

கமிஷன் ஆசையால் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் உங்களுக்கு ஜெயில் தண்டனையை வாங்கித் தரலாம் என்று சொன்னால் நீங்க நம்புவீங்களா. RBI எச்சரிக்கைக்கும் Money Mule ஆபத்து என்னவென்று அறிந்து கொள்ளலாம் வாங்க..
தமிழ்நாடு முழுவதும் ரூ. 545.27 கோடி அளவிலான “மணி மியூல்” (Money Mule) ஆன்லைன் வங்கி கணக்கு மோசடி தொடர்பாக, 48 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் பதிவான 9,804 புகார்களின் அடிப்படையில் இந்த மாபெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே பதியப்பட்ட 601 வழக்குகளுடன் மேலும் 157 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகளிடமிருந்து 204 மொபைல் போன்கள், 185 சிம் கார்டுகள், 114 வங்கி கணக்கு புத்தகங்கள், 29 காசோலை புத்தகங்கள், 73 ஏடிஎம் கார்டுகள், 4 லேப்டாப்கள் மற்றும் ரூ.1.02 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு உங்களது வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டுகள் அல்லது செக் புத்தகங்களை மற்றவர்களிடம் பகிரவோ, விற்கவோ வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்தி கொள்கிறோம். அதற்கு மாறாக உங்களுக்கு பணம் தருவதாக யாராவது சொல்கிறார்களா? அப்படி என்றால் எச்சரிக்கையாக இருங்கள் என்று RBI அறிவுறுத்தி இருக்கிறது.
மற்றவர்களின் சட்டவிரோதப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கு மூலம் மாற்றித் தருவது மணி மியூல் எனப்படும். இது எளிதாகச் சம்பாதிக்கலாம் என்ற ஆசையைக் காட்டி ஏமாற்றும் ஒரு சைபர் மோசடியாகும். இது தெரிந்தோ அல்லது தெரியாமலோ அல்லது கமிஷனுக்காகவோ உங்கள் கணக்கை மற்றவர்களுக்குப் பயன்படுத்தக் கொடுத்தால், சைபர் கிரேம் போலீசாரால் கைது செய்யப்படுவதுடன், கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் சந்திக்க நேரிடும்.
நாடு முழுவதும் பல்வேறு சைபர் குற்றங்களும், மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த மோசடிகளின்போது பணப்பரிமாற்றம் நடத்த வங்கி கணக்கை வைத்து குற்றவாளிகளை பிடித்து விடலாம் என்பதால் இதுபோன்ற மோசடி கும்பல்கள் அப்பாவி மக்களிடம் உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்தி கொள்கிறோம், அதற்கு பணம் தருகிறோம் என்று கூறி ஏமாற்றி அவர்கள் வங்கி கணக்கு மூலம் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.
பொதுவாக நம்முடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் அல்லது நம் வீட்டில் உள்ளவர்கள் நம்மிடம் என்னுடைய பேங்க் அக்கவுண்ட்டில் பிரச்சனை, உன்னுடைய பேங்க் அக்கவுண்ட்டை கொடு என்று கேட்டால் யோசிக்காமல் நாம் கொடுத்து விடுவோம். ஆனா நாம் சொந்தக்காரர்கள், நண்பர்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு நம்முடைய பேங்க் அக்கவுண்ட்டை கொடுத்தால் அதற்கு பின்னர் எவ்வளவு பெரிய ஆபத்து இருக்குனு உங்களுக்கு தெரியுமா? இந்திய ரிசர்வ் வங்கி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள மிக முக்கிய எச்சரிக்கை இதுதான்.
சைபர் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அந்த ஆபத்தான வார்த்தை தான் ‘மனி மியூல்’ (Money Mule).
அதாவது சட்டவிரோதமாக ஆன்லைனில் கொள்ளை அடிக்கப்படும் பணத்தை போலீசாரிடமிருந்தும், கிரைம் கிட்ட இருந்தும் காப்பாற்றி கொள்வதற்காக குற்றவாளிகள் பயன்படுத்தும் ஒரு குறுக்கு வழிதான் இந்த ‘மனி மியூல்’.
