
விவேகானந்தரின் சில பிரமிப்பூட்டும் உரைகள்
விவேகானந்தர் இந்தியா பற்றிக் கூறியது!
இந்தப் பூவுலகில் புனிதமான புண்யபூமி என்று உரிமை கொண்டாட ஒரு நாடு இருக்குமானால், மனிதகுலம் தம் கர்மபலன்களைக் கழிக்க வந்து சேர வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனித ஆன்மாக்களில் ஒவ்வொன்றும் இறைவனை அடைய வேண்டி தனது இறுதி வீடாக வந்து அடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனித குலம் பரந்த உள்ளத்தின் உச்சநிலையை, தூய்மையின் எல்லையை அமைதியை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் எல்லாவற்றிற்கும் மேலாக உள்முகமாகத் திரும்பிய, ஆன்மீகத்தைக் கொண்ட நாடு என்று ஒன்று இருக்குமானால் அது தான் இந்தியா ஆகும்!
விவேகானந்தர் ரிஷிகளைப் பற்றிக் கூறியது!
நமது ரிஷிகள் காலத்தால் முற்பட்டவர்கள். அவர்கள் கூறியதை எல்லாம் முற்றிலுமாக அறிய நாம் இன்னும் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்.
விவேகானந்தர் ஒரு ஹிந்து எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிக் கூறியது!
நான் கூறுவதைக் கவனத்தில் கொள்ளுங்கள்! ஹிந்து என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உங்களுக்குள் சக்தி மின் அலையைப்போலப் பாயவேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே தான், நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதர், எந்த நாட்டினராயினும், நமது மொழியோ அல்லது வேற்று மொழியோ பேசினாலும், அந்தக் கணமே உங்களுக்கு மிகமிக நெருங்கியவராகவும், இனியவராகவும் ஆகிவிட வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே தான், நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதருக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே தான், நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
விவேகானந்தர் தனது எண்ணங்கள் எங்கிருந்து வருகிறது என்பது பற்றிக் கூறியது!
ஆ! என்ன ஒரு அமைதி! எனது எண்ணங்கள் அனைத்தும் வெகு வெகு தூரத்திலிருந்து எனது இதயத்தின் ஆழத்திலிருந்து வருவதாகத் தோன்றுகிறது!
விவேகானந்தர் தன்னைப் பற்றித் தனது கடைசி நாளில் கூறியது!
விவேகானந்தர் என்ன செய்தார் என்பதை இன்னொரு விவேகானந்தரால் தான் புரிந்து கொள்ள முடியும். இன்னும் காலப்போக்கில் எத்தனை விவேகானந்தர்கள் தோன்றப் போகிறார்கள்?
விவேகானந்தர் இன்னும் ஏராளமான விவேகானந்தர்கள் தோன்றப் போகிறார்கள் என்று கூறியது!
நான் இறந்த பிறகு விவேகானந்தர்களே இனி இருக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறாயா நீ? விவேகானந்தர்களுக்குப் பஞ்சமே இருக்காது - உலகிற்கு அவர்கள் தேவையெனில்! ஆயிரக்கணக்கான, பல லட்சக்கணக்கான விவேகானந்தர்கள் தோன்றுவர் - எங்கிருந்து? யாருக்குத் தெரியும்? ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயமாக அறிந்து கொள்! நான் செய்த பணி விவேகானந்தரின் பணி அல்ல. இது அவனுடைய பணி! இறைவனின் சொந்த வேலை! ஒரு கவர்னர்-ஜெனரல் பணி ஓய்வு பெற்று விட்டால் இன்னொருவர் அவரிடத்திற்கு சக்கரவர்த்தியால் அனுப்பப்படுவார் என்பது நிச்சயம்!
விவேகானந்தர் எதிர்கால இந்தியா பற்றிக் கூறியது!
நான் எதிர்காலத்தின் உள்ளே நுழைந்து பார்க்கவில்லை. அப்படிப் பார்க்கவும் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் ஒரே ஒரு காட்சியை மட்டும் பிரத்யக்ஷமாக தெளிவாக நான் காண்கிறேன். நமது புராதன அன்னையானவள் மீண்டும் எழுந்து விட்டாள் என்பதையும் அவள் தனது எழுச்சி பெற்ற சிம்மாசனத்தில் இன்னும் அதிகப் புகழுடன் மீண்டும் அமர்கிறாள் என்பதையும் நான் காண்கிறேன்.