

அக்டோபர் 1 முதல், சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான பல முக்கிய விதிகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாக உள்ளன. இந்த முக்கிய நிதித்துறை மாற்றங்கள், சாதாரண குடிமக்களின் பணப்பையையும் ஆவணங்களையும் நேரடியாகப் பாதிக்கும். இந்தப் புதிய மாதத்தின் தொடக்கத்துடன், எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விநியோகம், வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து (NRIs) சொத்து வாங்குவதற்கான டிடிஎஸ் (TDS) விதிகள் மற்றும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களுக்கான பதிவுக் கட்டணங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வரும்.
பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலைகளியல் மாற்றம் இருக்குமா?:
ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் வணிக பயன்பாட்டு எல்பிஜி (LPG) சிலிண்டர் விலைகளை மாற்றியமைக்கின்றன. அதன்படி கடந்த செப்டம்பர் 1-ம்தேதி, 19 கிலோ எடைகொண்ட வணிக LPG சிலிண்டரின் விலை ரூ.10.50 உயர்ந்து ரூ.2,916.50 ஆக உள்ளது. ஆனால் வீட்டு உபயோக LPG சிலிண்டர்களின் விலைகளில் மாற்றம் செய்யவில்லை. இந்நிலையில் வரும் அக்டோபர் 1-ம்தேதிபெட்ரோல், டீசல், சிஎன்ஜி, பிஎன்ஜி, ஏடிடி மற்றும் எல்பிஜி போன்ற பெட்ரோலியப் பொருட்களின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.
சிலிண்டர் விநியோக முறைகளில் OTP சரிபார்ப்பு:
எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோக விதிமுறைகளில் OTP சரிபார்ப்பும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி, சமையல் கேஸ் பெறும்போது முன்பதிவு ரசீதைக் காண்பிப்பது மட்டும் போதாது. முன்பதிவு செய்த பிறகு, வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். சிலிண்டரை பெற்றுக்கொள்ளும்போது அந்த OTP-யை விநியோகஸ்தரிடம் தெரிவிக்க வேண்டும். போலி முன்பதிவுகள் மற்றும் பதிவு செய்யப்படாத சிலிண்டர் விநியோகம் போன்ற முறைகேடுகளைத் தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கேஸ் சிலிண்டர் பயோமெட்ரிக்:
மானிய விலையில் எல்பிஜி (LPG) சிலிண்டர் பெற [கேஒய்சி மற்றும் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் (BAA)] கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைச் செய்யாவிட்டால் மானியம் கிடைக்காமல் சந்தை விலையில் சிலிண்டர் வாங்க நேரிடும். ஏற்கனவே பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்த 27.43 கோடி நுகர்வோர் (89.9%) மீண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. இன்னும் உங்கள் கேஒய்சி (KYC) சரிபார்ப்பை நீங்கள் முடிக்கவில்லை என்றால், உடனடியாக உங்கள் எரிவாயு முகவரை (Gas Agency) தொடர்புகொள்வது நல்லது.
SBI புதிய கட்டணங்கள்:
எஸ்பிஐ வங்கியில் கிளை வழியாக தொடஙகப்பட்ட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளில் ஒரு மாதத்தில் 4 முறை வரை பணம் எடுப்பது இலவசமாகும். 5-வது முறை முதல் ஒவ்வொரு பணம் எடுக்கும் பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய கட்டணம் அக்டோபர் 1-ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. டிஜிட்டல் முறையிலான அனைத்து பரிவர்த்தனைகளும் எந்த கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து இலவசமாக இருக்கும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளளது.
பெட்ரோல் பங்குகளில் UPI சேவை நிறுத்தம்!
அக்டோபர் 15 அல்லது 16 முதல் பெட்ரோல் பங்குகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம் (MDR - Merchant Discount Rate) விதிக்கப்படுவதால், சில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் UPI சேவையை நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளனர். பெட்ரோல் பங்க் வியாபாரிகளின் லாப விளிம்பு மிகக் குறைவாக (0.5%க்கும் குறைவு) இருப்பதால், இந்த கூடுதல் செயலாக்கக் கட்டணத்தை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என All India Petroleum Dealers Association (AIPDA) சங்கம் தெரிவித்துள்ளது. UPI சேவையைத் தவிர்த்து, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு (Debit/Credit Card) வழியிலான பணம் செலுத்தும் முறைகள் வழக்கம்போல தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
UPI கட்டணங்கள்- புதிய விதிகள்:
அக்டோபர் 15 முதல் ரூ.2000க்கு மேல் உள்ள வணிகர்களின் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத (8 ரூபாய்) கட்டணத்தை மத்திய அரசு விதித்துள்ளது.