சைபர் கொள்ளைக்காரர்கள் ஏமாற்றி வாங்கும் பணத்தை நேரமாக அவர்களுடைய அக்கவுண்ட்டுக்கு அனுப்ப மாட்டார்கள். நம்மை போன்ற சாதாரண மக்களின் பேங்க் அக்கவுண்ட்டுக்கு அனுப்பி உடனே வேறு ஒரு அக்கவுண்ட்டுக்கு மாத்த சொல்லுவாங்க. அதற்கு கமிஷனும் தருவார்கள். பலரும் இதில் உள்ள வில்லங்கம் தெரியாமல் கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்வார்கள்.
உதாரணமாக உங்கள் அக்கவுண்ட்டுக்கு பணம் போடுகிறோம். அதை வேறு அக்கவுண்ட்டுக்கு அனுப்பினால் உங்களுக்கு ரூ.2000 கமிஷன் தருகிறோம் என்று ஒருவர் சொன்னால் அது ‘மனி மியூல்’ மோசடியாக கூட இருக்கலாம். தெரியாமல் உங்களுடைய அக்கவுண்ட்டை பயன்படுத்தி கொடுத்தாலோ அந்த பணப்பரிமாற்றத்திற்காக சட்ட சிக்கலில் நீங்களே மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.
வெளியில் இருந்து பார்க்கும் போது இது ஒரு சின்ன விஷயமாக தெரியலாம். ஆனால் போலீஸ் விசாரணை என்று வரும் போது அந்த திருட்டுப்பணம் உங்களது அக்கவுண்ட் வழியாக தான் போயிருக்கும். இதனால் ஒட்டுமொத்த பழியும் உங்கள் மீது தான் விழும். திருடர்களுக்கு உடந்தையாக இந்த குற்றத்திற்காக நீங்கள் தான் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும்.
தமிழகத்தில் சைபர் கிரைம் காவலர்கள் நடத்திய 2 நாள் சிறப்பு தேடுதல் வேட்டையில், 'மணி மியூல்' நிதி மோசடியில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கமிஷன் பணத்திற்காக தங்களின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்த கொடுத்து, 'டிஜிட்டல் கைது' மற்றும் ஆன்லைன் சூதாட்ட குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்ட சிலருக்கு காவல் நிலைய நிலையிலேயே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் இருந்து காத்துக்கொள்வது ஆர்பிஜ சொல்லும் 3 முக்கிய விஷயங்கள்..
* பணம் பரிமாற்றம் செய்வதற்காக உங்கள் வங்கி கணக்கை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். உறவினர்கள், நண்பர்கள் என தெரிந்தவர்களாக இருந்தாலும் வங்கி கணக்கை யாருக்கும் தராதீர்கள்.
* சுலபமாக சம்பாதிக்கலாம் அல்லது கமிஷன் பெறலாம் என்று வரும் ஆன்லைன் வேலை வாய்ப்புகளை நம்ப வேண்டாம். குறைந்த உழைப்பில் அதிக கமிஷன் தரும் பகுதிநேர வேலை அல்லது ஆன்லைன் ofertas-களை (சலுகைகள்) நம்பி ஏமாறாதீர்கள்.
* பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் சூதாட்டம் அல்லது கேமிங் செயலிகளைப் பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற தளங்கள் மூலம் பணத்தைப் பெறுதல் அல்லது பரிமாற்றம் செய்தல் சைபர் குற்ற வலையமைப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும்.
* உங்கள் வங்கி கணக்கிற்கு தெரியாத பணம் வந்தால் வங்கிக்கு தெரிவியுங்கள்.
* யாரிடமும் உங்களுடைய வங்கி விவரங்கள், ஏடிஎம் கார்டு பின் எண், பாஸ்வேர்டு, ஓடிபிகளை பகிராதீர்கள்.
* சுலபமாக பணம் சம்பாதிப்பது ஆபத்தில் முடியலாம் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.
ஆபத்துகளும் விளைவுகளும் :
* போலீஸிடம் மாட்டும்பட்சத்தில் உங்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படும்.
* சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் நீங்களும் குற்றவாளியாகக் கருதப்பட்டு கைது செய்யப்படுவீர்கள்.
* இதில் மாட்டிக்கொண்டால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
சைபர் கிரேம் போலீசார் இது போன்ற நிதி மோசடிகளில் ஈடுபடுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான நபர்களின் கோரிக்கைகளை உடனடியாகத் தவிர்த்து, உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருங்கள்.