உங்ககிட்ட 'தமிழ்நாடு பாஸ்போர்ட்' இருக்கா? – 58 வரலாற்று இடங்களை சுற்றி பார்க்க அரிய வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் சுற்றுலா மற்றும் பாரம்பரிய இடங்களைக் குறிக்கும் 58 சிறப்பு முத்திரைகளுடன் கூடிய பிலாட்டலி பாஸ்போர்ட் விற்பனைக்கு வந்துள்ளது.
Philately Passport|பிலாட்டலி பாஸ்போர்ட்
Philately Passport|பிலாட்டலி பாஸ்போர்ட்AI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

பாஸ்போர்ட் என்றாலே வெளிநாட்டுப் பயணம் என்பதுதான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் வரலாறு, பாரம்பர்யம் மற்றும் சுற்றுலாத் தலங்களை வித்தியாசமான முறையில் அனுபவிக்கலாம் என்றால்..? அந்த அனுபவத்தையே உருவாக்கியிருக்கிறது இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ள 'பிலாட்டலி பாஸ்போர்ட்' (Philately Passport).

‘பிலாட்டலி பாஸ்போர்ட்’ (Philately Passport) என்பது தபால் தலை சேகரிப்பாளர்கள் (Philatelists) மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்திய அஞ்சல் துறை (India Post) அறிமுகப்படுத்தியுள்ள ஒரு பிரத்தியேக கையடக்க நினைவேடு புத்தகமாகும்.

வெளிநாடு செல்லும் பாஸ்போர்ட் (Passport) போல இது சர்வதேசப் பயணத்திற்கு அல்ல; மாறாக நீங்கள் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், கோயில்கள், பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் போன்ற சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க ஊக்குவிக்கும் நினைவுப் பதிவு. இந்த இடங்களை சுற்றிப்பார்க்க நேரில் செல்லும்போது அந்தந்தப் பகுதிகளில் உள்ள அஞ்சலகங்களில் பிரத்யேக வரைபட முத்திரைகளை (Permanent Pictorial Cancellations - PPC) வாங்கி இதில் பதிக்கலாம்.

அதாவது, நீங்கள் செல்லும் வரலாற்று மற்றும் சுற்றுலா இடங்களின் பயண நினைவுகளை தபால் தலைகள் மற்றும் சிறப்பு அஞ்சல் முத்திரைகள் மூலம் பதிவு செய்யும் ஒரு கலைப் பொக்கிஷமாகும்.

இந்தியாவில் முதன்முதலில் கடந்த 2026-ஆம் ஆண்டு கர்நாடக அஞ்சல் வட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டம், எதிர்பாராத அளவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. குறுகிய காலத்திலேயே ஆயிரக்கணக்கான பிலாட்டலி பாஸ்போர்ட்டுகள் விற்பனையானது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திலும் (அக்டோபர் 28) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. இதில் தமிழகத்தின் முக்கிய இடங்களைக் குறிக்கும் 58 சிறப்பு அஞ்சல் முத்திரைகள் பற்றிய தகவல்களும் இடமும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு 58 இடங்களையும் சுற்றிப் பார்த்து, 58 அஞ்சல் முத்திரைகளையும் சேகரிப்பதே இந்த பாஸ்போர்ட்டின் சிறப்பு.

அறிமுகமான முதல் நாளிலேயே தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் தபால் தலை சேகரிப்பாளர்கள் இந்த பாஸ்போர்ட்டை வாங்க வரிசையில் நின்றது இந்த முயற்சிக்கு கிடைத்த வரவேற்பை காட்டியது.

இது எப்படிச் செயல்படுகிறது?

குறிப்பிட்ட அஞ்சலகத்தில் நேரடியாக சென்று பணம் செலுத்தி புத்தகத்தை பெற வேண்டும்.

Passport
Passport

தமிழ்நாட்டின் முக்கியமான 58 பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்கள் இப்புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு இடத்திற்கும் அந்தப் பகுதியின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் தனித்துவமான "நிரந்தர வரைபட அஞ்சல் முத்திரை" (Permanent Pictorial Cancellation-PPCs) வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்குப் பயணம் செய்யும்போது, அங்குள்ள குறிப்பிட்ட தபால் நிலையத்திற்குச் சென்று ஒரு தபால் தலையை (Postage Stamp) வாங்கி இந்த பாஸ்போர்ட்டில் ஒட்ட வேண்டும் (உங்கள் பயணத்தின் நினைவாகச் சேர்த்துக்கொள்ளலாம்). அங்குள்ள தபால் அதிகாரி, அந்த இடத்திற்குரிய பிரத்தியேக முத்திரையை அதன் மேல் பதித்துத் தருவார்.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்களே உஷார்... குழந்தைகளின் பாஸ்போர்ட் விதியில் அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு!
Philately Passport|பிலாட்டலி பாஸ்போர்ட்

டிஜிட்டல் நினைவுகளைத் தாண்டி, உங்களின் பயணங்களை ஒரு நிரந்தரமான அஞ்சல் அடையாளமாக மாற்றுவதும், தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை மீண்டும் மக்களிடம் ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.

விலை மற்றும் கிடைக்கும் இடங்கள்:

தமிழ்நாடு பிலாட்டலி பாஸ்போர்ட்டின் விலை ரூ.650 ஆகும்.

சென்னை தலைமை அஞ்சலகம் (Chennai GPO) மற்றும் முக்கிய அஞ்சல் தலைப் பணியகங்கள் (Philatelic Bureaus) அதாவது அண்ணா சாலை (Anna Road), புதுச்சேரி, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய ஆகிய இடங்களில் உள்ள பிலாட்டலிக் பீரோக்களில் (Philatelic Bureaus) நேரடியாக இதனை பெற்றுக் கொள்ளலாம்.

பிலாட்டலி பாஸ்போர்ட் வெறும் தபால் தலை சேகரிப்பாளர்களுக்கான புத்தகம் மட்டுமல்ல; மக்களிடையே பயணம், வரலாறு, கலாசாரம் மற்றும் நினைவுகளை ஒரே இடத்தில் இணைக்கும் ஒரு புதிய சுற்றுலா முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் ரோபோக்கள் கட்டிய அஞ்சலகம்!
Philately Passport|பிலாட்டலி பாஸ்போர்ட்

மேலும் வெளிநாடு செல்லாமல், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையையும் புதிய பார்வையில் சுற்றிப்பார்த்து அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இது நிச்சயமாக ஒரு புதுவிதமான, வித்தியாசமான பயண அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.