
டிசம்பர் 26 ஆம் நாளென்றவுடன், இந்தியப் பெருங்கடல் பகுதியில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உருவான சுனாமி (Tsunami) எனும் ஆழிப்பேரலையும், அதனால் ஏற்பட்ட பேரழிவுகளுமே நினைவுக்கு வரும். ஆமாம், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமியால் 2,30,000 பேர்கள் உயிரிழந்தனர் என்பதுடன், இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட கடலோரப்பகுதிகளில் இருந்த 14 நாடுகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தியது இந்த ஆழிப்பேரலைதான்.
சுனாமி என்பது ஜப்பானியச் சொல். ஜப்பானிய மொழியில், ‘சு’ என்றால் துறைமுகம் என்றும், ‘நாமி’ என்றால் அலை என்றும் பொருள் கொள்ளலாம். எனவே, சுனாமி என்றால் "துறைமுக அலை" என்றும் சொல்லலாம். சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனவும் குறிப்பிடப்படுகிறது. தமிழில், ‘ஆழிப்பேரலை’ மற்றும் ‘கடற்கோள்’ என்றும் சொல்கின்றனர்.
சுனாமி என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் திடீரென்று பெருமளவு நீர் இடப்பெயர்ச்சியாகும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். சுனாமி உண்டாவதற்கு முக்கியக் காரணம், கடலில் ஒரு கணிசமான அளவு நீர் இடப்பெயர்ச்சி ஆவதே ஆகும். நீர் இடப்பெயர்ச்சி ஆவதற்கு நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் காரணமாக இருக்கலாம். மிக அரிதாகச் சில நேரங்களில் விண்கல் மற்றும் அணுச் சோதனைகள் மூலமும் சுனாமி உருவாகும். இவற்றால் உண்டாகும் அலைகள் பின்பு ஈர்ப்பு சக்தியால் நீடிக்கிறது. அலைகள் சுனாமி உருவாவதில் எந்தப் பங்கும் வகுப்பதில்லை.
அனைத்து நிலநடுக்கங்களும் சுனாமியை ஏற்படுத்தாது. நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்துவதற்கு நான்கு நிபந்தனைகள் அவசியம்:
நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற்பட வேண்டும் அல்லது பொருள் கடலுக்குள் சரிய வேண்டும்.
நிலநடுக்கம் வலுவாக இருக்க வேண்டும், ரிக்டர் அளவுகோலில் குறைந்தபட்சம் 6.5 ஆக இருக்கும்
நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பைச் சிதைக்க வேண்டும் மற்றும் அது ஆழமற்ற ஆழத்தில் நிகழ வேண்டும். (பூமியின் மேற்பரப்பில் இருந்து 70 கி.மீட்டருக்கும் குறைவான ஆழத்தில்)
நிலநடுக்கம் கடல் தளத்தின் செங்குத்து இயக்கத்தை (பல மீட்டர்கள் வரை) ஏற்படுத்த வேண்டும்.
கடல் படுகையில் திடீரென ஏற்படும் மாற்றதால் மேலிருக்கும் தண்ணீர் செங்குத்தாக இடமாற்றம் அடைவதால் சுனாமி உருவாகும். டெக்டானிக் நிலநடுக்கங்கள், பூமியின் புவி ஓடு உருக்குலைவதால் உண்டாகும், இது கடலுக்கு அடியில் ஏற்படும் போது, சிதைக்கப்பட்ட பகுதியிலுள்ள தண்ணீர், சமநிலையில் இருந்து இடம் பெயர்கிறது. டெக்டானிக் தட்டுகளின் தவறான சுழற்சி காரணமாக, செங்குத்தாக நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது. இயக்கத்தில் ஏற்படும் சாதாரண தவறுகளாலும் கடல் படுகையில் இடப்பெயர்ச்சி ஏற்படும். ஆனாலும், இவை பெரிய சுனாமியை உண்டாக்குவது இல்லை.
சுனாமி ஒரு சிறிய அலை வீச்சும், மிக நீண்ட அலை நீளமும் உடையவை. சாதாரண கடல் அலை 30 அல்லது 40 மீட்டர் அலைநீளம் உள்ளவை. ஆனால் ஆழிப்பேரலையின் அலைகள் சில நூறு கிலோ மீட்டர் நீளம் உடையவை. இவை கடல் பரப்பை விட 300 மில்லி மீட்டர் மேலே சிறிய வீக்கம் போன்று உருவாகும். அவை தாழ்வான நீலை அடையும் போது மிக அதிக உயரமாக மேலெழுகிறது. ஆழிப்பேரலையின் சிறிய அலைகூட கடலோரப்பகுதியை மூழ்கடித்து விட முடியும்.
1946 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அலாசுகாவில் அலேடன் தீவுகளுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவுகள் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் 14 மீட்டர் உயரத்திற்கு அலை மேலே எழுந்து ஹவாய் தீவில் உள்ள இலோ என்ற இடத்தையே அழித்து விட்டது. பசிபிக் பெருங்கடல் தரையில் அலாசுகா கீழ்நோக்கித் தள்ளப்பட்டதால், உண்டான பூகம்பமே இதற்குக் காரணம்.
சுனாமி என்பது அரிதான நிகழ்வுதான் எனினும், மிகவும் ஆபத்தானது என்பதால், ஜப்பான் தனது கசப்பான அனுபவத்தின் காரணமாக, சுனாமி முன்னெச்சரிக்கை, பொது நடவடிக்கை மற்றும் எதிர்கால பாதிப்புகளைக் குறைப்பதற்காக பேரழிவிற்குப் பிறகு சிறப்பாகத் திரும்புதல் போன்ற துறைகளில் பெரும் நிபுணத்துவத்தை ஏற்படுத்துவதற்கு, ‘உலக சுனாமி விழிப்புணர்வு நாள்’ ஏற்படுத்த வேண்டுமென்கிற கோரிக்கையினை முன் வைத்தது. அதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5 ஆம் நாளில், ‘உலக சுனாமி விழிப்புணர்வு நாள்’ கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5 ஆம் நாளில் ‘உலக சுனாமி விழிப்புணர்வு நாள்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து நாடுகளும், பன்னாட்டு அமைப்புகளும், சமூக அமைப்புகளும் இந்நாளில், சுனாமி குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதுடன், சுனாமியினால் விளையும் அபாயத்தினைக் குறைப்பதற்கான புதுமையான அணுகுமுறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தது. குறிப்பாக, வேகமான நகரமயமாக்கல் மற்றும் சுனாமி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வளர்ந்து வரும் சுற்றுலா போன்றவைகளைக் கட்டுப்படுத்தி, பெருந்தீங்குகளைக் குறைத்திட வேண்டும். மேலும், பேரழிவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.