பிரெய்லி என்பது வெறும் மொழியல்ல; பார்வையற்றோருக்கான வரப்பிரசாதம்!

ஜனவரி 4: உலக பிரெய்லி நாள்!
World Braille Day
World Braille Day
Published on

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 4 ஆம் நாளன்று, உலக பிரெய்லி நாள் (World Braille Day) கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற கூட்டத்தில், பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடு உடையோர் ஆகியவர்கள் மனித உரிமைகளை முழுமையாக உணர்ந்து கொள்ள உதவும் பிரெய்லி எழுத்துமுறையின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையிலும், அந்த பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கிய லூயிஸ் பிரெயில் என்பவரின் பிறந்த நாளான ஜனவரி மாதம் 4 ஆம் நாளைச் சிறப்பிக்கும் வகையிலும், அந்நாளில் உலக பிரெய்லி நாள் கொண்டாடப்படும் என்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு முதல், உலக பிரெய்லி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரான்சைச் சேர்ந்த லூயிஸ் பிரெய்ல் என்பவர், அவருடைய மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்துக் கொண்டு விளையாடும் போது, எதிர்பாராத விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது. உரிய மருத்துவம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில், அக்கண்ணை இழக்க நேரிட்டது. அதன் பிறகு, பரிவுக்கண் நோய் (Sympathetic Ophthalmia) காரணத்தினால், அவர் இன்னொரு கண்ணையும் இழந்தார். முழுமையாக, பார்வையினை இழந்த அவர், பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற புதிய எழுத்து முறையினை அவரது 15 ஆம் வயதில் கண்டறிந்தார். அந்த எழுத்து முறையானது, அவரது பெயரைக் கொண்டே ‘பிரெய்லி எழுத்து முறை’ என்று அழைக்கப்பட்டது.

பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர். ஒவ்வொரு பிரெயில் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் அடுக்காக உயர்த்தப்பட்டு, அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையலாம். இலக்கணக் குறிகளுக்குத் தனி எழுத்துகள் உண்டு.

பிரெயிலி எழுத்து முறையின் கருத்ததமைவை அடிப்படையாகக் கொண்டு, கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்ட பிரித்தானியப் பல்துறையறிஞர். சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய இரகசிய தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது. பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரேயிலை சந்தித்து, லூயி பிரெயிலின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறிமுறையை மாற்றி அமைத்தார்.

பிரெய்லி எழுத்துமுறை எந்த மொழிக்கும் சொந்தமில்லை. ஆனால், உலகின் பெரும்பான்மையான மொழிகளில் அந்தக் குறியீடுகள் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. பிரெய்லி குறியீட்டு முறை ஆங்கிலத்தில், அந்தந்த நாட்டு வழக்கத்திற்கேற்ப சில வித்தியாசங்களுடன் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக அமெரிக்க ஆங்கில வழக்கத்திற்கும், பிற நாட்டில் பயன்பாட்டிலுள்ள ஆங்கிலப் பயன்பாட்டிற்கும் வித்தியாசம் இருந்தது. இந்த வேற்றுமை களையப்பட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு உலகம் முழுமைக்கும் ஒருங்கிணைந்த ஆங்கில பிரெய்லி குறியீட்டு வழக்கம் ஏற்கப்பட்டது. அமெரிக்காவும், அதுவரை வழக்கத்தில் இருந்த அமெரிக்க பிரெய்லி எடிசனை மாற்றி, ஒருங்கிணைந்த ஒருமித்த ஆங்கில பிரெய்லி (Unified English Braille - UEB) குறியீட்டை ஏற்றது.

இதையும் படியுங்கள்:
13-ந்தேதி தொடங்கும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'!
World Braille Day

பிரெய்லி என்பது ஒரு மொழியல்ல. அது பேசு மொழியாகவும் இல்லை. பார்வையற்றவர்களுக்கான எழுத்துக் குறியீடு மொழியாக மட்டுமே உள்ளது. சைகை குறியீடு போலவே இதுவும் குறியீடாகவே ஏற்கப்படுகிறது. இதே போல், இசைக் குறியீடுகளை குறிப்பிடும் பிரெய்லி இசை குறியீட்டு மொழி உள்ளது. வங்கிகளில் பார்வையற்றவர்கள் பணமெடுக்கும் வழியில், சில பணமெடுக்கும் எந்திரங்களில் சிறப்பு பிரெய்லி முறை பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
திருப்பதிக்கு டஃப் கொடுக்கும் சபரிமலை - கடந்தாண்டு மண்டல பூஜை வருமானம் ரூ.297 கோடி!
World Braille Day

தொடருந்துகள், விமானங்கள் மற்றும் பெரிய கட்டிடங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் போன்ற பல பொது இடங்களில் பிரெய்லி குறியீடுகளைப் பார்க்கலாம். பல்வேறு நாடுகளில் உணவு விடுதிகளிலும், பொருட்களின் முத்திரைச் சீட்டுகளிலும், ஓட்டு எந்திரங்களிலும் கண்டிப்பாக பிரெய்லி எழுத்துகள் இடம் பெற வேண்டும் என்ற விதிகள் உள்ளன.

பிரெய்லி எழுத்துகளை அச்சிட, மற்ற மொழி எழுத்துகளை விட நிறைய இடம் தேவைப்படும். மேலும், குறித்த இடைவெளியும் அவசியமாகும். எனவே, பிரெய்லி புத்தகங்கள் அச்சிடுவது அதிக செலவு கொண்டதாக இருக்கிறது. இருப்பினும், பார்வையற்றவர்களுக்காக, பிரெய்லி எழுத்துக் குறியீடுகளைக் கொண்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், சுமார் 2500 பிரெய்லி எழுத்துக்களைக் கொண்ட நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி... எப்போ தெரியுமா?
World Braille Day

பார்வையற்றவர்களுக்கான கல்வி முறைக்கு ஏற்றதான பிரெய்லி எழுத்து முறையினைக் கண்டறிந்த லூயிஸ் பிரெய்லியினை நினைவைப் போற்றும் விதமாக, பிரான்சு அரசு 1952 ஆம் ஆண்டில், அவரது பிறந்த ஊரில் புதைக்கப்பட்டிருந்த அவரது உடலை எடுத்து, பிரான்சில் புகழ்பெற்ற அடக்கத்தலமான பேந்தியான் (Pantheon) எனுமிடத்தில் முழு அரசு மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்து சிறப்பித்தது. உலக நாடுகள் பலவும் இவரது அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயங்களை வெளியிட்டு பெருமைப்படுத்தி இருக்கின்றன. இந்திய அரசும் இவரது படம் பொறித்த 2 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டுச் சிறப்பு செய்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com