

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு தீபாவளியை முன்னிட்டு பணம் முன்கூட்டியே வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 8-ம்தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், நவம்பர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நவம்பர் முதல் வாரத்தில் அல்லது தீபாவளிக்கு முன்பாக மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு வரும் நவம்பர் 8-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியுள்ள குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த மாதத்திற்கான தொகை அக்டோபர் 15-ஆம் தேதி தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் தான் தீபாவளியை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசால் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தீபாவளி பண்டிகை 8-ம்தேதி வரும் நிலையில் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கினால் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என அரசு ஆலோசித்து வருகிறது. இதனால் பண்டிகைக்கான செலவுகளைத் திட்டமிடும் குடும்பங்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேசமயம் இந்த ஏற்பாடு நடைமுறைக்கு வந்தால், சுமார் 20 நாட்கள் இடைவெளியில் பெண்களின் வங்கிக் கணக்கில் இரண்டு முறை தலா ரூ.1,000 வரவு வைக்கப்படும் சூழல் உருவாகும்.
தீபாவளிக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் ஆடைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிக்க இந்தத் தொகை பெரும் உதவியாக இருக்கும் எனப் பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு பண்டிகைக் காலத்தில் கூடுதல் பணம் கிடைப்பது நிதிச் சுமையைக் குறைக்கலாம்.
எனினும், நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு எப்போது வரும் என்று பயனாளிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்பது பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காகத் தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் முக ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டு, தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு முக்கியத் திட்டமாகும்.
கடந்த 2023-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திமுக அரசு கொண்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் இதனைத் தங்களது முக்கியத் தேர்தல் வாக்குறுதியாகவும், அரசுத் திட்டமாகவும் அறிவித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாயும், மகாராஷ்டிராவில் 1,500 ரூபாயும், மத்தியப் பிரதேசத்தில் 1,250 ரூபாயும், கர்நாடகாவில் 2000 ரூபாயும், புதுச்சேரி, டெல்லி & ஜார்கண்ட்டில் 2500 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, தேர்தல்களில் வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியக் காரணியாகவும் மாறியுள்ளது.