
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே 21 ஆம் நாளன்று, தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு நாள் (National Anti-Terrorism Day) கடைப்பிடிக்கப்படுகிறது. பயங்கரவாதத்தின் பேரழிவு தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பயங்கரவாதச் செயல்களால் இழந்த உயிர்களை நினைவு கொண்டு சிறப்பித்தல் மற்றும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
1991-ம் ஆண்டு, தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில், இலங்கையில் செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பினைச் சேர்ந்த பெண் ஒருவரால், தற்கொலை குண்டு வெடிப்பின் மூலம், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்விற்குப் பிறகு, வி.பி. சிங் தலைமையிலான அரசு, மே 21-ம் நாளை தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அறிவித்தது. அப்போதிருந்து, அந்த துயரமான இழப்பை நினைவு கூரும் விதமாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியை வலுப்படுத்தவும் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூரப்படுகிறது.
தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு நாள், உள்நாடு மற்றும் பன்னாட்டளவில் பயங்கரவாதம் மனித உயிருக்கும் தேசிய பாதுகாப்புக்கும் எவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது என்பதை நினைவூட்டுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமை உணர்வை வளர்ப்பதற்காக விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்ற செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், இந்நாளுக்கென்று ஒரு கருப்பொருள் அறிவிக்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாகவும், அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடிய நாடாகவும் இருக்கும் இந்தியா, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும் வலுவான சட்டக் கட்டமைப்புகளை இயற்றியுள்ளது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அல்லது ஆதரிப்பவர்களுக்கு எதிராகச் சட்ட அமலாக்க முகமைகள் விரைவாகவும் திறம்படவும் செயல்பட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாளைக் கடைபிடிப்பது பல முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது: அவற்றுள்;
* பயங்கரவாதத்தின் ஆபத்துகள் மற்றும் தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசத்தின் மீது அதன் தீங்கு விளைவிக்கும் தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடிகிறது .
* கல்வி, ஆலோசனை மற்றும் சமூக ஆதரவை வழங்குவதன் மூலம் இளைஞர்கள் தீவிரவாதக் குழுக்களில் சேருவதைத் தடுக்க முடிகிறது.
* சாதி, சமயம், இனம் அல்லது மண்டல வேறுபாடின்றி அமைதியையும், தேசிய ஒற்றுமையையும் வளர்க்கிறது.
* பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சிறப்பிக்கவும், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் தியாகங்களை அங்கீகரிக்கிறது.
* சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைப் பற்றிப் புகாரளிக்கவும், தேசியப் பாதுகாப்பிற்கு பங்களிக்கவும் குடிமக்களை அனுமதிக்கும் வகையில், விழிப்புணர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது.
போன்றவை முதன்மை நோக்கங்களாக இருக்கின்றன.
இந்நாளில், இந்தியா முழுவதுமுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. இந்த உறுதிமொழியானது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் மனித உயிர்களையும் ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாப்பதற்கும் ஒரு உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்குகள், விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற கல்வி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
கலாச்சார அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அமைதி மற்றும் ஒற்றுமை பற்றிய செய்திகளைப் பரப்புவதற்காக சமூக அடிப்படையிலான திட்டங்களை நடத்துகின்றன.
பயங்கரவாத எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைய ஊடகப் பரப்புரைகள், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தொடங்கப்படுகின்றன.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ராஜீவ் காந்தி மற்றும் பிறரின் நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும், பேரணிகளும் நடத்தப்படுகின்றன.