

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறதோ, அதே அளவிற்குத் தனியுரிமை மீறல்களும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் பெருகி வருகின்றன. திறன்பேசிகளில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும்போது, பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகச் சில சிறப்பு அனுமதிகளை (Special Permissions) இயங்குதளம் வழங்குகிறது.
ஆனால், இத்தகைய தீவிரமான அனுமதிகள் தேவையில்லாத செயலிகளுக்கு வழங்கப்பட்டாலோ அல்லது நமது கவனமின்றி ஆன் (On) செய்யப் பட்டிருந்தாலோ, நமது திறன்பேசியில் உள்ள ரகசியத் தரவுகள் அந்நிய நபர்களின் கைக்குச் செல்லும் ஆபத்து உருவாகலாம்.
குறிப்பாக, நமது வங்கியியல் ஓடிபி எண்கள் (OTP), ரகசியக் குறுஞ்செய்திகள் (SMS), வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் வங்கி நோட்டிபிகேஷன்களைத் திருடக்கூடிய மிகவும் ஆபத்தான ‘நோட்டிபிகேஷன் ஆக்ஸஸ்’ அமைப்பு குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.
நோட்டிபிகேஷன் ஆக்ஸஸ் என்றால் என்ன?
பொதுவாக திறன்பேசி இயங்குதளத்தில் ‘நோட்டிபிகேஷன் ஆக்ஸஸ்’ என்பது திறன்பேசித் திரைக்கு வரும் அனைத்து வகையான அறிவிப்பு களையும் (Notifications) வாசிக்கும் ஒரு சிறப்பு அனுமதியாகும்.
நாம் வாகனம் ஓட்டும்போதோ அல்லது வேறு ஏதேனும் வேலைகளில் இருக்கும்போதோ, நமக்கு வரும் குறுஞ்செய்திகளைச் சத்தமாகப் படித்துக் காட்டுவதற்காகவும் (Voice Readout), ஸ்மார்ட் வாட்ச் (Smartwatch) போன்ற துணைச் சாதனங்களுடன் இணைப்பதற்காகவும் இந்த அம்சம் உருவாக்கப்பட்டது.
இந்த அனுமதியைப் பெறும் செயலி, அறிவிப்புகள் புதிதாக வரும்போது அவற்றைப் படிக்கவும், சேமிக்கவும் அல்லது வெளியிடம் அனுப்பவும் முடியும். எனவே இது மிகவும் உணர்திறன் மிக்க அனுமதியாகக் கருதப்படுகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் இதற்குத் தனிப்பட்ட அனுமதி முறையை வைத்துள்ளது. பயனர் கைமுறையாக அமைப்புகளில் செயல்படுத்திய பிறகும், அனுமதியின் விளைவுகளை விளக்கும் கூடுதல் உறுதிப்படுத்தல் சாளரம் தோன்றும்.
ஆண்ட்ராய்டு 13-ல் அறிமுகமான POST_NOTIFICATIONS அனுமதி, செயலி பயனருக்கு அறிவிப்பு அனுப்புவதற்கான அனுமதியே தவிர, அது பயனரின் அறிவிப்புகளை வாசிப்பதற்கான Notification Access அனுமதி அல்ல. எனவே இரண்டையும் ஒன்றாகக் கருதக்கூடாது.
எனினும், இத்தகைய உணர்திறன் மிக்க அனுமதியை நாம் ஏதேனும் ஒரு செயலிக்கு வழங்கிவிட்டால், அச்செயலியால்:
· வங்கிப் பரிவர்த்தனைகளுக்காக வரும் ரகசிய ஓடிபி (OTP) எண்களைப் படிக்க முடியும்.
· வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசஞ்சர் செயலிகளின் வழியே வரும் தனிப்பட்ட உரையாடல்களை வாசிக்க முடியும்.
· சமூக வலைத்தள அறிவிப்புகள் மற்றும் வங்கிச் செயலிகளின் ரகசிய நோட்டிபிகேஷன்களைத் தடையின்றித் திரட்ட முடியும்.
