

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் நாளன்று, ‘உலகக் கழிவறை தினம்’ (World Toilet Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2001ம் ஆண்டில், நவம்பர் 19ம் நாளில் ‘உலகக் கழிவறை அமைப்பு’ ஆரம்பிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் உலகளாவிய முறையில் இந்நாளை உலகக் கழிவறை நாளாகக் கொண்டாடி வந்தன. 2013ம் ஆண்டு, ஜூலை மாதத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொது சபைக் கூட்டத்தில், நவம்பர் 19ம் நாளை ஐக்கிய நாடுகளின் உலகக் கழிவறை நாளாகக் கொண்டாட வேண்டுமென்று சிங்கப்பூர் ஒரு கோரிக்கையை முன் வைத்தது. அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடந்து, ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் இந்நாளைக் கொண்டாடி வருகின்றன.
அடிப்படைக் கழிவறை வசதிகள் செய்தல், அதன் வழியாகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
உடல் கழிவுகளான மலம், சிறுநீர் ஆகியவற்றை உடலிருந்து அகற்றுவது மனிதனின் அன்றாடத் தேவைகளில் ஒன்று. பெரும்பான்மையான நாடுகளில் 1800ம் ஆண்டுகளுக்கு முன்னர் காட்டுப்புறத்தில் அல்லது ஊரின் ஒதுக்குப்புற இடங்களில் மனிதர் உடல் கழிவுகளை அகற்றினர். சில ஐரோப்பிய நாடுகளில் அறை தொட்டி (Champer Pot) பயன்படுத்தப்பட்டது. 1800ம் ஆண்டுக்குப் பின்னர், தற்காலத்தியப் பயன்பாட்டிலிருந்து வரும் கழிவறை (Toilet) முறையும் அதை அப்புறப்படுத்தும் முறையும் நடைமுறைக்கு வந்தது.
நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், நமது சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்கவும் வேண்டியிருக்கிறது. உலகில் பில்லியன் கணக்கான மக்கள் பாதுகாப்பான கழிப்பறை வசதி இல்லாமல் வாழ்கின்றனர். இதில் ஏழைகள் குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பொது சபையின் 2025ம் ஆண்டுக்கான உலகக் கழிவறை நாள் குறிப்பில், கழிப்பறைகள் அனைத்தும்,
* அனைவரும் அணுகக்கூடியது,
* வெள்ளம், வறட்சி மற்றும் பிற காலநிலை அதிர்ச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது,
* பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதாக இருக்க வேண்டும்,
* வலுவான அமைப்புகள் மற்றும் நிலையான முதலீட்டால் ஆதரிக்கப்பட வேண்டும்,
* சுகாதார வசதிகளை அணுகுவது ஒரு மனித உரிமை. ஆரோக்கியமான, கண்ணியமான, உற்பத்தித் திறன் மிக்க வாழ்க்கைக்கு அடிப்படை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பான, நீடித்த கழிப்பறை வசதி கிடைத்தால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி, மிகவும் அமைதியான மற்றும் வளமான உலகத்திற்கான அடித்தளத்தை உருவாக்க முடியும். அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் கழிப்பறைகள் தேவை. உலகம் எப்படி மாறினாலும், சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. கழிப்பறைகளுக்கான நமது தேவை அவற்றில் ஒன்று என்பதை உணர்ந்து, எதிர்காலத்திற்கு ஏற்றவாறு கழிப்பறைகளை உருவாக்குவோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்;
* 3.4 பில்லியன் மக்கள் இன்னும் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் சுகாதார சேவைகள் இல்லாமல் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி.
* 354 மில்லியன் மக்கள் இன்னும் திறந்தவெளியில் மலம் கழிப்பதைப் பின்பற்றுகிறார்கள். இது குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நோய் மற்றும் தீங்கு விளைவிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
* பாதுகாப்பற்ற நீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் ஆகியவை ஒவ்வொரு நாளும் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 1,000 குழந்தைகளின் இறப்புகளுக்குக் காரணமாகின்றன.
* தற்போதைய முன்னேற்ற விகிதத்தில், 2030ம் ஆண்டிலும் 3 பில்லியன் மக்கள் பாதுகாப்பான கழிப்பறைகள் இல்லாமல் வாழ்வார்கள்.
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உலகக் கழிவறை நாளுக்கான செய்தியில்,
* அதிகரித்து வரும் காலநிலை அழுத்தங்கள், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றால் மாற்றியமைக்கப்பட்ட உலகில், பாதுகாப்பான சுகாதாரம், பொது சுகாதாரம் மற்றும் மனித கண்ணியத்தின் ஒரு மூலக்கல்லாக உள்ளது.
* எளிமையான கழிப்பறை முன்னேற்றத்தின் சின்னமாகும். நோயைத் தடுப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் கண்ணியத்தையும் வாய்ப்பையும் பாதுகாப்பது.
* பாதுகாப்பான சுகாதாரம் இல்லாமல், நிலையான வளர்ச்சி தடுமாறுகிறது.
* மாசுபட்ட நீர் வயிற்றுப்போக்கு நோய்களைப் பரப்பக்கூடும், இது ஒரு நாளைக்கு 1,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொல்கிறது.
* சுத்திகரிக்கப்படாத மனிதக் கழிவுகள் சுற்றுச்சூழல் அமைப்புகளை மாசுபடுத்துகின்றன மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கின்றன.
* மில்லியன் கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு, பாதுகாப்பான கழிப்பறை இல்லாததால், வேலை மற்றும் பள்ளியைத் தவறவிட வேண்டியுள்ளது.
* கடந்த பத்தாண்டுகளில் 1.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான சுகாதார வசதியைப் பெற்றுள்ளனர். ஆனால், 3.4 பில்லியன் பேர் இன்னும் ஆபத்தில் உள்ளனர்.
* இந்த உலகக் கழிப்பறை நாளில் எளிதில் அணுகக்கூடிய, காலநிலைக்கு ஏற்ற, குறைந்த உமிழ்வு கொண்ட மற்றும் நன்கு நிதியளிக்கப்பட்ட எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் கழிப்பறைகளை விரைவாக அணுகுவதற்கான நேரம் இது.
* கழிப்பறை என்பது ஒரு சாதாரணமான அற்புதம். மேலும், அதை அணுகுவது உரிமைகள் மற்றும் உயிர் வாழ்வைப் பொறுத்தது.
அனைவருக்கும் பாதுகாப்பான சுகாதாரத்தை ஒரு யதார்த்தமாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.