

இனி வங்கிக் கணக்கு இல்லாமலேயே யாருக்கு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பவும் மற்றும் பெறவும் முடியும். இந்த புதிய வசதியை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது. அதற்கான விதிமுறைகள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க...
வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் எளிதாகப் பணம் அனுப்பவும் பெறவும் உதவும் வகையில் உள்நாட்டுப் பணப் பரிமாற்றத்திற்கான (Domestic Money Transfer - DMT) ஒருங்கிணைந்த புதிய விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. அதன்படி, இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு இனி வங்கிக் கணக்கு இல்லையென்றாலும், பணத்தைப் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. நவம்பர் 11 முதல் அமலுக்கு வந்துள்ள இந்தப் புதிய வழிகாட்டுதல்கள், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அல்லது ஆதார் மற்றும் பான் கார்டு போன்ற முழுமையான ஆவணங்கள் இல்லாதவர்கள் குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வங்கிச் சேவை குறைவாக உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள இந்த புதிய நடைமுறை மூலம், பணம் அனுப்புவதற்கு வங்கிக் கணக்கு கட்டாயம் என்ற நிலை மாறிவிட்டது. இனி வங்கிக் கணக்கு இல்லாமலேயே பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். இதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி கேஷ் பே-இன் (Cash Pay-in) மற்றும் கேஷ் பே-அவுட் (Cash Pay-out) ஆகிய இரண்டு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பணம் அனுப்பும் முறைகள் (Cash Pay-in):
* ரொக்கப் பணப் பரிமாற்றச் சேவையின் கீழ், உங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லாவிட்டாலும், மற்றொரு நபரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணத்தை அனுப்ப நீங்கள் ரொக்கத்தை டெபாசிட் செய்யலாம்.
உதாரணமாக நீங்கள் ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும். ஆனால் உங்களுக்கு வங்கி கணக்கு இல்லை. ஆனாலும் இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நடைமுறை மூலம், நீங்கள் தாரளமாக பணம் அனுப்ப முடியும். நீங்கள் ஏதாவது ஒரு வங்கி கிளைக்கு நேரடியாகச் சென்று, ரொக்கமாகப் பணத்தைச் செலுத்த வேண்டும். அந்த வங்கி நீங்கள் கொடுத்த பணத்தை NEFT மூலம் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கும். இந்த முறையில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.50,000 வரை அனுப்ப முடியும். நீங்கள் குறிப்பிட்ட வங்கி என்று இல்லாமல் எந்த வங்கி கிளைக்குச் சென்றும் பணம் அனுப்ப முடியும்.
* உதாரணமாக, ஒரு வணிகப் பிரதிநிதி (Business Correspondent - BC) மூலமாகவோ அல்லது ஏடிஎம் (ATM) வழியாகவோ மற்றவர்களின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பும்போது, ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ₹5,000 வரை மட்டுமே அனுப்ப முடியும்;
மேலும், ஒரு நபர் மாதத்திற்கு அதிகபட்சம் ₹25,000 வரை மட்டுமே பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்படும்.
பணம் பெறும் முறைகள் (Cash Pay-out):
* இந்த வசதி வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து வங்கிக் கணக்கு இல்லாத ஒருவருக்கு நீங்கள் பணம் அனுப்பினால், பெறுநர் அந்தப் பணத்தை ஏடிஎம், பிசினஸ் கரஸ்பாண்டன்ட் (BC) அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலம் ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
உதாரணமாக, உங்களுடைய மகன் அல்லது உறவினர்கள் உங்களுக்கு பணம் அனுப்ப நினைக்கிறார். ஆனால், கிராமத்தில் வசிக்கும் உங்களிடம் வங்கிக் கணக்கு இல்லை என்றால் அவர்கள் அனுப்பும் பணத்தை, நீங்கள் பெற முடியும். உங்கள் மகனின் வங்கிக் கணக்கிலிருந்து வங்கி பணத்தை எடுத்து, அதை உங்களுக்கு ரொக்கமாக வழங்கும்.
இந்தத் தொகையை நீங்கள் ஏடிஎம் ATM) மூலமாகவோ அல்லது உங்கள் பகுதியில் உள்ள வங்கி முகவர் மூலமாகவோ ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளலாம். வணிகப் பிரதிநிதி என்பவர், வங்கி சார்பாக அந்தந்த கிராமம் அல்லது பகுதியில் பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் நபர் ஆவார்.
* இவ்வாறு ரொக்கமாகப் பணம் பெறும்போது, ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ₹10,000 மற்றும் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ₹25,000 வரை மட்டுமே ஒரு பயனாளி பெற முடியும்.
பண வரம்புகள்:
பணம் சரியான நபரைச் சென்றடைவதை உறுதி செய்யவும், மோசடிகளைத் தவிர்க்கவும் இந்திய ரிசர்வ் வங்கி பணம் பெறுவதிலும், அனுப்புவதிலும் சில வரம்புகளை நிர்ணயித்துள்ளது.
அதன்படி, ஒரு நேரத்தில் அதிகபட்சமாக ரூ. 10,000 ரொக்கமாகவும், ஒரு மாதத்தில் மொத்தம் ரூ. 25,000 வரை ரொக்கமாகப் (Cash Pay-out) பெற முடியும்.
அதேசமயம் பணம் அனுப்புபவர் ஒரு நேரத்தில் அதிகபட்சம் ரூ. 50,000 வரை ரொக்கமாகச் செலுத்தலாம்.
ஆனால் வங்கி முகவர்கள் (Business Correspondents - BC) அல்லது ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் மூலம் ரொக்கமாகப் பணம் செலுத்தி ஒருவரின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பினால், ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ₹5,000 வரையும், ஒரு நபர் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ₹25,000 வரை மட்டுமே மட்டுமே அனுப்ப முடியும்.
முக்கிய விதிமுறைகள்:
வங்கிக் கணக்கு இல்லாமல் பணம் அனுப்பினாலும் அல்லது பெற்றாலும், சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம், மொபைல் எண், மற்றும் சுய சான்றொப்பமிட்ட அதிகாரப்பூர்வ அடையாள ஆவணத்தை (Officially Valid Document - OVD) வழங்கிப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் OTP போன்ற கூடுதல் அங்கீகாரம் (Additional Factor of Authentication - AFA) மூலம் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உங்கள் விவரங்கள் IMPS/NEFT பரிவர்த்தனை செய்தியில் சேர்க்கப்பட்டு, அது 'பணம் சார்ந்த பரிமாற்றம்' (cash-based transfer) என அடையாளம் காணப்படும். மேலும், 'வருமான வரிச் சட்டம், 2025'-ன் கீழ் ரொக்க வைப்புத்தொகை தொடர்பான வருமான வரி விதிகளையும் வங்கிகள் பின்பற்ற வேண்டும்.
பணப் பரிமாற்ற சேவைகளுக்கான நியாயமான கட்டணங்களை வங்கிகளும், வங்கி அல்லாத நிறுவனங்களும் வசூலிக்கும். வாடிக்கையாளர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால், 'RBI ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டம், 2026' (RBI-Integrated Ombudsman Scheme, 2026)-ன் கீழ் புகார் அளிக்கலாம்.
பணமோசடிகளைத் தடுக்க, சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.