ரூ.2000 அல்லது அதற்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை. தனிநபர் பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது இலவசம். ரூ.75000 மற்றும் அதற்கு மேற்பட்டட பரிவர்த்தனைகளுக்கு ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
UPI QR Code மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சிறுவணிகர்களுக்கு கட்டணம் இல்லை. ரெயில்வே, எரிபொருள் விற்பனை, தொலைத்தொடர்பு மற்றும் காப்பீடு போன்ற சேவைகளுக்கு ரூ.2,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் நிலையாக ரூ.5 கட்டணம் பொருந்தும்.
மாறும் FD விதிகள்:
பெரிய தொகைக்கான ஃபிக்சட் டெபாசிட்டுகளின் (Bulk Fixed Deposits) வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது மற்றும் தினமும் வெளிப்படையாக அறிவிப்பதில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. வங்கிகள் தங்கள் மொத்த டெபாசிட் வட்டி விகிதங்களை ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 10:00 மணிக்கு (கடைசி அவகாசம் 10:10 மணிக்குள்) தங்கள் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிட வேண்டும். இந்த புதிய விதிகள் பெருந்தொகை வைப்புத்தொகைகளுக்கு மட்டுமே பொருந்தும்; சில்லறை எஃப்.டி (Retail FDs) முதலீட்டாளர்களின்Existing வட்டி விகிதங்களில் நேரடி தாக்கம் இருக்காது.
பிறப்பு, இறப்பு சான்றிதழ் விதிகள்:
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தாமதமாகப் பதிவு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுக வேண்டியது உள்ளிட்ட புதிய கெடுபிடிகள் அமலுக்கு வருகின்றன.
வழக்கம்பேல பிறந்து அல்லது இறந்து 21 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்வது எப்போதும் போல எளிய முறையில் தொடரும்.
ஆனால் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து 1 ஆண்டுக்கு மேல் 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய, மாவட்ட ஆட்சியர் (District Magistrate), கோட்டாட்சியரிடமும் (Sub-Divisional Magistrate), 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமாகப் பதிவு செய்வதற்கு முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் (Judicial Magistrate First Class) உத்தரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தாமதமாகும் விண்ணப்பங்களின் உண்மைத்தன்மையை அதிகாரிகள் முழுமையாகச் சரிபார்த்த பின்னரே பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும்.
NRI சொத்து வாங்குவதற்கான TDS விதி:
என்ஆர்ஐ-யிடம் (NRI) இருந்து அசையா சொத்து வாங்கும் போது, குடியுரிமை தனிநபர்கள் TDS செலுத்த TAN தேவையில்லை என்ற புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது; PAN மூலமாகவே TDS செலுத்தலாம்.
அதாவது, அக்டோபர் 1, முதல் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் (NRI) அல்லது வசிப்பிடமற்றவர்களிடம் (Non-resident) இருந்து இந்தியாவில் சொத்து வாங்கும் வசிப்பவர்கள் (Resident Individuals) மற்றும் இந்து கூட்டுக்குடும்பத்தினர் (HUF) தனி TAN (Tax Deduction and Collection Account Number) பெற வேண்டிய கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது.
வாங்குபவர் என்ஆர்ஐ விற்பனையாளருக்கு படிவம் 132 (Form 132) மூலமான TDS சான்றிதழை வழங்க வேண்டும்.
குழந்தைகளுக்கான இலவச ஆதார் அப்டேட்:
குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் ஆதார் அப்டேட் (Mandatory Biometric Update) வரும் செப்டம்பர் 30 வரை முற்றிலும் இலவசமாகச் செய்யப்படுகிறது.
5 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள் தங்கள் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களை (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) புதுப்பிக்க வேண்டும். குழந்தைகள் 5 வயதை எட்டும்போதும், பின்னர் 15 வயதை எட்டும்போதும் இந்தப் புதுப்பிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் இந்த நடைமுறைக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் இதுவரை பயோமெட்ரிக் ஆதார் அப்டேட் முடிக்காதவர்கள் உடனே முடித்து விடுவது நல்லது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் :
ஜிஎஸ்டி (GST) கவுன்சில் கூட்டம் வரும் அக்டோபர் 7-ம்தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பெரிய அளவில் வரி விகித மாற்றங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது; மாறாக வரி நடைமுறை சீர்திருத்தங்கள் மற்றும் செயல்முறைகளை எளிதாக்குவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துவரி :
தமிழ்நாட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதிக்கான சொத்து வரி மற்றும் தொழில் வரியை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில், அக்டோபர் 1 முதல் நிலுவைத் தொகைக்கு தனி வட்டி (Penal Interest) வசூலிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.