அந்த மனசு தான் சார்! சென்னையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச சேவை செய்யும் பெண் ஆட்டோ டிரைவர்!

சென்னையில் அரசுப் பள்ளி மாணவிகளை இலவசமாக பள்ளிக்கு அழைத்து செல்லும் பெண் ஆட்டோ டிரைவரின் உன்னத சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றர்.
Raji Ashok |ஆட்டோ அக்கா
Raji Ashok |ஆட்டோ அக்காimage credit-timesofindia.indiatimes.com
Updated on

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 54 வயதான ராஜி அசோக் என்ற பெண்மணி, தன் கணவருடன் பிழைப்புக்காக சென்னை வந்து, கடந்த 27 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் பள்ளிச் சிறுமிகள் பாலியல் தொல்லைகளுக்கும், தவறான உடல்ரீதியான சீண்டல்களுக்கும் ஆளாவதை ராஜி கண்டார். பள்ளிக்குச் செல்வதில் அவர்களுக்குச் சலிப்போ அல்லது பயமோ ஏற்படாத வகையில், பாதுகாப்பான பயண வசதியை உருவாக்க அவர் விரும்பினார். அப்போதுதான் இளம் சிறுமிகளுக்காக ஆட்டோவை ஓட்டத் தொடங்கலாம் என்று நான் முடிவு செய்ததாக கூறுகிறார்.

அந்த தாக்கத்தின் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவிகளை தனது ஆட்டோவில் இலவசமாக காலையில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், மாலையில் பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதையும் தனது கடமையாகக் கொண்டு அவர் சேவை செய்து வருகிறார்.

‘அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவசப் பயணம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட இளஞ்சிவப்பு நிற ஆட்டோவை ஓட்டும் ராஜி, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னையின் தி.நகர், கோடம்பாக்கம், அண்ணா நகர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மாணவிகளை இலவசமாக அழைத்துச் சென்று வருகிறார்.

பள்ளி நாட்களில், ராஜி காலையில் மாணவிகளைப் பள்ளியில் விட இரண்டு முறையும், மாலையில் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மூன்று முறையும் பயணங்களை மேற்கொள்கிறார்; இதன் மூலம் தினமும் சுமார் 10 முதல் 15 மாணவிகளுக்கு உதவுகிறார். இந்தச் சேவையை இலவசமாக வழங்குவதன் மூலம், அவர் தினமும் சுமார் 500 ரூபாய் வருமானத்தை விட்டுக்கொடுக்கிறார்.

காலை 8 மணிக்கு பெரம்பூரில் இருந்து புரசைவாக்கம், டவுட்டன் வரை மாணவிகளை தனது ஆட்டோவில் அழைத்துச் செல்கிறார். அதன் பிறகு வாடகை சவாரிகளுக்கும் செல்லும் அவர் சரியாக மாலை 4 மணிக்கு எந்தப் பகுதியில் இருந்தாலும் அந்த பகுதி அரசு பள்ளி மாணவிகளை தன் ஆட்டோவில் ஏற்றி அவர்கள் வசிக்கும் பகுதியில் விட்டு விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுவரை அவர் தனது பணிவாழ்வில், 10,000-க்கும் மேற்பட்ட பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளார்.

குறிப்பாக அரசு பள்ளி சீருடையில் மாணவிகள் எங்காவது நிற்பது அவரது கண்ணுக்கு தெரிந்தால் உடனே ஆட்டோவை நிறுத்தி அதில் ஏற்றி சென்று விடுவார்.

Raji Ashok |ஆட்டோ அக்கா
Raji Ashok |ஆட்டோ அக்காimage credit-ndtv.com

பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் ஆட்டோ ஸ்டாண்டுகளுக்கு அருகில் காத்து நின்று மாணவிகளை அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பள்ளி சிறுமிகள் இவருடைய இளஞ்சிவப்பு நிற ஆட்டோ நிற்பதை உடனடியாக அடையாளம் கண்டு அதில் ஏறிக்கொள்வார்கள் என்று அவர் சொல்கிறார். அதேபோல் டியூஷனுக்கு செல்லும் மாணவிகளையும் அழைத்துச் செல்கிறார்.

