

கர்நாடக இசைத்துறையில் புகழ் பெற்ற பாடகராகவும், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி என்று பல மொழிகளில் பாடல்களைப் பாடி, இசையரசி, இசைப் பேரரசி, இசைக்குயில், இசை ராணி என்று பலராலும் இன்றும் அழைக்கப்படுபவர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஐக்கிய நாடுகள் அவையில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர்.
மதுரையில் வழக்கறிஞராகப் பணியாற்றிய சுப்பிரமணிய ஐயர் - இசைக்கலைஞர் சண்முகவடிவு அம்மாள் இணையருக்கு 1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் நாளன்று மகளாகப் பிறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி, தனது பத்தாவது வயதில் தந்தையை இழந்த நிலையில், வீணை இசைக் கலைஞரான சண்முகவடிவு அம்மாளின் பராமரிப்பில் வளர்ந்தார். இவருடைய சகோதரர் சக்திவேல் மிருதங்க இசையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இதேபோன்று, இவரது சகோதரி வடிவாம்பாள் வீணை இசை மீட்டுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரின் பாட்டி அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞராக இருந்தார். குடும்பத்தினர் அனைவரும் இசைக்கலைஞர்களாக இருந்ததால், முழுக்க முழுக்க இசைச்சூழலில் வளர்ந்த இவர், சிறு வயதிலேயே பாடல்கள் பாடுவதில் தனித்திறன் பெற்றவராகவும் இருந்தார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவாக இருந்தார். சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும்போது சென்னை ஆளுநர், சண்முகவடிவின் வீணை இசையை ஒளிப்பதிவு செய்யச் சென்றார். அப்போது மகளையும் பாடச் சொன்னார். அப்போது சிறுமியாக இருந்த எம்.எஸ். சிறிதும் தயங்காமல், ‘மரகத வடிவம்’ என்ற செஞ்சுருட்டி ராகப் பாடலை உச்சஸ்தாயியில் பாடினார். அதனைக் கேட்ட ஆளுநர் ஆச்சரியமடைந்து அப்பாடலையும் ஒளிப்பதிவு செய்து கொண்டார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தாயார் சண்முகவடிவு அம்மாள் ஒரு மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்தபோது, சிறுமியாக இருந்த சுப்புலட்சுமி அங்கிருந்து வெளியில் சென்று சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சண்முக வடிவு அம்மாளுக்கு திடீரென்று மகளின் நினைவு வர, அருகிலிருந்தவரிடம் அவளைத் தேடி அழைத்து வருமாறு சொன்னார். விளையாடிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட வியர்வையுடன் மேடைக்கு வந்த சிறுமி சுப்புலட்சுமியை, அவரது தாயார் பாடும்படிச் சொல்ல, தனது முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்து விட்டு, அற்புதமாகப் பாடினார். அங்கிருந்த மக்கள் ‘இவள் தாயை மிஞ்சி விடுவாள்’ என்று சொல்லி கைதட்டி ஆரவாரம் செய்தனர். சிறுமியாக இருந்த சுப்புலட்சுமிக்கு அந்தக் கைத்தட்டலின் பொருள் தெரியவில்லை. மீண்டும் அங்கிருந்து வெளியேறி விளையாடச் சென்று விட்டார்.
இப்படி விளையாடிக் கொண்டிருந்த சிறு வயதிலேயே பாடத் தொடங்கிய இவரது முறையான கல்வி ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்தது. இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசியிடமிருந்து கற்றார். அப்துல் கரீம்கான் மற்றும் பாதே குலாம்கானின் இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.
