

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை அரசியல் களத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தேர்தலுக்கு 5 மாதத்திற்கும் மேல் உள்ளதால், அரசியல் கட்சிகளுக்குள் இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கென தனியிடத்தைப் பிடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, அக்கட்சியின் தலைவர் விஜய் சமீபத்தில் புதுச்சேரியில் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவின் மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் மற்றும் மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் தவெக-வில் இணைந்தனர். இந்நிலையில் மேலும் சில அதிமுக நிர்வாகிகள் தவெக-வில் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது அதிமுகவிற்கு இழப்பாக கருதப்படும் நிலையில், நேற்றைய பொதுக்குழு கூட்டத்தில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்கும் எண்ணம் இல்லை என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதோடு வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 210 இடங்களைக் கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தவெக-வுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ் மீண்டும் இணைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தவெக இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பது, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் மற்றும் தேர்தல் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதோடு செங்கோட்டையன் தவெக-வில் இணைந்த பிறகு, நடக்கும் முதல் ஆலோசனை கூட்டம் இது என்பதால், கூட்டணி குறித்தும் ஆலோசனை செய்ய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் தவெக தலைமையில் வலிமையான கூட்டணி அமைந்தால், அது ஆளுங்கட்சி திமுக-விற்கு கடுமையான போட்டியாக இருக்கும் என டிடிவி தினகரன் இன்று தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், கட்சியை பலப்படுத்தும் நோக்கில் சில முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தவெக தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், உறுப்பினர் சேர்க்கையும் ஒருபுறம் நடந்து வருகிறது. அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் விஜய், சட்டமன்றத் தேர்தலை வலிமையான கூட்டணியுடன் எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
ஆட்சியில் பங்கு என்ற கொள்கையை தமிழ்நாட்டில் முழங்கிய தவெக-வின் அரசியல் நகர்வுகள், மற்ற கட்சிகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.