

சேலம் நகராட்சி உறுப்பினர் பதவியில் தொடங்கி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் பதவி வரை உயர்ந்த பெருமைக்குரியவர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி என்று அழைக்கப்படும் இராஜாஜி. வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவராக இருந்த இராஜாஜி, ‘பாரத ரத்னா’ விருது பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளி எனும் கிராமத்தில் சக்கரவர்த்தி வெங்கடார்யா - சிங்காரம்மா இணையருக்கு 1878ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாளன்று பிறந்த இராஜாஜி, பள்ளிக்கல்வியை ஒசூரிலும், உயர்நிலைக் கல்வியை பெங்களூரிலும். கல்லூரி கல்வியை பெங்களூர் மத்தியக் கல்லூரி மற்றும் சென்னை மாகாணக் கல்லூரிகளிலும் படித்தார். 1898ம் ஆண்டில் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் என்பவர் மகளான அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தனர். 1900ம் ஆண்டு முதல் வழக்கறிஞர் தொழிலைச் செய்து வந்தார்.
அதன் பின்னர் அரசியலில் ஈடுபட்டு, 1917ம் ஆண்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் அந்நகராட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930ம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்திச் சிறை சென்றார். 1937ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதன்மை அமைச்சராகப் பொறுப்பேற்று 1940ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்போது வி.எம்.முனுசாமி என்ற பட்டியல் இனத்தவரை இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் 1948ம் ஆண்டு ஜூன் 21 வரை மேற்கு வங்க ஆளுநராகவும், 1948ம் ஆண்டு ஜூன் 21 முதல் 1950ம் ஆண்டு ஜனவரி 26 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் பணியாற்றினார். அதன் பின்னர், 1950ம் ஆண்டு டிசம்பர் 26 முதல் 1951ம் ஆண்டு அக்டோபர் 25 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952ம் ஆண்டு ஏப்ரல் 10 முதல் 1954ம் ஆண்டு ஏப்ரல் 13 வரை பதவி வகித்தார்.
அதன் பின்னர், ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959ம் ஆண்டில் சுதந்திரா கட்சியை தொடங்கி, 1962, 1967 மற்றும் 1972ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டார். 1967ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன் முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலரத் துணை நின்றார். அவருடன் கூட்டணி கண்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சி.என்.அண்ணாதுரை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்றத் தேர்தலிலும் சுதந்திரா கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக இருந்தது.
1937ம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், அன்றைய சேலம் மாவட்டத்தில் மது விலக்கை அமல்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939ம் ஆண்டில் விற்பனை வரியை விதித்தார். 1952ம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபொழுது மாகாணம் முழுக்க மது விலக்கை அமல்படுத்தினார் என்பது கவனிக்கத்தக்கது.
இராஜாஜி தமது ஆங்கில இலக்கியத்திற்குச் சிறப்பான பங்களிப்புகளைச் செய்துள்ளார். இராமாயணம் மற்றும் மகாபாரத காவியங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சி.யுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ் பெற்ற கர்நாடக இசைப்பாடலான ‘குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா’ எனும் பாடல் இவர் இயற்றிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய ‘சக்கரவர்த்தித் திருமகன்’ எனும் இராமாயணம் நூலுக்கு 1958ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. 1954ம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான ‘பாரத ரத்னா’ விருது இவருக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு, கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், சென்னை கிண்டியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவு மண்டபமும் அமைந்துள்ளது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள மண்டபத்திற்கு இராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவையனைத்தும் இராஜாஜி அவர்களது நினைவைப் போற்றுவதாக அமைந்திருக்கிறது.