1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.பி இசைத்தட்டில் ‘மரகத வடிவும் செங்கதிர் வேலும்’ எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து வெளிவந்தது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுவாகும். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை தொடக்க காலத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935ம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம்.எஸ்.சுப்புலட்சுமி கச்சேரி செய்தார். அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலைக் கேட்ட சிந்தாமணி திரையரங்கம் மற்றும் ராயல் டாக்கீஸ் நிறுவனருமான நாட்டாமை மல்லி, என்.எம்.ஆர்.வெங்கடகிருஷ்ணனும் இயக்குநர் கே.சுப்பிரமணியமும், எம்.எஸ்.சுப்புலட்சுமியை ‘சேவாசதனம்’ படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். பின்னாளில் அவரையே சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்டார்.
1941ம் ஆண்டு ‘சாவித்திரி’ என்ற படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆண் வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்ட நிலையில், அவரது கணவர் சதாசிவம் சொன்னதால், அவர் நாரதர் வேடத்தில் நடித்தார். அவர் இப்படத்தில் நடிப்பதற்காக கொல்கத்தா செல்லும் வழியில், சேவாக்ராம் சென்று அண்ணல் காந்தியடிகளைக் கண்டு பிரார்த்தனைப் பாடல்களை மனம் உருகப் பாடினார். அந்தக் கீதத்தில் மெய்மறந்த காந்திஜி ‘ஹரி தும் ஹரோ ஜன கீ பீர்' என்ற பஜன் எம்.எஸ்.ஸின் குரலில் நிச்சயமாக எனது பிரார்த்னையில் இடம் பெற வேண்டும்’ என்றார். உலகம் முழுவதிலும் அனைத்து மேடைகளிலும் மதச் சார்பில்லாமல் இசையை வழங்கி வந்த இவர், ரோமில் போப்பாண்டவரின் முன் தமது இனிய இசையை வழங்கி அவரது தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.
இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. கேதார்நாத்திலிருந்து கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மிகக் குரல் பரவசப்படுத்தியது. 1944ம் ஆண்டில் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி, இரண்டு கோடி ரூபாய் வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது.
இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது. திருப்பதி ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் பாடி, அதன் மூலம் கிடைத்த தொகையை அப்படியே திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் வேத பாடசாலைக்கு அளித்தார். இதேபோன்று, இலங்கை, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் இசைக் கச்சேரிகள் நடத்தி, அதில் கிடைத்த பணத்தை சமூகப் பணிகளுக்கு வழங்கினார்.
1966ம் ஆண்டு அக்டோபர் 23ம் நாளில் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி செய்தார். அதன் பிறகு, இந்த வாய்ப்பு இந்தியாவில் இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூதறிஞர் இராஜாஜி எழுதிய ‘குறையொன்றுமில்லை’ எனும் பாடலுக்கு சமயநல்லூர் வெங்கட்ராமன் இசையில், சுப்புலட்சுமி பாடிய பாடல் இன்று வரை பலரின் விருப்பப் பாடலாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பலரின் அலைபேசியில் இப்பாடல் அழைப்பொலியாக (Ring Tone) இடம் பெற்றிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
1954ம் ஆண்டில் விடுதலை பெற்ற இந்தியாவில் தேசிய விருதுகள் முடிவு செய்யப்பட்டபோது, முதல் ஆண்டிலேயே ‘பத்மபூஷன்' பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1956ம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது, 1968ம் ஆண்டில் சங்கீத கலாநிதி, 1970ம் ஆண்டில் சென்னை தமிழிசை சங்கத்தின் இசைப்பேரறிஞர் விருது, 1974ம் ஆண்டில் மக்சேசே பரிசு, 1975ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருது மற்றும் சங்கீத கலாசிகாமணி விருது, 1988 - 1989ம் ஆண்டில் காளிதாஸ் சம்மன் விருது, 1990ம் ஆண்டில் நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது, 1998ம் ஆண்டில் பாரத ரத்னா விருது போன்றவற்றையும் இவர் பெற்றார்.
சென்னையில் 2004ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று, அவரது 88ம் வயதில் இவ்வுலகை விட்டு நீங்கினார். இருப்பினும், இவரது இசைக்குரல் இந்திய மக்களிடம் நீங்காமல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.