

இயற்கை மருத்துவம் என அழைக்கப்படும் ‘நேச்ரோபதி’ என்ற வார்த்தை லத்தீன் வார்த்தையான 'நேச்சுரா' என்பதிலிருந்தும், கிரேக்க வார்த்தையான 'பாத்தோஸ்' என்பதிலிருந்தும் வந்தது. 1945ம் வருடம் 90 நாட்கள் இயற்கை மருத்துவ சிகிச்சை பெற்ற மகாத்மா காந்தி நவம்பர் 18ம் தேதி ஒரு இயற்கை மருத்துவ நிறுவனத்தைத் தொடங்கி வைத்து, ‘நான் இனி 120 வயது வரை உயிர் வாழலாம். இயற்கை மருத்துவம் என் உடல் நிலையை மாற்றியது’ என சூளுரைத்தார்.
அவர் சூளுரைத்த நாளையே தேசிய இயற்கை மருத்துவ தினமாக அறிவித்தது ஆயூஸ். மகாத்மாவின் இந்த மாற்றத்திற்குக் காரணம் 90 நாட்கள் அவர் கடைப்பிடித்த இயற்கை மருத்துவ ஒழுக்க நெறிகள்தான்.
இயற்கை மருத்துவத்தின் ஐந்து ஒழுக்க நெறிகளாக, தினமும் 2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துதல், 2 முறை உணவு உண்ணுதல், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள், வாரம் ஒரு நாள் உண்ணாநோன்பு, தினம் இரு முறை தியானம் அல்லது இறை வழிபாடு ஆகியவை கூறப்படுகின்றன. இது ஒரு மனிதனின் உடல் மற்றும் மனதை சுத்தப்படுத்தி ஆரோக்கிய உடல் மற்றும் தெளிந்த சிந்தனையை அளிக்கிறது.
சமைக்காமல் சாப்பிடும் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், தானியங்கள் அனைத்தும் இயற்கை உணவுகள்தான். இயற்கையான உணவை உட்கொண்டால் நோய்களில் இருந்து நாம் விடுபடலாம். இயற்கை மருத்துவம் வாரம் ஒருமுறை உபவாசம் இருக்கச் சொல்கிறது. அப்படியிருக்கும்போது. காலை எழுந்தவுடன் அரை எலுமிச்சை பழத்துடன், 20 கிராம் தேன் கலந்து சிறிதளவு தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அதன் பின் காலை 8 மணி முதல் இரவு எட்டு மணி வரை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பழச்சாறு அருந்த வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவர்களும், ஆரோக்கியமாக உள்ளவர்களும் இந்த பழச்சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால், அது ரத்தத்தில் கலந்து புத்துணர்வு தருகிறது. பழச்சாறு மட்டுமே அருந்தும் வேளையில் கடினமான வேலைகளைச் செய்யக் கூடாது.
கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி பழங்களில் நோய் எதிர்ப்புச் சக்தியை தரும் வைட்டமின் சி சத்து நிறைய உண்டு. ஆப்பிள், திராட்சை, மாதுளை போன்ற பழங்களை நாள்தோறும் உட்கொண்டால், உடல் வலிமை பெறும். பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கள் நீர்த்துவம் பெறும். சிறுநீர் பிரச்னை ஏற்படாது. இவை எளிதில் ஜீரணமாகும் என்பதால், மலச்சிக்கலும் ஏற்படாது.
உடலில் உள்ள நச்சுத்தன்மையை அது குறைக்கும். கல்லீரல் பிரச்னை, அஜீரணம் போன்றவை சரியாகும். பழத்துடன் காய்கறிளை சேர்த்து சாப்பிட்டால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும். நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பழத்தை சாறு வடிவில் பருக வேண்டும். இயற்கையாகவே நோய்கள் குணமாக முடிந்தவரை அடிக்கடி காய்கறிகளை சாப்பிடுங்கள். உடனடி பசிக்கு நறுக்கிய சாலட் காய்கறிகளை சாப்பிடுங்கள். உங்கள் பிரதான உணவுக்கு முன் சாலட் அல்லது காய்கறி / வேகவைத்த சூப் எடுத்துக்கொள்வது நல்லது.
தாவர அடிப்படையிலான எண்ணெய்களுடன் சமைக்கவும். இனிக்காத காபி அல்லது தேநீரை பருகுங்கள். வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். சாதாரண ரொட்டிக்கு பதிலாக மல்டி கிரைன் ரொட்டிகளை சுட்டு சாப்பிடலாம். பூச்சிக்கொல்லிகளால் ஏற்படக்கூடிய உடல் நல அபாயங்களைத் தவிர்க்க கரிம விளைபொருட்களைப் எடுத்துக் கொள்ளுங்கள்.
நமது உடலில் ஏற்படும் வாசனைக்கும் நாம் சாப்பிடும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பொறுத்தவரை அவற்றை அதிகமாகச் சாப்பிடுவது மிகவும் கவர்ச்சிகரமான வாசனையை உடலில் ஏற்படுத்தும் என்பதை ஆஸ்திரேலியாவில் 2017ல் நடந்த ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.