இசுலாமியர்கள் கடைப்பிடிக்கும் ரமலான் நோன்பு - நடைமுறைகளும் விதிமுறைகளும்

இசுலாமியர்கள் கடைப்பிடிக்கும் ரமலான் நோன்பின் நடைமுறைகளையும், விதிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.
Ramadan Fasting
Ramadan Fastingimg credit - newsmeter.in
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

இசுலாமின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமையாக இருப்பது ரமலான் நோன்பு (Sawm). இந்நோன்பு நாட்களில் நோன்பு கடைப்பிடிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பு மிக்க ஓர் இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மாதத்திற்கு பல சிறப்புகள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும், இந்த மாதத்தில் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாவின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்.

பருவமடைந்த இஸ்லாம் ஆண், பெண் அனைவரும் நோன்பு இருப்பது கடமையாகும். இருப்பினும், சில அவசியங்களின் அடிப்படையில் நோன்பு இருப்பதிலிருந்து கீழ்காணும் நிலையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு கடைப்பிடிக்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

* பைத்தியக்காரர்கள், நன்மை தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் நோன்பு கடைப்பிடிப்பது கடமையில்லை. நோன்புக்கு பதிலாக ஏழைகளுக்கு உணவு ஏதும் கொடுக்க வேண்டியதுமில்லை.

* சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கிய பின் விடுபட்ட நோன்புகளை கடைப்பிடிக்க வேண்டும்.

* பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டு விட அனுமதியுள்ளது. ஊர் திரும்பிய பின் விடுபட்ட நோன்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* கருவுற்றிருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு கடைப்பிடிப்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டு விட அனுமதியுள்ளது. அந்தப் பயம் நீங்கிய பின் விடுபட்ட நோன்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்து விட்டால் நோன்பு நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* "நெருப்பு" மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பிறகு அந்த நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த நோன்பின் போது, சில ஒழுங்குகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அவை;

*. ஃபஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும், சூரியன் மறைந்த உடனே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.

* பேரிச்சம்பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

* ஸஹர் நேரத்தில் தாமதமாக எழுந்து ஃபஜ்ருடைய நேரம் வந்துவிட்டது என தெரிந்தும், ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக்கூடாது. இது போன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு கடைப்பிடிக்க வேண்டும்.

* ஹலால் என்னும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட உணவையே உட்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ரமலான் நோன்பு சமயத்தில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள சில டிப்ஸ்! 
Ramadan Fasting

* நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்த்திருத்தல் கட்டாயக் கடமையாகும்.

* ரமலான் கடைசிப் பத்து நாட்களில், அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும், இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவை தேடிக் கொள்ள வேண்டும்.

* பெருநாள் தொழுகைக்கு முன்பு ஸதகத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மத்தை முறையாகக் கொடுக்க வேண்டும்.

இருப்பினும் நோன்பின் போது சில அவசியமான, தேவையான செயல்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

* நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்வற்றிற்கு அனுமதியுள்ளது.

* காயங்கள், சிறுமூக்கு உடைதல், பல் பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது.

இதையும் படியுங்கள்:
ரமலான் கற்றுக் கொடுக்கும் 5 முக்கியமான வாழ்க்கைப் பாடங்கள்!
Ramadan Fasting

*. நோன்பு நாட்களின் பகல் பொழுதில் பல் துலக்குவது தவறில்லை. மாறாக, அது நோன்பல்லாத நாட்களில் சுன்னத்தாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும்.

* குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. அதற்கு அடுத்து வரும் சுப்ஹு தொழுகைக்காக குளித்துக் கொண்டால் போதுமானது.

* கடுமையான வெயிலின் காரணமாக, குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்வதோ, குளிர் சாதனங்களை உடல் மீது பயன்படுத்துவதிலோ, பகல் மற்றும் மாலைப் பொழுதில் குளித்துக் கொள்வதிலோ தவறில்லை.

* நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால், நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொண்டு பிறகு வாய்ப்புக் கிடைக்கும் போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.

* வாய் கொப்பளிக்கும் போது, தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கி விட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டைவரை தண்ணீரைச் செலுத்தாமல் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ரமலான் - சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதம்!
Ramadan Fasting

* நேரம் தெரியாமல் சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து, ஃபஜ்ர் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டு விட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

* மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோ விட்டால் நோன்பு முறியாது. ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவைகளைத் தவிர்த்து, சில செயல்பாடுகள் நோன்பை முறிக்கும் செயல்கள் என்று இருக்கின்றன. அவை;

* சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவை உடலுக்குப் பயன் தராத புகைப்பிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும்.

* முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.

* வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.

* உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும்.

* மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும்.

இதையும் படியுங்கள்:
‘ரமலான் பெருநாள்’ மட்டும் உலகப் பயன்பாட்டிலிருக்கும் குறிப்பிட்ட மாதங்களில் வருவதில்லையே ஏன்?
Ramadan Fasting
logo
Kalki Online
kalkionline.com