

மலை மீதிருந்து அண்ணாந்து வானத்தைப் பார்த்த ஒரு பழைய காலமும் உண்டு. அதன் பின்னர் மெதுவாக சின்னச்சின்ன விஞ்ஞான சாதனங்களை மனிதன் செய்ய ஆரம்பித்தான்.
இன்றோ....?! மலைக்க வைக்கும் அளவு பிரம்மாண்டமான வளர்ச்சி – டெலஸ்கோப் தொழில்நுட்பத்தில்! பதினேழாம் நூற்றாண்டில் இதை முதலில் உருவாக்கிய ஹான்ஸ் லிப்பர்ஷியே இன்று இருக்கும் வளர்ச்சியைப் பார்த்தால் மலைத்துப் போவார்.
ஆரம்பகால டெலஸ்கோப் வளர்ச்சி மற்றும் யுரேனஸ் கிரகத்தின் கண்டுபிடிப்பு:
இங்கிலாந்தில் 1781ம் ஆண்டில் வில்லியம் ஹெர்ஷல் முதன் முதலாக யுரேனஸ் என்ற கிரகத்தைக் கண்டுபிடித்து உலகையே மலைக்க வைத்தார்.
மற்ற கிரகங்கள் எல்லாம் சாதாரணமாக கண்களால் பார்க்கப்படக் கூடியதாக இருந்தபோது யுரேனஸ் மட்டும் ஒரு விஞ்ஞான சாதனமின்றி பார்க்க முடியாததாக இருந்தது. ஹெர்ஷல் 6.2 அங்குல டெலஸ்கோப்பை செய்து அதன் மூலம் இந்த கிரகத்தை தனது இல்லத்தின் தோட்டத்திலிருந்து பார்த்தார்.
இதுவே பின்னால் 18 அங்குல டெலஸ்கோப்பாக மாறியது. அவரே இவற்றையெல்லாம் தயாரித்தார். Reflector என்னும் பிரதிபலிப்பி டெலஸ்கோப்பில் பயன்படுத்தப்பட்டதால் அதில் உள்ள கண்ணாடிகள் ஒளியை ஒரு குவியப் புள்ளியில் பிரதிபலிக்க வைத்து கண்ணில் அணிந்திருக்கும் கருவிக்குச் செலுத்தும். இதனால் விண்ணில் உள்ள அனைத்தையும் நன்றாகப் பார்க்க முடியும்.
அடுத்து லிவர்பூலில் வாழ்ந்த வில்லியம் லேஸல் 24 அங்குலம் மற்றும் 48 அங்குலம் என்று பிரம்மாண்ட டெலஸ்கோப்களைத் தயாரித்தார்.
இப்போது நிஜமாகவே ஒரு டெலஸ்கோப் ரேஸ் உருவாக ஆரம்பித்தது.
டெலஸ்கோப்பின் இன்னொரு வகையான Refractor (முறி கருவி) அமெரிக்காவில் தயாரிக்கப்பட ஆரம்பித்தது. 1897ம் ஆண்டு சிகாகோவில் ஐந்து லட்சம் டாலர் செலவில் (அதன் இன்றைய மதிப்பு இரண்டு கோடி டாலர்) 40 அங்குல ரிப்ராக்டர் டெலஸ்கோப் தயாரிக்கப்பட்டது.
டெலஸ்கோப்புகளுக்கு கிராக்கி ஏற்படவே அது ஒரு பெரும் வணிகமாகவே மாறிவிட்டது. 1880களில் இங்கிலாந்தை விட பின்தங்கி இருந்த அமெரிக்கா டெலஸ்கோப் தயாரிப்பில் 1920களில் முன்னணியில் வந்து நின்றது.
அமெரிக்காவின் வணிகப் போட்டியும் நவீன டெலஸ்கோப் வளர்ச்சி நிலைகளும்:
கலிபோர்னியாவில் ஜேம்ஸ் லிக் என்ற ஒரு பெரும் பணக்காரர் மவுண்ட் ஹாமில்டனில் ஒரு புதிய ஆப்ஸர்வேடரியை (விண்வெளிப் பார்வை மற்றும் ஆய்வு நிலையம்) நிறுவினார்.
