

தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் மொத்தம் 37,328 ரேஷன் கடைகள் (நியாய விலைக் கடைகள்) செயல்பட்டு வருகின்றன. இதில் 26,618 முழுநேர கடைகள் மற்றும் 10,710 பகுதிநேர கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் மொத்தம் 2 கோடியே 28 வட்சத்து 12 ஆயிரத்து 942 ரேஷன் அட்டைகளுக்கு உணவு பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் ரேஷன் அட்டை மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய், கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களை அரசின் மானிய விலையில் பெறுகின்றனர். இதைச் சீராக விநியோகிக்க ரேஷன் கடைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர் மற்றும் எடை போடுபவர் (Packer) என பணியாளர்கள் இருக்க வேண்டும். பல மாவட்டங்களில் உள்ள கடைகளில் எடை போடுபவரோ அல்லது விற்பனையாளரோ இல்லாத நிலை உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக ஒரே ஊழியர் கூடுதல் கடைகளை கவனிக்கும் நிலை உள்ளது. இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், ரேஷன் கடைகளின் அன்றாடச் செயல்பாடுகளில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் அரிசி, பருப்பு வாங்க வரும் மக்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டு கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதற்கு முன்பு காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டிருந்தாலும், பல இடங்களில் ஆள்திறன் குறைபாடு மற்றும் பணிச்சுமை காரணமாக அட்டைதாரர்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் நிலவுகின்றன. மேலும், ஊதிய உயர்வு கோரிக்கைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் அவ்வப்போது வேலைநிறுத்தப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், அதற்கான தற்காலிக ஏற்பாடுகளைச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஆகஸ்ட் 31, 2026 நிலவரப்படி 1,714 விற்பனையாளர் பணியிடங்கள், 176 எடை போடுபவர் பணியிடங்கள் என மொத்தம் 1,890 பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, நிரந்தரப் பணியாளர் நியமனம் நடைபெறும் வரை, இடைக்கால ஏற்பாடாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களைப் பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ரேஷன் கடைக்கு, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான நடைமுறைக்கு, அவகாசம் தேவைப்படுகிறது. எனவே அதுவரை, காலியிடங்களுக்கு நிரந்தரப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் வரை, சுய உதவி குழு உறுப்பினர்களை நியமித்து, ரேஷன் கடைகளை நடத்துமாறும், வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்திற்கு, அவர்களை ஈடுபடுத்துமாறும், மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலியாக உள்ள 1,890 பணியிடங்களின் விவரங்கள், தகுதிகள் மற்றும் தற்காலிக நியமன நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தேவையான தகுதிகள்:
* விற்பனையாளர் பணிக்கு குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* எடை போடுபவர் பணிக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.
* சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* சுய உதவிக் குழுவின் செயல்பாடு, உறுப்பினர்களின் தகுதி, வங்கிக் கடன் திருப்பிச் செலுத்தும் நிலை உள்ளிட்ட விவரங்களும் பரிசீலிக்கப்படும்.
* விண்ணப்பதாரர்கள் அதே எல்லையைச் சேர்ந்தவர்களாகவும், குற்றவியல் வழக்குகள் தொடர்பான பின்னணி இல்லாதவர்களாகவும், அரசு அல்லது கூட்டுறவு நிறுவனங்களில் ஏற்கனவே பணிபுரியாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
* கூட்டுறவுச் சங்க இயக்குநர்கள் மற்றும் பணியாளர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
* இதற்கான தேர்வு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, தகுதியான உறுப்பினர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பணித்திறன் மற்றும் தேவையான ஆவணங்களையும் பரிசீலிக்கும்.
சிறப்புப் பயிற்சி:
* தேர்வு செய்யப்படுவோருக்கு, மின்னணு விற்பனை இயந்திரம் (ePoS) இயக்குதல், விரல் ரேகை மற்றும் கருவிழி அங்கீகாரம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட உரிமங்கள், இருப்பு மற்றும் விற்பனைப் பதிவேடுகளைப் பராமரித்தல், பொருட்கள் வழங்குவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும்.
* உணவுப் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள், தினசரி விற்பனை விவரங்களைப் பதிவு செய்தல், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் முறை போன்ற அம்சங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
ஊதியம் மற்றும் விதிமுறைகள்:
* தற்காலிகமாக நியமிக்கப்படும், சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, தினமும் தலா, 400 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
* மாதத்திற்கு அதிகபட்சமாக விற்பனையாளருக்கு 7,500 ரூபாய்க்கு மிகாமலும், எடையாளருக்கு 6,600 ரூபாய்க்கு மிகாமலும் ஊதியம் வழங்கப்படும்
* இந்தப் பணியானது முற்றிலும் தற்காலிகமானது. தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படும் வரை மட்டுமே மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தற்காலிகமாகப் பணியாற்றுவார்கள்.
* எதிர்காலத்தில் பணி வரன்முறை, நிரந்தரப் பணி அல்லது முன்னுரிமை எதுவும் கோர மாட்டேன் என்ற உறுதிமொழிப் பத்திரத்தை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
* சங்கம் நிர்ணயிக்கும் ரூ.10,000 பிணை வைப்புத் தொகையும், ஒரு லட்சம் ரூபாய்க்கான நம்பக உத்தரவாதக் காப்பீடும் (Fidelity Guarantee) இவர்களிடமிருந்து பெறப்படும்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 1714 ரேஷன் கடைகள் உடனடியாகச் செயல்படத் தொடங்குவதுடன், கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் தற்காலிக வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.