
தமது உணர்ச்சிமிகு கவிதைகளால் மக்களின் சுதந்திரப் போராட்ட தாகத்தை தட்டியெழுப்பியவர் மகாகவி பாரதியார். இவரது நினைவு தினம் இன்று. அவரது வாழ்வில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை இந்தப் பதிவில் காண்போம்.
பள்ளியில் படிக்கும்போதே சுப்பிரமண்ய பாரதியின் கவியாற்றலைக் கேள்வியுற்ற அவரது தமிழாசிரியர், ‘மேகம் போல் கவி பொழிவாயாமே, காளமேகம் இப்போது பொழியட்டுமே!’ என்று கூறினாராம். அதைக் கேட்டு பாரதியார் சற்றும் தயங்காமல், ‘ஐயா, இது தெரியாதா? காளமேகம் தனக்குத் தோன்றியபொழுதே மழை பெய்யும். பிறர் கட்டாயத்திற்குப் பொழியாதே!’ என்று பதில் கூறினாராம்.
பால்ய விவாகம் நடைபெற்ற காலம் அது. அக்காலத்தில் திருமணம் முடிந்தவுடன் கணவன், மனைவி பேசுவதில்லை. கணவனைக் கண்டவுடன் மனைவி ஓடி ஒளிந்து கொள்வது வழக்கத்தில் இருந்தது. ஆனால், இவர் மட்டும் வித்தியாசமாக நடந்து கொண்டார். திருமணம் முடிந்தது. உடனே மண விழாவில் கலந்து கொண்ட எல்லோர் முன்னிலையிலும் மணமகளை நோக்கி,
‘தேடிக் கிடைக்காத சொர்ணமே
உயிர் சித்திரமே பட அன்னமே
கட்டியணைத்தொரு முத்தமே - தந்தால்
கை தொழுவேன் உனைநித்தமே!’
என்று காதல் பாட்டு பாடினார். மணமகளுக்கு நாணத்தால் முகம் சிவந்தது. அப்போது மணமகனுக்கு வயது 14. மணமகளுக்கு வயது 7. அந்ந மணமக்கள் யார் தெரியுமா? பாரதியார் - செல்லம்மாள்தான்.
பாரதியார் முதலில் ‘மிஸ்டர் சி.சுப்பிரமணிய பாரதி’ என்று தனது பெயரை வெளியிட்டிருக்கிறார். பின்னர் காளிதாசன், சக்தி தாசன் என்ற புனைப்பெயரில் எழுதியிருக்கிறார். தமது சொந்த பெயரில் எழுதும்பொழுது ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதி என்று குறிப்பிட்டுள்ளார்.
பாரதியாரால் உபநயனம் செய்விக்கப்பெற்ற ஹரிஜன இளைஞர் ரா.கனகலிங்கம் என்பவர் ஒரு சமயம் பாரதியாரிடம், ‘சுவாமி, உங்கள் தேசிய கீதங்களை நல்ல ராகங்களில் பாடாமல் கும்மி, காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து போன்ற மெட்டுகளில் ஏன் பாடுகிறீர்கள் ?’ எனக் கேட்டார். அதற்கு பாரதியார், ‘எனது பாட்டு தேசிய கீதமானதால் மூட்டை தூக்கும் ஆள் முதற்கொண்டு பாகவதர் வரையில் எல்லோரும் சுலபமாகப் பாட வேண்டும் என்பதால்தான்’ என்று பதில் கூறினார்.
திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும், தென் காசியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது கடையம். இங்குள்ள நித்யகல்யாணி சமேத வில்வவனநாதர் கோயிலின் முன்புள்ள வட்டப்பாதையில் அமர்ந்துதான் மகாகவி பாரதியார் புகழ் பெற்ற ‘காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும்’ என்ற பாடலை எழுதினார். காரணம் இவ்வூரின் மாப்பிள்ளை அவர். இவ்வூரைச் சேர்ந்த செல்லம்மாளைத்தான் அவர் மணம் புரிந்தார்.
ஒரு பத்திரிகைக்கு பல விலைகள் இருக்குமா? அதை செய்து சாதித்துக் காட்டியவர் பாரதியார். தாம் நடத்திய 'இந்தியா' பத்திரிகையின் சந்தா விகிதங்களை தனி பாணியில் அவர் நிர்ணயிதார். அதாவது, எல்லா கவர்மெண்டாருக்கும் 50 ரூபாய், ராஜாக்கள், ஜமீன்தார்களுக்கு 30 ரூபாய், மாதம் 200 ரூபாய்க்கு மேற்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு 15 ரூபாய், மற்றவர்களுக்கு 5 ரூபாய்.
1905ல் ‘இந்தியா’ பத்திரிகையின் மூலம் உலகில் முதன் முதலில் கேலிச் சித்திரங்களை அறிமுகப்படுத்தினார். முதன் முதலில் தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் ஆண்டு, மாதம் குறித்தவர், தமிழ் எண்களைப் பயன்படுத்தியவர் பாரதியார்தான்.
ஒரு சமயம் பொதுக் கூட்டம் ஒன்றுக்கு பாரதியார் பேசச் சென்றிருந்தார். கூட்டம் முடிந்ததும் பாரதியாரைப் பார்த்து, ‘தங்களுக்கு என்ன பலகாரம் சாப்பிட வேண்டும்’ என்று கேட்டார் கூட்ட அமைப்பாளர். உடனே பாரதியார், ‘எனக்கு வீரப் பலகாரம்தான் வேண்டும். வாங்கி வரச் சொல்லுங்கள்’ என்றார்.
‘வீரப் பலகாரமா? அது என்ன பலகாரம்? இதுவரை நாங்கள் கேள்விப்பட்டதில்லையே’ என்றார் அவர். அருகில் இருந்தவர்களும் திகைத்து நின்றனர்.
அதைக் கண்ட பாரதியார், ‘என்ன, நான் சொல்வது புரியவில்லையா? மெதுவடை, பஜ்ஜி, இட்லி இவையெல்லாம் கோழைப் பலகாரங்கள். பக்கோடா, முறுக்கு, காராபூந்தி இவையெல்லாம் வீரப் பலகாரங்கள். வாய்க்குள் இவற்றைப் போட்டதும் ‘கடக்கு முடக்கு’ என்று பல்லுக்கு வீரமான வேலை கொடுக்கும் அல்லவா?’ என்று விளக்கம் கூறினார்.
தம்மை கீழே தள்ளிய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையை பற்றி பாரதியார், ‘சுதேசமித்ரன்’ பத்திரிகை கட்டுரை ஒன்றில் இப்படி எழுதி உள்ளார். ‘யானை இன்னார் என்று தெரியாமல் தள்ளி விட்டது. தெரிந்திருந்தால் தள்ளியிருக்காது, துன்புறுத்தும் எண்ணமிருந்தால் கீழே விழுந்ததும் தூக்கி எறிந்திருக்காதா? அல்லது கால்களினால் துவைத்திருக்காதா? அப்படியே நின்றதன் அர்த்தம் என்ன? என்னிடம் உள்ள அன்பே காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் உற்ற நண்பர் பாரதியார். அவர் தாம் ஆவி துறக்கும்போது பாரதியாரின், ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ என்ற பாடலைப் பாடும்படிக் கேட்டே உயிர் துறந்தார்.