அடுத்தடுத்து பிரம்மாண்டமான டெலஸ்கோப்கள் தயாரிக்கப்பட்டன. டெலஸ்கோப்பின் லென்ஸ்கள் கனமாக ஆக்கப்பட்டன.
1850களில் விஞ்ஞானி லியான் போகால்ட் என்பவர் கண்ணாடியின் மீது ஒரு வெள்ளிப்பூச்சைப் பூசி புதுவித டெலஸ்கோப்பைத் தயாரித்தார். இதனால் பிரதிபலிப்பு கூடியது; டெலஸ்கோப்பின் எடையும் குறைந்தது.
இருபதாம் நூற்றாண்டில் ஜார்ஜ் ரிட்னி இதில் மேலும் ஒரு புரட்சியைச் செய்தார். 24 அங்குல டெலஸ்கோப்பை முதலில் தயாரித்த அவர், மவுண்ட் வில்ஸன் ஆப்ஸர்வேடரிக்காக 60 அங்குல பிரம்மாண்ட டெலஸ்கோப்பை 1908ல் வடிவமைத்துத் தயாரித்தார்.
ஜான் ஹூக்கர் என்பவர் தாராளமாக பண உதவி செய்யவே 100 அங்குல டெலஸ்கோப் 1917ல் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு நட்சத்திரமும் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடிந்தது.
மில்கி வே எனப்படும் பால்வீதி மண்டலத்திற்கு அப்பாலும் கிரகங்கள், நட்சத்திரங்கள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டது. இதற்கு அடுத்தாற்போல் மவுண்ட் வில்ஸன் டைரக்டராக இருந்த ஹேல் என்பவர் பெயரால் ஹேல் டெலஸ்கோப் உருவாக்கப்பட்டது. இது 200 அங்குல டெலஸ்கோப்.
மவுண்ட் பலோமரில் இது 1949ம் ஆண்டு பயனுக்கு வந்தது. 1975 முடிய இதுவே உலகின் பிரம்மாண்டமான டெலஸ்கோப். போட்டியில் புகுந்த சோவியத் யூனியன் ஆறு மீட்டர் டெலஸ்கோப்பை தயாரித்தது. இதை முறியடித்தது 1993ல் ஹவாயில் கெக் ஆப்ஸர்வேடரியில் நிறுவப்பட்ட பத்து மீட்டர் டெலஸ்கோப்.
இப்போது மிகவும் பிரபலமாக அனைவரும் அறிந்திருப்பது ஹப்பிள் டெலஸ்கோப்தான். 1990ல் இது நிறுவப்பட்டது. இதனுடைய சாதனை மலைக்க வைக்கும் ஒன்று. 17 லட்சம் குறிப்புகளை இது கடந்த 36 வருடங்களில் எடுத்துள்ளது. இதனால் 23000 ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 29000 வானியல் விஞ்ஞானிகள் இவற்றில் ஈடுபட்டு அற்புதமான விண்வெ:ளிக் கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்துள்ளனர்.
250 வருட கால டெலஸ்கோப் வளர்ச்சியால் பிரபஞ்ச மர்மம் நன்கு விளங்கி நம்மை அதிசயிக்க வைக்கிறது. இந்த டெலஸ்கோப் வளர்ச்சி பற்றி இந்தியாவில் இளம் சிறார்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை விண்ணை நோக்கி உயரத்தில் முன்னேற்ற வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனுடைய இன்றைய கடமை ஆகும்.
இக்கட்டுரையின் மூலம் வாசகர்கள் பிரபஞ்சத்தின் எல்லையற்ற மர்மங்களை மனிதகுலம் எவ்வாறு தன் தொழில்நுட்ப அறிவால் வென்றது என்பதைத் துல்லியமாக உணர்ந்துகொள்ள முடியும். இது நம் வீட்டு இளம் தலைமுறையினருக்கு விண்வெளி அறிவியல் மீதான ஆர்வத்தையும், வானியல் துறையில் சாதிப்பதற்கான உத்வேகத்தையும் நேரடியாகக் கொடுக்கும்.