ஆய்வுகள் காட்டுவது என்னவென்றால், இந்த அனுமதியைப் பயன்படுத்தித் தீங்கிழைக்கும் செயலிகள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது, கடவுச்சொற்களைப் பெறுவது, மற்றும் இரண்டு-காரணி அங்கீகாரத்தை (2FA) முறியடிப்பது போன்ற பாதுகாப்பு மீறல்கள் நடந்துள்ளன. இதன் காரணமாகவே, இந்த அனுமதியை இயக்கும்போது “இது உங்கள் நிதி சார்ந்த மற்றும் ரகசியத் தகவல்களைப் படிக்கக் கூடிய அபாயம் கொண்டது” என்ற எச்சரிக்கைச் செய்தியைக் கூகுள் நிறுவனம் காட்டுகிறது.
· குறிப்பாக, நீங்கள் தரவிறக்கம் செய்த தேவையற்ற செயலிகள், கேம்கள் அல்லது அறிமுகமில்லாத ஆப்கள் ஏதேனும் ஆன் நிலையில் இருந்தால், உடனே அதனை அழுத்தி Turn Off அல்லது Disable செய்ய வேண்டும்.
· நீங்கள் நேரடியாக நிறுவவே செய்யாத சந்தேகத்திற் குரிய செயலிகள் ஏதேனும் அங்கு ஆன் நிலையில் இருந்தால், அது உங்கள் அறிவிப்புகளைப் படிக்கக்கூடிய சந்தேகத்திற்குரிய செயலியாக இருக்கலாம். எனவே உடனடியாக அதன் அனுமதியை முடக்கி, செயலியை நீக்க வேண்டும்.
· சந்தேகத்திற்குரிய செயலிகள் சில நேரங்களில் “Device Health”, “System Service”, “Admin Service” போன்ற அப்பாவியாகத் தோற்றமளிக்கும் பெயர்களில் மறைந்திருக்கும். எனவே, அறிமுகமில்லாத பெயர்களில் உள்ள செயலிகள் ஆன் நிலையில் இருந்தால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
நோட்டிபிகேஷன் அனுமதியைக் கட்டுப்படுத்துவதுடன், பின்வரும் பாதுகாப்புப் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிப்பது நல்லது:
அறிமுகமில்லாத செயலிகளைத் தவிர்க்கவும்: பிளே ஸ்டோர் அல்லாத வெளி இணைப்புகள் வழியிலும், வாட்ஸ்அப் மெசேஜ்கள் வழியிலும் வரும் ஏபிகே (APK) கோப்புகளை ஒருபோதும் நிறுவக்கூடாது. வெளியிலிருந்து நிறுவப்படும் சில தீங்கிழைக்கும் செயலிகள் தம்மை முகப்புத் திரையிலிருந்து மறைக்கக்கூடும்; ஆனால் அனைத்து APK செயலிகளும் மறையும் என்பதில்லை.
அனுமதிகளை அவ்வப்போது கண்காணிக்கவும்: போனில் உள்ள செயலிகளுக்கு கேமரா, மைக்ரோஃபோன், தொடர்புகள், SMS மற்றும் நோட்டிபிகேஷன் அனுமதிகள் தேவைதானா என்பதை Settings > Apps > Permissions சென்று காலாண்டுக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
Play Protect-ஐ இயக்கி வைக்கவும்: Google Play Protect என்பது ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சமாகும். இது நிறுவப்பட்ட செயலிகளைச் சந்தேகத்திற்குரிய நடத்தைக்காக ஸ்கேன் செய்கிறது. Play Store > சுயவிவர ஐகான் > Play Protect என்ற வழியில் இதை இயக்கி, அவ்வப்போது ஸ்கேன் செய்யலாம்.
சாதன நிர்வாகி அனுமதிகளைச் சரிபார்க்கவும்: சில தீங்கிழைக்கும் செயலிகள் தங்களை நீக்க முடியாதபடி Device Admin அனுமதிகளைப் பயன்படுத்துகின்றன. Settings > Security > Device admin apps என்ற வழியில் இதைச் சரிபார்த்து, அறிமுகமில்லாத செயலிகளின் அனுமதியை நீக்கலாம். சாதன உற்பத்தியாளர் மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்பைப் பொறுத்து இந்தப் பாதை மாறலாம்.
திறன்பேசி அமைப்புகளில் உள்ள ‘நோட்டிபிகேஷன் ஆக்ஸஸ்’ பகுதியில் எந்தவொரு தேவையற்ற செயலியும் ஆன் நிலையில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது, நமது வங்கியியல் ரகசியங்கள், ஓடிபி எண்கள் மற்றும் தனிப்பட்ட உரையாடல்கள் திருடப்படுவதிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும்.