

2014-ல் கிடைத்த வெண்கலப் பதக்கம்... 2028-ல் தங்கமாக மாறவேண்டும்! இந்திய ரசிகர்களின் முன்னிலையில் புதிய வரலாறு படைக்கக் காத்திருக்கும் இந்திய பேட்மிண்டன் அணி!
விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். ஆனால் ஒரு தோல்விக்குப் பிறகும் வெற்றிக்கான கனவைத் தொடர்ந்து சுமப்பதுதான் உண்மையான விளையாட்டு வீரரின் அடையாளம். அப்படிப்பட்ட ஒரு கனவைத்தான் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட கனவு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய மக்களின் எதிர்பார்ப்பும்கூட!
இந்தியாவில் சர்வதேச அளவிலான பேட்மிண்டன் போட்டிகள் நடைபெறுவது விளையாட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அந்த வகையில், 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள தாமஸ் மற்றும் உபேர் கோப்பைப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. புதுடெல்லியில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தனது மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து, 2014-ம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற உபேர் கோப்பைப் போட்டியில் இந்திய மகளிர் அணியில் இடம் பெற்றிருந்தார். அப்போது இந்திய அணி வரலாற்றில் முதல்முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. 2016-ம் ஆண்டிலும் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
2014-ல் கிடைத்த அந்த வெற்றியை நினைவுகூர்ந்த சிந்து, மீண்டும் சொந்த மண்ணில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் இந்த முறை கோப்பையை வென்றே தீரவேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இந்திய ரசிகர்களின் முன்னிலையில் சக வீராங்கனைகளுடன் இணைந்து கோப்பையை உயர்த்திப் பிடிப்பது தனது விளையாட்டு வாழ்க்கையின் பெருமைமிகு தருணங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் போட்டிகள் வெளிநாட்டு வீரர்களையும் கவர்ந்துள்ளன. 2026-ம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள், இந்திய ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பைப் பாராட்டியதாக சிந்து தெரிவித்துள்ளார்.
2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளதால், இளம் வீரர்கள் உலகின் தலைசிறந்த வீரர்களுடன் இந்திய அணி மோதுவதை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களும் ஒருநாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் அரங்கைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே சிந்துவின் விருப்பம்.
மேலும், 2028 போட்டியில் ஆண்களுக்கான தாமஸ் கோப்பையிலும், பெண்களுக்கான உபேர் கோப்பையிலும் தலா 24 அணிகள் பங்கேற்கும் புதிய போட்டி முறையும் அறிமுகமாகவுள்ளது.
இந்த போட்டியின் முக்கியத்துவம் பதக்கங்களை வெல்வதுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. இந்தியாவில் பேட்மிண்டன் விளையாட்டின் வளர்ச்சிக்கும் இது மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். கிரிக்கெட்க்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பைப் போலவே, பேட்மிண்டனுக்கும் ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சாய்னா நேவால், பி.வி. சிந்து போன்ற வீராங்கனைகளின் சாதனைகள் பல இளம் பெண்களை இந்த விளையாட்டைத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகோலாக இருக்கிறது. சர்வதேசப் போட்டிகளை நேரில் காணும்போது, விளையாட்டின் நுணுக்கங்களையும் வீரர்களின் உழைப்பையும் இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்குப் பின்னால் எத்தனை ஆண்டுகாலப் பயிற்சி, உடல் உழைப்பு,மன உறுதி ஆகியவை இருக்கின்றன என்பதை அவர்கள் உணர்வார்கள். தோல்வியைச் சந்தித்தாலும் மனம் தளராமல் மீண்டும் களத்தில் இறங்கவேண்டும் என்ற பாடத்தையும் கற்றுக்கொள்வார்கள்.
இந்திய அணியைப் பொறுத்தவரை, சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாக இருக்கும். ரசிகர்களின் ஆரவாரம் வீரர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும். அதேநேரத்தில் உலகின் வலிமையான அணிகளுடன் போதுவதற்குத் தேவையான உடல் தகுதி, ஒற்றுமை, திட்டமிடல் ஆகியவற்றிலும் வீரர்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
சிந்துவைப் போன்ற அனுபவம் வாய்ந்த வீராங்கனைகள் அணியில் இருப்பது இளம் வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். அவர்களுடைய அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்டு புதிய தலைமுறை வீராங்கனைகள் சர்வதேச அரங்கில் தங்களது திறமையை நிரூபிக்க முடியும்.
இந்தியாவின் உள்கட்டமைப்பும் சர்வதேசத் தரத்திற்கு உயர்ந்து வருவது இத்தகைய போட்டிகளை நடத்துவதற்குப் பெரும் பலமாகும் . வீரர்களுக்குத் தேவையான பயிற்சி வசதிகள், நவீன அரங்குகள், மருத்துவ உதவிகள் ஆகியவை தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் சர்வதேச அளவில் இந்தியாவின் வெற்றிப் பயணம் இன்னும் வலுப்பெறும்.
இந்த போட்டி இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமைய வாய்ப்புள்ளது. குறிப்பாக வெளிநாட்டு அணிகளின் பலத்தையும் விளையாட்டு உத்திகளையும் இந்திய வீரர்கள் நேரடியாக எதிர்கொள்ள முடியும். இத்தகைய அனுபவங்கள் எதிர்கால சர்வதேசப் போட்டிகளிலும் ஒலிம்பிக் களத்திலும் இந்திய வீரர்களுக்குப் பெரிதும் உதவும். ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய அணி புதிய சாதனையைப் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியுள்ளது.
வெளிநாட்டு வீரர்களும் இந்தியாவில் விளையாட ஆர்வம் காட்டுவது நமது விளையாட்டுத் துறைக்குக் கிடைத்த அங்கீகாரம். இந்த வாய்ப்பை இந்திய வீரர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என நம்புவோம்.
இந்தியாவின் இளம் வீரர்களுக்கு இது மிகப் பெரிய ஊக்கமாகவும், உலக அரங்கில் தங்களது திறமையை நிரூபிக்கக் கிடைக்கும் அரிய வாய்ப்பாகவும் அமையும்.
பதக்கங்கள் மட்டுமே ஒரு வீரரின் சாதனையைத் தீர்மானிப்பதில்லை; அடுத்த தலைமுறைக்கு அவர் ஏற்படுத்தும் நம்பிக்கையும் முக்கியம். சிந்துவின் கனவு நனவாகி, இந்திய மகளிர் அணி உபேர் கோப்பையை வெல்லட்டும்! இந்திய மண்ணில் புதிய வரலாறு படைக்கட்டும்!