யானைக்கொரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் என்றொரு பழமொழி சொல்வார்கள். அது உண்மைதான் போலிருக்கிறது. ஆமாம், பூனைகளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 8 ஆம் நாளை பன்னாட்டுப் பூனைகள் நாளாக (International Cats Day) உலகெங்கும் கொண்டாடுகின்றனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் விலங்குகள் நலனுக்கான பன்னாட்டு நிதியத்தால் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் பிப்ரவரி 17 ஆம் நாளிலும், ரசியாவில் மார்ச் 1 ஆம் நாளிலும் பூனை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
பூனை (Felix Catus) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஓர் அனைத்துண்ணி ஆகும். பூனைகள் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் இறைச்சி உணவுடன் சைவ உணவையும் சேர்த்து உண்கின்றன. உலகெங்கும் சுமார் 70 பூனை இனங்கள் உள்ளன. இவற்றில் 40 இனங்கள் அங்கீகரிக்கப்பட்ட இனங்களாகும். இந்தியாவில் 8 பூனை இனங்கள் உள்ளன.
பூனைகள் பொதுவாக 2.5 கிலோ கிராமிலிருந்து 7 கிலோ கிராம் வரை எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் குறைவாகக் காணப்படும். மெய்ன் கூன் (Maine Coon) போன்ற சில வகைப் பூனையினங்கள் எப்போதாவது 11 கிலோ கிராமுக்கும் கூடுதலாக வளர்கின்றன. உலகச் சாதனையாக 21 கிலோ கிராம் எடையுடைய பூனைகளும் இருந்திருக்கின்றன. அதே போல், உலகிலேயே மிகச்சிறிய வயதான பூனையின் எடை கிட்டத்தட்ட 1 கிலோவாக இருந்துள்ளது. பொதுவாக ஆண் பூனைகள் பெண் பூனைகளை விடப் பெரிதாகக் காணப்படும்.
பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33 முள்ளந்தண்டு எலும்புகள் இருக்கும்). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் இருக்கின்றன. பூனைகளின் அதிக அளவிலான சத்த அதிர்வுகள் 64 கிலோ ஹேர்ட்ஸ். நாள்தோறும் பூனைகள் 12 முதல் 16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 முதல் 39 செல்சியசு (101 முதல் 102.2 பாரன்ஹீட்) வரைக் காணப்படும். மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தம் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகளின் உடல் நுழையும்.
பூனைகள் முன்னங்கால்களிலில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் கொண்டு இருக்கும். பூனைகள் நடக்கும் போது ஓசை கடத்தாமலிருக்கும் வகையில் மெத்தை போன்ற பாத அமைப்பைப் பெற்றுள்ளன. நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம்.
பூனைகள் சிறந்த இரவுப் பார்வையைக் கொண்டுள்ளன. குறைந்த அளவிலான ஒளியை டபீட்டம் லூசிடம் என்ற இமைப்பானது கண்ணின் விழித்திரைக்குப் பின்னால் குவிப்பதால் குறைந்த அல்லது மங்கலான ஒளியிலும் துல்லியமான பார்வைத்திறன் கொண்டுள்ளன. இவை மனிதனுக்குப் பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை.
வழக்கமான பாலூட்டிகளிலிருந்து பூனையின் மண்டையோடு மாறுபட்டுள்ளது. மிகப்பெரிய கண்டாங்கு குழிகளும், பலமான மற்றும் சிறப்பு வாய்ந்த தாடைகளும் பூனையை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகின்றன. தாடையிலுள்ள 35 பற்களும் மாமிசத்தைக் துண்டாக்கிக் கிழிக்கும் வகையில் தகவமைந்துள்ளன. பிற பூனையினங்களைக் காட்டிலும் வீட்டுப் பூனைகளுக்குக் குறுகிய இடைவெளி கொண்ட கோரைப்பற்கள் காணப்படுகின்றன. இவ்வமைப்பு அது விரும்பி உண்ணும் மிகச்சிறிய முதுகெலும்பு கொண்ட கொறிக்கும் விலங்குகளை எளிதாகப் பிடிக்க உதவுகிறது. முன் கடைவாய்ப்பல் மற்றும் முதல் கடைவாய்ப்பல் இரண்டும் இணைந்து வாயின் இருபுறமும் சோடியாக அமைந்து மாமிசத்தைத் துண்டு துண்டாகக் கத்தரிக்கோல் போன்று நறுக்குகின்ற பணியைச் செய்கின்றன.
