

சன்மார்க்கத்தை நிறுவிய வடலூர் வள்ளலார் பிரானின் வாழ்க்கை உலகத்தையே பிரமிக்க வைக்கும் ஒரு வாழ்க்கையாகும். சமீப காலத்தில் வாழ்ந்து உடலுடன் மறைந்த அவரைப் போன்ற ஒரு பெரும் மகானை உலகம் கண்டதில்லை! அவரது அருள் உள்ளம் அகண்டது விரிந்தது; ஆழமானதும் கூட!
பசிப்பிணி போக்கிய மகான்!
வள்ளலார் 1867ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி – பிரபவ வருடம் வைகாசி மாதம் 11ம் தேதி வியாழக்கிழமையன்று சத்திய தருமச்சாலையை நிறுவினார். இதில் பசி அகற்றும் பேரறம் நடைபெற ஆரம்பித்தது. இன்று வரை இது குன்றாது நடைபெற்று வருகிறது. சாலைக்கு வருவோரிடத்தில் எந்த வித வேறுபாடும் பார்க்கப்பட மாட்டாது. வந்தோரின் பசியைத் தீர்ப்பதே ஜீவ காருண்யம் என்ற அடிப்படையில் இது நடைபெற்று வருகிறது.
தெய்வீகத் தமிழின் பெருமையை உணர்த்திய மகான்!
தமிழ் மொழியின் ஆற்றலை அவரைப் போல உணர்ந்தவரும் உணர்த்தியவரும் வேறு யாருமில்லை என்றே கூறலாம். தமிழின் தெய்வீகத் தன்மையை அவர் பலமுறை விளக்கியுள்ளார். விவாதங்களில் ஈடுபட்டு அவருடன் வாதம் செய்ய வந்தவர்கள் அவரின் தெய்வீக ஆற்றலையும் அறிவையும் கண்டு வியந்து அவரிடம் அருள் வேண்டி நிற்பது வழக்கமாயிற்று.
தமிழ் என்பது இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழி என்று விளக்கிய அடிகளார், தமிழ் என்ற சொல்லில் உள்ள மூன்று எழுத்துக்களில் 'த' என்பது சிவரூப உண்மை என்றும், 'மி' என்பது ஜீவான்மாக்களுக்கு ஆன்ம ஆதாரம் என்றும், 'ழ்' என்பது எல்லா மொழிகளிலும் உள்ள சந்தஸ்களை தன் மொழியில் அடக்கிய தனித்தலைமைப் பெருமை சிறப்பியல் ஒலி என்றும் கூறினார்.
அத்துடன் தமிழ் மொழியே அதிக சுலபமாக சுத்த சிவானுபூதியைக் கொடுக்கும் மொழி என்றும் கூறி அருளினார்.
ஒரு முறை திருவாசகத்தின் உண்மைப் பொருளை அறிய விரும்பிய மகா வித்வான் ஒருவர் அவரை அணுகி திருவாசகத்தின் முதல் அகவலுக்குப் பொருளை விளக்குமாறு வேண்டினார். அடிகளும் இசைந்தார். முதல் அகவலில் முதல் எழுத்தாகிய ‘ந’ என்ற எழுத்தைப் பற்றி அவர் விளக்க ஆரம்பித்தார். இரண்டு மணி நேரம் 64 லட்சணங்களையும் அவர் விளக்கி வரவே, வித்வான் பிரமித்துப் போய் அதைக் கேட்பதற்குத் தமக்கு ஆற்றல் இல்லை என்று அடிகளைப் பணிந்து சென்றார்.
இரஸவாத வித்தை மகான்!
அடிகளார் செம்பு, ஈயம், இரும்பு முதலிய உலோகங்களை தங்கம் மற்றும் வெள்ளியாக மாற்றும் அபூர்வ ஆற்றல் படைத்தவர். அன்பர்களுக்கு இதைச் செய்து காட்டி விட்டு அவற்றையும் அவற்றை மாற்றுவதற்காகச் சேகரித்த பொருள்களையும் யாருக்கும் கிட்டாதபடி கேணிகளிலும் குளங்களிலுமாகத் தூக்கி எறிந்து விடுவது அவர் பழக்கம். அவர் இப்படி தங்கமாக மாற்றும் செய்கையை அருகிலிருந்து பார்த்த வேம்பையர் என்பவர் தானும் அந்தப் பொருள்களைச் சேகரிக்க ஆரம்பித்தார்.
யாரும் அறியாத ஒரு இடத்தில் தானும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தார். அப்போது திடீரென்று அவர் கண்கள் ஒளியை இழந்தன. எவ்வளவோ முயன்றும் கண்பார்வை வரவே இல்லை. கடைசியாக அவர் அடிகளிடம் வந்து நடந்தவற்றை மறைக்காமல் கூறித் தனது பிழையை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினார். அடிகளார் அவரை மன்னிக்கும் விதமாகப் புன்னகை பூத்தவாறே தண்ணீரைக் கொண்டு அவரது கண்களில் தடவ அவர் மீண்டும் பார்வையைப் பெற்றார்.
மருத்துவ மகான்!
வள்ளலாருக்கு உலகில் உள்ள அனைத்து மூலிகைகளைப் பற்றியும் தெரியும். சுமார் 485 மூலிகைகள் பற்றியும் அவற்றின் மருத்துவ குணங்களையும் அவர் விளக்கியுள்ளது இன்றும் நமக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.
ஜோதியில் கலந்த ஜோதி!
வள்ளலாரின் வாழ்க்கை சமீப காலத்தில் வாழ்ந்த ஒரு அற்புத அருளாளரின் வாழ்க்கையாகும். நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வாழ்க்கையும் கூட!
ஶ்ரீ முக வருடம் தை மாதம் (30-1-1874) 19ம் நாள் வெள்ளிக்கிழமை பூச நட்சத்திர தினத்தன்று தனது அறையிலிருந்து வெளியே வந்த அடிகள் அன்பர்களை அழைத்து தாம் அறைக்குள் சென்று உடம்பை மறைத்துக் கொள்ளப் போவதாகக் கூறினார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபட்டு உய்யுங்கள் என்று அருளுரை பகர்ந்து தனது திருவறைக்குள் இரவு 15 நாழிகையில் (இரவு 12 மணி) சென்று கதவைத் திருக்காப்பிட்டுக் கொண்டார். இரண்டரை நாழிகையில் ஜோதியோடு ஜோதியாகக் கலந்தார்.
அவரது வாழ்க்கையை நன்கு அறிவது தமிழரது கடமையாகும்.
அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை!