordisk) நிறுவனம், தற்போதைய தரவுகள் "காரண-விளைவுத் தொடர்பை (cause-and-effect relationship) உறுதிப்படுத்தவில்லை" என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒபிசிட்டி (உடல் பருமன்) மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்காக GLP-1 மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு, அந்த மருந்துகளைத் தவிர்த்து, ஏற்கனவே NAION பாதிப்பு ஏற்படுவதற்கான பிற ஆபத்துக் காரணிகளும் இருக்கலாம் என்பதால், சில ஆய்வுகளை மதிப்பீடு செய்வதில் சவால்கள் இருந்ததாக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

உடல் பருமன்
உடல் பருமன்AI image

GLP-1 மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு ஏன் இந்த கண் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது என்று இன்னும் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) குறிப்பிட்டுள்ளது.

இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான் (சுமார் 1 லட்சம் பேரில் 6 பேர் வரை என்ற அளவில் மிகக் குறைவான ஆபத்து). எனினும் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் அல்லது பிற கண் நரம்புப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஆபத்து சற்று அதிகமாக இருக்கலாம்.

இந்த மருந்துகளில் ஏற்கனவே கணைய அழற்சி (pancreatitis) மற்றும் பித்தப்பை நோய் உள்ளிட்ட பல உடல்நலப் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பல GLP-1 மருந்துகளில் முக்கிய உட்பொருளாக உள்ள 'செமாக்ளுடைடு' (semaglutide) மருந்தைப் பயன்படுத்தும்போது, ​​குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகள் பொதுவாகக் காணப்படுகின்றன.

கடந்த ஆண்டு, 'ஐரோப்பிய மருந்துகள் முகமை' (European Medicines Agency)-யின் பாதுகாப்புப் பிரிவு, செமாக்ளுடைடு உட்கொள்பவர்களில் 10,000 பேரில் ஒருவர் NAION பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயிடம் அலட்சியப்படுத்தினால் என்னவாகும்? உடலில் நடக்கும் விபரீதம்!
GLP-1|எடை குறைப்பு

அதேசமயம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 17,000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், செமாக்ளுடைடு மருந்தை உட்கொள்பவர்களுக்கு, அதை உட்கொள்ளாதவர்களை விட 'நையான்' (NAION) கண் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கவனிக்க வேண்டிய அறிகுறிகள் :

இந்த மருந்துகளைப் பயன்படுத்துபவர்களுக்குக் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்:

இந்த மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் திடீரெனப் பார்வை மங்குதல் அல்லது மாற்றங்களை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பொதுவாக ஒரு கண்ணில், வலியின்றி திடீரெனப் பார்வை குறைவது அல்லது இழப்பு ஏற்படுவது, பலர் காலையில் தூங்கி எழுந்தவுடன் இதனை உணர்ந்தால், பார்வை மங்கலாகத் தெரிவது, பார்வையின் ஒரு பகுதி மறைவது அல்லது கரும்புள்ளிகள் (Blind spots) தெரிவது, பொருட்களின் நிறங்கள் மங்கலாகவோ அல்லது மாறுபட்டோ தெரிவது உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாகக் கண் மருத்துவரை (Ophthalmologist) அணுகிப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

எவ்வித அறிகுறிகளும் இல்லாத நிலையில், மருத்துவரின் ஆலோசனையின்றி நீங்களாகவே மருந்துகளை நிறுத்தக் கூடாது. ஏற்கனவே ஒரு கண்ணில் NAION பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மற்றொரு கண்ணிலும் ஏற்படும் அபாயம் உள்ளதால் மருந்தைத் தொடர்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அச்சுறுத்தும் நிபா வைரஸ் : காய்ச்சல், மூச்சுத்திணறல் இருக்கிறதா..? உடனே மருத்துவரை அணுகுங்கள்..!
GLP-1|எடை குறைப்பு

நீரிழிவு நோயாளிகள் மற்றும் அதிக எடை குறைப்பு மருந்துகளை உட்கொள்வோர் உடனடியாக கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.