தான் அழைத்துச் செல்லும் பல சிறுமிகள் தன்னைப் பார்த்ததும் உற்சாகமடைவதாகவும், உடனடியாக இயல்பான மனநிலைக்கு வந்துவிடுவதாகவும் ராஜி கூறுகிறார். சிலர் வீட்டிற்குச் செல்லும் வழியில் ஆட்டோவிலேயே தூங்கிவிடுவதுமுண்டு. குழந்தைகளுக்குப் பசி எடுத்தால் சாப்பிடுவதற்காக நான் எப்போதும் பிஸ்கட்டுகளைக் கைவசம் வைத்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி தனது ஆட்டோவில் பெண்களுக்கு அவசரமாக தேவைப்படும் பொட்டு, ஹேர்பின், நாப்கின் மற்றும் குடிநீர் பாட்டில், பிஸ்கட் போன்றவற்றை வாங்கி வைத்து இலவசமாக வழங்குகிறார். இவரை அனைவரும் 'ஆட்டோ அக்கா' என்று அன்புடன் அழைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஏழைகளுக்கு முற்றிலும் இலவசம்!₹30 கோடியில் திறக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் ‘ஹோஸ்பிஸ்’ வளாகம்!
Raji Ashok |ஆட்டோ அக்கா

மேலும், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இரவு நேரங்களில் இலவசப் பயணங்களையும், அவசர மருத்துவத் தேவைகளுக்காக மருத்துவமனைக்குச் செல்ல இலவசப் பயணங்களையும் அளிக்கிறார்.

இந்தச் சேவையின் மூலம் தினமும் கிடைக்க வேண்டிய 500 ரூபாய் வருமானத்தை இழந்தாலும், இதனால் கிடைக்கும் மனநிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும் எந்தக் குறைவும் இல்லை என்கிறார் ராஜி.

தினமும் ஆட்டோ ஓட்டி 1,500 ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்படும் இவர், அதற்காக இரவு-பகல், மழை-வெயில் என்று பாராமல் கடினமாக உழைத்து வருகிறார்.

வாடகை வீட்டில் வசித்தாலும், ஓட்டுகின்ற ஆட்டோவிற்கு தினமும் 250 ரூபாய் வாடகையாக கொடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும் கூட மனம் தளராமல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவரது பரந்த மனப்பான்மையை அவர் வசிக்கும் பகுதி மக்கள் பெருமையாக கூறுகிறார்கள்.

இதுமட்டுமின்றி, ஆதரவற்ற குழந்தைகளுக்காக ‘இணையும் கைகள்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை (NGO) நடத்தி வருவதுடன், மற்ற பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற உதவும் வகையில் இலவச ஓட்டுநர் பயிற்சியையும் அளிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு 50 ஆயிரம் வழங்கிய சைஃப் அலிகான்!
Raji Ashok |ஆட்டோ அக்கா

பள்ளி சிறுமிகளுக்கு உதவும் ராஜியின் மறுபக்கம் சுவாரசியமானது. அதுகுறித்து அவர் கூறியதாவது, ‘1992-ல், நானும் என் கணவரும் திருமணம் செய்துகொள்வதற்காக பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு ஓடி வந்தோம்.

அதனால் நாங்கள் இருவரும் எங்கள் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் போனது. நான் தத்துவவியலில் (Philosophy) பி.ஏ. படித்துக்கொண்டிருந்தேன். வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, பிழைப்பு நடத்துவதே எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது என்று அவர் கூறினார்.

திருமணத்திற்குப் பிறகு ஓட்டுநர் உரிமம் பெற்று ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டோம். வேலைக்குச் செல்லும்போது பெரும்பாலும் தங்கள் சிறு குழந்தைகளையும் உடன் அழைத்து செல்வோம். நாங்கள் கல்வியை முழுமையாக முடித்திருந்தால் எங்கள் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் அடிக்கடி யோசிப்பேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

எனது படிப்பு தடைப்பட்டதால் நான் இந்த தொழிலுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவிகள் தங்கள் கல்வியைப் பாதியில் கைவிடக் கூடாது என்பதற்காக, என்னால் முடிந்த உதவியைச் செய்வதை லட்சியமாகக் கொண்டு இந்தப் பணியைச் செய்து வருகிறேன்.

இதையும் படியுங்கள்:
பெண்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடனுதவி..!!
Raji Ashok |ஆட்டோ அக்கா

சென்னையில் எத்தனையோ பெண்கள் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் நிலையில் கேரளாவை சேர்ந்த பெண்ணான ராஜி பள்ளி மாணவிகளுக்காக இலவச பயணம் மேற்கொள்வது காண்போரை வியப்படையச் செய்கிறது.

logo
Kalki Online
kalkionline.com