அண்மைய ஆண்டுகளில் பூனைகளின் சராசரி வாழும் காலம் உயர்ந்துள்ளது. 1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், பூனையின் சராசரி ஆயுட்காலம் 15 வருடங்களாக இருந்தது.1995 ஆம் ஆண்டில் 9.4 ஆண்டுகள் உயர்ந்து, 2014 இல் 12 முதல் 15 ஆண்டுகளாக உயர்ந்தது. எனினும், பூனைகள் 40 வயது வரை உயிர் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. உலகின் வயதான பூனையாக க்ரீம் பஃப் எனும் பூனை, 40 வயதில் இறந்தது.
பூனைகள் தனிமை விரும்பிகளாகும். எனவே நாய்கள், சிங்கங்கள் போல் அல்லாமல், புலிகள், சிறுத்தைகளைப் போல இனத்துடனும், மனிதர்களிடமும் தனித்தே இருக்கும். நாய்கள் போன்று சிறப்புக் கவனங்களை பூனைகள் எதிர்பார்ப்பதில்லை. பூனைகள் அதிகம் விளையாடும் திறன் பெற்றவை. அவை விளையாடுவதே அவற்றை வேட்டைக்காரர்களாக மாற்றுகிறது.
பூனைகளின் நாக்கில் இனிப்புச் சுவையை அறியும் நுகர்மொட்டுகள் இல்லாததால், பூனைகளால் இனிப்புச் சுவையை அறிய இயலாது. மரபணு மாற்றத்தினால் இத்திறனைப் பூனைகள் இழந்து விட்டன. மற்ற சுவைகளைப் பூனைகள் அறியும். பூனைகள் விரைவான இனப்பெருக்க விகிதம் கொண்டவை. பூனைகள் இரு மாதங்கள் வரை தமது குட்டிகளைச் சுமக்கும். ஒரு பூனை தமது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை பெறக்கூடியவை.
பூனைகள் 10,000 ஆண்டுகளாக மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டிருப்பதாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஆப்பிரிக்கர்களே பூனைகளைப் பழக்கப்படுத்தினர். தொடக்கத்தில் எலிகளை உண்பதற்காகவேப் பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டன. பின்னர், அவை மனிதனுடன் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
பூனைகள் பண்டைய எகிப்தில் வழிபாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால், அவைகளைப் பொதுவாக வீட்டில் வளர்த்து வணங்கினர். பூனைகள் இறந்தால் அதற்கும் பிரமிடுகள் கட்டி, சில எலிகளையும் பாடம் செய்து எகிப்தியர்கள் புதைத்துள்ளனர். அரசர்களுடன் அவர்களது பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன
தனது அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசித் தெரியப்படுத்தும். பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்து கொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து படுத்துக் கொள்வதும் உண்டு.
பூனைகள் மிகுந்த தன்சுத்தம் உடையவையாகும். பூனைகள் தனது ரோமங்களை நக்கி முழுமையாகச் சுத்தம் செய்யும். சுத்தம் செய்யும் போது நாக்கில் ஒட்டிக் கொண்டு வரும் ரோமங்களைப் பந்து போல் வாயில் எடுக்கும் திறன் பெற்றவை பூனைகளாகும்.
போப்பாண்டவர் xvi பெனடிக்ட், நபிகள் நாயகம், அபூ ஹுரைரா (ரழி), மேனாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பில்கிளிண்டன், அமெரிக்கக் கவிஞர் எர்லைட் ஹெர்மிங்வே, நடிகர் விஜய் ஆகியோர் பூனை வளர்ப்பில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்களிடயே இருக்கும் பூனையை பற்றிய பல நம்பிக்கைகள்:
சாம்பல் நிற பூனை அதிர்ஷ்டத்தின் அடையாளம். ஒரு வீட்டில் கருப்பு பூனை நுழைகிறது என்றால், அது அதிர்ஷ்டம். நீங்கள் வெளியே பயணம் கிளம்பும் போது, இடது புறமாக பூனை போனால், அது நல்ல சகுனம். வீட்டினுள் பூனை குட்டிகள் போட்டால், அந்தக் குடும்பத்தலைவருக்கு செல்வம் சேரும். அந்த வீட்டில் தீய சக்திகள் நுழையாது. வீட்டிலிருந்து வெளியே செல்லும் ஒருவரை, பூனை பின் தொடர்ந்து சென்றால், அது அந்தக் குடும்பத்துக்கு மிகுந்த செல்வத்தைக் கொண்டுவரும். ஒரு வீட்டில் பூனை இறந்தால், அது அந்த வீட்டுக்கு ஆகாது. பூனை தன் ஒரு காதை மூன்று முறை நக்கினால், வீட்டுக்கு விருந்தினர் வருவார். மூன்று கருப்பு பூனைகளை ஒன்றாக கண்டால், அது மிகுந்த அதிர்ஷ்டமாகும் என்பது போன்ற பல நம்பிக்கைகள் இந்திய மக்களிடம் இருக்கின்றன.