

பாஸ்போர்ட் என்பது வெளிநாட்டு பயணத்திற்கான ஆவணம் மட்டுமே என்றும் அது குடியுரிமைக்கான சான்று அல்ல எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு ஜூன் 24-ல் கடவுச்சீட்டு ( passport )சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24 ஆம் தேதி தேசிய கடவுச்சீட்டு சேவை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது..
அந்த வகையில் நேற்று (ஜூன் 24) புது டெல்லியில் 14வது கடவுச்சீட்டு சேவை தின நிகழ்வு நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “கடவுச்சீட்டு (passport) என்பது ஒரு பயண ஆவணமே தவிர, குடியுரிமை ஆவணம் அல்ல. இந்தியர்கள் வெளிநாடுகளில் இருக்கும்போது அவர்களின் தேசியத்தை அது உறுதிப்படுத்துகிறது. ஒரு கடவுச்சீட்டு மிகுந்த ஆய்வுக்குப் பிறகே வழங்கப்படுகிறது. மேலும் அது பல அரசு நிறுவனங்களின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது,” என்று தெரிவித்துள்ளது தற்போது பேசப்படும் செய்தியாகி உள்ளது.
பாஸ்போர்ட் என்பது ஒரு நாட்டின் அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ அடையாள மற்றும் பயண ஆவணம் ஆகும். இது வெளிநாடுகளுக்கு செல்லவும், அங்கு தங்கவும் ஒருவரின் அடையாளம், குடியுரிமை ஆகியவற்றை உறுதி செய்யும் ஆவணம் ஆகும். அத்துடன் மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்பவும் பாஸ்போர்ட் முக்கியமாக தேவைப்படுகிறது.
ஒருவரது பாஸ்போர்ட்டில் அவரது ஒரிஜினல் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், இருப்பிட முகவரி,பாஸ்போர்ட் எண் வெளியிட்ட மற்றும் காலாவதி தேதி மற்றும் குடியுரிமை விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இதில் சிறு தவறு என்றாலும் பாஸ்போர்ட் கிடைப்பது தவறி வெளிநாடு செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் பாஸ்போர்ட் விஷயத்தில் அனைவரும் வெகு கவனமாக இருப்பது வழக்கம்.
கல்வி , பணி அல்லது மருத்துவம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்ல அவசியம் தேவைப்படும் பாஸ்போர்ட் இந்தியாவில் பொதுவாக சாதாரண குடிமக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட் , அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிற பாஸ்போர்ட், தூதரக மற்றும் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு சிவப்பு நிறுவனம் பாஸ்போர்ட் என மூன்று நிறங்களில் வகைப்படுத்தப்படுகின்றன.
இதன் அடிப்படையில் கிடைக்கும் பாஸ்போர்ட் என்பது சர்வதேச பயணத்திற்கான ஆவணம் மட்டுமே என்றும், அது குடியுரிமைக்கான முழுமையான சான்று அல்ல என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA)தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ஆவணத்தின் முதன்மை நோக்கம் ஒருவருக்கு வெளிநாடுகளில் சர்வதேச பயண வசதியை ஏற்படுத்தித் தருவதே தவிர, குடியுரிமை உரிமைகளை நிலைநாட்டுவது அல்ல என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய குடியுரிமை என்பது பிறப்பு, வம்சாவளி, பதிவு அல்லது இயற்கைமயமாக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் தீர்மானிக்கப்படும் ஒரு விஷயமாகும்.1967-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கடவுச்சீட்டு (Passports Act) சட்டத்தின்படி, பாஸ்போர்ட் வைத்திருப்பது குடியுரிமைக்கான உறுதியான ஆதாரம் என்று கருத இயலாது என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்தியக் குடியுரிமை (Citizenship Act, 1955) அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளின் அடிப்படையில். சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுவதாக கூறப்படுகிறது. நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆதார் போன்றவையும் குடியுரிமை சான்றாக முடியாது. ஆதார் அடையாளம் மற்றும் முகவரி சான்றாக மட்டுமே பயன்படும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெளிவாக கூறுகிறது. ஏற்கனவே ஆதார் ஒருவரது குடியுரிமையை நிரூபிக்கும் சான்று ஆகாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பான் (PAN) கார்டு வரித்துறை அடையாள ஆவணமாக மட்டுமின்றி பல இடங்களில் ஆதார ஆவணமாக பயன்படுத்தப்பட்டாலும் வாக்காளர் அட்டை (Voter ID) இதுவும்குடியுரிமை நிரூபிக்கும் இறுதி ஆவணம் என்று சட்டத்தில் கூறப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதுபோல் தான்
பாஸ்போர்ட் பல சூழ்நிலைகளில் வலுவான அரசு ஆவணமாக இருந்தாலும் குடியுரிமை தீர்மானிப்பு சட்டத்தின் கீழ் குடியுரிமை ஆவணமாக முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது மத்திய வெளியுறவுத்துறை.
இருப்பினும் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் குடியுரிமை மற்றும் பிறப்பு தொடர்பான ஆவணங்கள் நிலம் , கல்வி மற்றும் அரசு தொடர்பான சான்றுப் பதிவுகள், ஒரு வெளிநாட்டு நபர், சட்டப்படி ஒரு நாட்டின் குடியுரிமையைப் பெறும் நடைமுறையான நேச்சுரலைசேஷன் (naturalisation) சான்றுகள் ஆகியவை நமது குடியுரிமையை நிரூபிக்கும் என்கின்றனர்.
மேலும் இந்தியர்கள் வெளிநாட்டுத் துறைமுகங்கள் மற்றும் பிரதேசங்கள் வழியாகப் பயணம் செய்வதற்கும் இடமாற்றம் மேற்கொள்வதற்கும் உதவுவதே இக்கடவுச்சீட்டின் நோக்கமாகும் என்றும், குடியுரிமை உரிமைகளை உறுதிப்படுத்தும் பிற ஆவணங்களுடன் இதனை ஒப்பிடக்கூடாது என்றும் மத்திய வெளியுறவுத் துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் இந்தியத் தொழிலாளர்களை உலகப் பொருளாதாரத்துடன் இணைப்பதில் கடவுச்சீட்டுகள் வகிக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், வளர்ந்த தொழில் பொருளாதாரங்களைக் கொண்ட மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பானில் இந்தியக் குடிமக்கள் பாதுகாப்பான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவும் வகையில், அந்நாடுகளுடனான ஆள்சார் இடப்பெயர்வு மற்றும் பணிசார்ந்த ஒத்துழைப்பு முயற்சிகளை வரும் மாதங்களில் அரசு தீவிரப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளதாக குறிப்புகள் கூறுகிறது.
இனி பாஸ்போர்ட் என்பது சர்வதேச பயணத்தை எளிதாக்குவதற்கு அரசு வழங்கும் பயண ஆவணம் மட்டுமே என்றும், அது ஒருவரின் குடியுரிமைக்கான அசைக்க முடியாத சான்று அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here