

கடந்த ஜனவரி மாதத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,80,779 என்ற வரலாற்று உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது ரூ.1,42,500 ஆகக் குறைந்துள்ளதால், தங்கத்தின் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயரத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இதற்கிடையே தீபாவளி பண்டிகை வரும் 8-ம்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தீபாவளிக்கு நகைகள் வாங்க, மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாட்டில் தங்கம் பயன்பாடு மற்றும் விற்பனையில், தமிழகம் முன்னணியில் உள்ளது. குழந்தைகளின் கல்வி செலவு, திருமணம், மருத்துவம் உள்ளிட்ட, அவசர தேவைகளுக்கு பணமாக மாற்றும் பாதுகாப்பான முதலீடாகவும் தங்கம் திகழ்கிறது. இதனால், தங்கம் விலை உயர்ந்தாலும், அதை வாங்கும் அளவை மக்கள் குறைக்கின்றனரோ தவிர, வாங்காமல் இருப்பதில்லை.
இந்தாண்டு மார்ச்சில், மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, உலகம் முழுதும் கச்சா எண்ணெய்க்கு தேவை அதிகரித்தது. இதனால், கச்சா எண்ணெய் சார்ந்த முதலீட்டு திட்டங்களில், உலக முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ததால், தங்கம் விலை குறைய தொடங்கியது. பின், மீண்டும் தங்கம் விலை அதிகரித்த நிலையில், சர்வதேச நிலவரங்களால், தற்போது, குறைந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் தீபாவளியை முன்னிட்டு, பணியாளர்களுக்கு போனஸ் தொகை அறிவித்துள்ளன. இதனால், பலரிடமும் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.
தற்போது தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்தாலும், நடப்பு தீபாவளி பண்டிகைக் காலத்தில் கடந்த ஆண்டை விட நகைக் கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்களின் பண்டிகை கால விற்பனையில் 35% வரை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. பொதுமக்கள் தொடர்ந்து தங்க நகைகள் மற்றும் குறைந்த எடையிலான ஆபரணங்களை (Lightweight jewellery) ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
மேலும், நகை கடை நிறுவனங்கள், தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம், குறைந்த செய்கூலி, பழைய தங்கத்தை மாற்றுவதற்கு கிராமுக்கு கூடுதல் பணம் உள்ளிட்ட, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதனால், தீபாவளிக்கு நகைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
பொதுவாக தீபாவளி, கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும். தீபாவளி மற்றும் பொங்கல் இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகை. ஆனால் கிறிஸ்துமஸ் (Christmas), புத்தாண்டு (New Year) உலகளவில் கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் அந்த சமயங்களில் தங்கம் விலை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது கடந்த 10 வருடங்களாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சமயங்களில் தங்கம் விலை அதிகரித்தே உள்ளது. அதேசமயம் தங்கத்தின் தேவையும் அதிகரித்தே உள்ளது.
அதை வைத்து பார்க்கும் போது இந்த சமயத்தை விட்டால் தங்கம் விலை ஏற ஆரம்பித்து விடும்.
அதுமட்டுமின்றி அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் முடிவுகள் உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஜெயந்திலால் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளின் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளில் நிச்சயமற்ற சூழல் உருவானால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் போன்ற உலகளாவிய காரணிகளால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி வாங்குவதே இந்த நீண்ட கால விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று அவர் விளக்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த பத்து மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு, 28,000 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த ஜனவரியில், தங்கம் விலை அதிகபட்சமாக கிராம், 16,800 ரூபாய்க்கும், சவரன், 1,34,400 ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போதைய விலையுடன் ஒப்பிடும்போது, தங்கம் சவரனுக்கு, 28,800 ரூபாய் குறைந்துள்ளது.
விலை குறைவு வாடிக்கையாளர்களை ஈர்த்து இருப்பதாலும், வரும் காலத்தில் தங்கம் விலை உயரக்கூடும் என்ற எண்ணம் காரணமாகவும், இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் நவீன டிசைன் நகைகள் போலவே, இந்தியாவில் தயாரிக்கும் நகைகளும் சிறப்பான டிசைன்களில் வடிவமைக்கப்பட்டு உள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வாங்குகின்றனர். இந்த நகைககள் எடை குறைவாகவும், பார்ப்பதற்கு பெரிய அளவிலும் உள்ளன. இதனால், தீபாவளி தங்கம் விற்பனை சிறப்பாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
இந்நிலையில், 2027ஆம் ஆண்டிற்குள் தங்கத்தின் விலை ரூ.2 லட்சத்தைத் தாண்டும் என சர்வதேச சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போதைய விலை வீழ்ச்சி தற்காலிகமானது என்றும், நீண்ட காலத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் என்றும் தொழில் துறையினர் கருதுகின்றனர்.
எனவே, இந்த தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் தங்கம் வாங்குவது நீண்டகால அடிப்படையில் சிறந்த முதலீடாக அமையலாம் என்பது நிதி மற்றும் சந்தை நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், தங்கத்தின் விலை சர்வதேசச் சூழலுக்கு ஏற்ப மாறக்கூடும் என்பதால், முதலீடு செய்வதற்கு முன்பு சந்தை நிலவரத்தையும் தனிப்பட்ட நிதி நிலையையும் கவனத்தில் கொள்வது அவசியம்.