

பொதுமக்கள் தாலுகா (வட்டாட்சியர்) அலுவலகம் செல்லாமல், தங்கள் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகத்திலேயே 33 வகையான மனுக்களை அளிக்கும் புதிய திட்டத்தை தமிழக வருவாய்த் துறை தொடங்கியுள்ளது. இந்தச் சேவைகள் மற்றும் மனுக்களுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. இலவசமாகவே செய்து கொள்ளலாம். பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வருவாய் துறை மாவட்டம், கோட்டம், தாலுகா, பிர்கா, கிராமம் என பிரிக்கப்பட்டுள்ளன. இதில், 38 மாவட்டங்களில் தற்போதைய நிலவரப்படி, 317 தாலுகா அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இந்நிலையில், பட்டா மாற்றம், அத்தியாவசிய சான்றிதழ்கள் வழங்கல் போன்ற பணிகளில், வருவாய் ஆய்வாளரின் பங்களிப்பை குறைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், மக்கள் அதிக அளவில், தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் தாலுகா அலுவலகங்களின் பணி சுமையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் வைத்து தான் ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO அலுவலகம்) அலுவலகத்திலேயே 33 வகையான மனுக்களை அளிக்கும் புதிய திட்டத்தை தமிழக வருவாய்த் துறை தொடங்கியுள்ளது.
தமிழக அரசின் இந்தத் திட்டம் பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் சான்றிதழ்கள் மற்றும் சேவைகளுக்காகப் பொதுமக்கள் நகரங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு அலைவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
அந்த வசதியின் மூலம் பொதுமக்கள் பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் போன்ற பல்வேறு 33 வகையான வருவாய்த் துறை தொடர்பான மனுக்களை தாலுகா அலுவலகத்திற்குச் செல்லாமலேயே தங்களின் சொந்தக் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணினி அல்லது இணைய வசதி மூலம், பொதுமக்களின் மனுக்களை அங்கேயே ஆன்லைனில் பதிவேற்றம் செய்வர்.
இந்த முறையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மனுக்களைச் சமர்ப்பிக்க எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
என்னென்ன சேவைகள்?
பட்டா, சிட்டா பெயர் மாற்றம், வீட்டுமனை பட்டா, நில அளவை, ஆக்கிரமிப்பு அகற்றல், பிறப்பு, இறப்பு, வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ், குடிநீர், சாலை, தெருவிளக்கு, பொதுக் கிணறு, மருத்துவமனை / ஆரம்ப சுகாதார நிலையம் (PHC) வசதி, மழைநீர் வடிகால், கழிவுநீர் பராமரிப்பு, ரேஷன் கடை, முதியோர் உதவித்தொகை, விதவை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, மின் இணைப்பு, வேளாண் மானியம், பயிர் காப்பீடு, கால்நடை மருத்துவம், பள்ளி உதவித்தொகை, அங்கன்வாடி, ஏரி, குளம் பராமரிப்பு உள்ளிட்ட 33 சேவைகள் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கிராமத்திலேயே மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
பொதுமக்கள் எழுத்துப்பூர்வ மனுவுடன் ஆதார் நகல் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அலுவலகத்தில் வழங்க வேண்டும். மனு அளித்ததற்கான ஒப்புகைச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு அல்லது புகார்களுக்கு 1077 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது தமிழக அரசின் வருவாய்த் துறையின் http://tn.gov.in/revenue என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பொதுமக்கள் எளிய முறையில், தங்களுக்கு அருகிலேயே அரசுச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.