போராட்டங்கள் மற்றும் கலவரங்களின் போது, கூட்டத்தைக் கலைக்கப் பயன்படுத்தும் கண்ணீர்ப் புகையால் பாதிப்பு ஏற்படாதா?
முதலாம் உலகப் போரில் வேதியியல் போர் முறையாக, கண்ணீர்ப் புகைக் குண்டு (Tear Gas) பயன்படுத்தப்பட்டது. கண்ணீர்ப் புகைக் குண்டு என்பது வேதியியல் கலவையிலான உயிரைப் பறிக்காத ஒரு ஆயுதமாகும். இது மனிதனின் கண்ணிலுள்ள கருவிழிப் படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்துகிறது. மேலும், தற்காலிகப் பார்வைக் குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது.
இதன் விளைவுகள் குறுகியக் காலமாக இருப்பதுடன், அரிதாகவே செயலிழக்கச் செய்வதால், போராட்டங்கள் மற்றும் கலவரங்களின் போது, கூட்டத்தைக் கலைக்கவும், கூட்டத்தினைக் கட்டுப்படுத்தவும் உலகம் முழுவதும் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
கண்ணீர் வாயு என்பது ஒரு தனிச் சேர்மம் அல்ல, ஆனால், கண்ணீர் வாயு முகவர்களாகச் செயல்பட்டு, சில விளைவுகளை ஏற்படுத்தும் பல்வேறு வேதிப்பொருட்களைக் குறிக்கிறது. சந்தையில் பல கண்ணீர் வாயுக்கான வேதிப்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றில் பின்வரும் மூன்று வகைகளே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
CS வாயு (o-chlorobenzylidenemalononitrile)
CN வாயு (chloroacetophenone) - பெரும்பாலும் மேஸ் என்ற வணிகப் பெயரில் விற்கப்படுகிறது.
OC ஸ்ப்ரே (oleoresin capsicum) - இது மிளகு ஸ்ப்ரே என்று அழைக்கப்படுகிறது.
மேற்காணும் மூன்று வகைகளில், CS வாயு என்பது ஒரு சக்தி வாய்ந்த முகவராக இருப்பதுடன், CN வாயுவால் ஏற்படும் வலுவான விளைவுகளை உருவாக்குகிறது. இருப்பினும், அதன் விளைவுகள் மிக விரைவாக மறைந்து விடும். இந்த மூன்று வகைகளும் வித்தியாசமாகச் செயல்படுகின்றன என்றாலும், அனைத்தும் சிறிய அளவிலான துன்பம் மற்றும் எரிச்சல் மூலம் தனி நபர்களைச் செயலிழக்கச் செய்ய அல்லது தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
கண்ணீர்ப் புகைக் குப்பியைப் பயன்படுத்தும் போது, அது காற்றில் எரிச்சலூட்டும் வேதிப்பொருட்களை வெளியிடுகிறது. இந்த முகவர்கள் விரைவாகச் செயல்பட்டு, வெளிப்படும் பகுதியில் இருப்பவர்களின் கண்கள், மூக்கு, வாய் மற்றும் நுரையீரலின் சளி சவ்வுகளை எரிச்சலூட்டுகின்றன.
இந்த வெளிப்பாடு கண்ணீர், தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், மூக்கில் நீர் வடிதல் மற்றும் சில வேளைகளில், கடுமையான காயம் மற்றும் சுவாசக் கோளாறு போன்ற நிரந்தரத் தீங்கு உள்ளிட்ட தொடர்ச்சியான எதிர்விளைவுகளுக்கு வழி வகுக்கிறது. கடுமையான துன்பம் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து தனி நபர்களைத் தப்பி ஓடக் கட்டாயப்படுத்துகிறது. இதனால், கூட்டத்தைக் கலைக்கக் கண்ணீர் புகை ஒரு பயனுள்ள கருவியாக அமைகிறது.
கண்ணீர் புகையில் CN வாயு அல்லது CS வாயு பரவலான பயன்பாட்டில் உள்ளது. இது உள்நாட்டு அமைதியின்மை அல்லது பெரிய போராட்டங்களின் போது பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் அல்லது காவல் துறையினர் போராடும் அல்லது எதிர்ப்பாகச் செயல்படும் கூட்டத்தை எதிர் கொள்ளும் போது கண்ணீர்ப் புகைப் பயன்பாட்டைச் செயல்படுத்துகின்றனர். திரவக் கண்ணீர் புகை ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு, கையெறிக் குண்டுகள் அல்லது வளிமக் கரைசல்களாக ஏவப்படுகிறது. இதனால் பரந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், விரைவாகக் கூட்டத்தைக் கலைக்க முடிகிறது.
போரில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் காரணமாக ஜெனீவா இதனைத் தடை செய்தது. 1993 ஆம் ஆண்டில் வேதியியல் ஆயுத மாநாடு, 1925 ஜெனீவா நெறிமுறையை வலுப்படுத்தியது. இராணுவப் படைகள் மீதான இந்தத் தடை, கண்ணீர்ப் புகைக் குண்டுகளின் பயன்பாடு குறித்து பன்னாட்டு அமைப்புகள் கொண்டுள்ள கடுமையான கவலைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இருப்பினும், கலவரக் கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காகச் சட்ட அமலாக்கத்தால் இந்த கூட்டக் கட்டுப்பாட்டு வேதியியல் பொருட்களின் உள்நாட்டுப் பயன்பாடு இன்னும் பல நாடுகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
கண்ணீர் புகை பயன்படுத்தப்படும் சூழ்நிலையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதன் விளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம். முடிந்த வரை விரைவாக, அந்தப் பகுதியை விட்டு விலகி புதிய காற்றைத் தேடுதல் நலமளிக்கும். பாதிப்பு ஏற்பட்டால், கண்களைத் தூய்மையான தண்ணீரில் கழுவுவதுடன் அசுத்தமான ஆடைகளை அகற்ற வேண்டும். கடுமையான எதிர் விளைவுகளைச் சந்தித்தாலோ அல்லது கண்ணீர் புகை வெளிப்பாட்டின் விளைவுகள் அதிகமிருந்தாலோ அல்லது ஏற்கனவே உடல்நலக் குறைபாடுகள் இருந்தாலோ மருத்துவ உதவியை நாடுவது மிகவும் முக்கியம் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.