

பிரிட்டனில் வசித்து வரும் தமிழ் சிறுமியான போதனா சிவானந்தன், (Bodhana Sivanandan) 11 வயதில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் மற்றும் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்று, இந்த பட்டம் வென்ற உலகின் இளம் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவில் பிறந்து வளர்ந்து வரும் போதனா சிவானந்தனின் பெற்றோர், தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஐடி துறையில் பணியாற்றி வரும் அவரது தந்தை சிவானந்தன் வேலாயுதம், கடந்த 2007 ஆம் ஆண்டு லண்டனுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
கொரோனா காலத்தில் அவரது தந்தையின் நண்பர் , வீட்டிற்கு கொண்டு வந்த சதுரங்க பலகையில் தனது 5 வயதிலே விளையாட தொடங்கியுள்ளார். அதன் பின்னர் ஆன்லைன் மூலம் தற்செயலாகவே சதுரங்கத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார். அவரது பெற்றோரில் யாரும் தீவிர சதுரங்க வீரர்கள் அல்ல. இருப்பினும், அந்த இளம் வீராங்கனை தனது வயதைக் கடந்த ஒரு புரிதலை விரைவாக வெளிப்படுத்தி, ஜூலை 2021-ல் ஹாரோ சதுரங்கக் கழகத்தில் தனது முதல் போட்டியில் பங்கேற்றார்.
ஏழு வயதில், ஐரோப்பியப் பள்ளிகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் அவள் ஆடிய 24 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாள். மேலும், 2023-ஆம் ஆண்டுக்குள், குரோஷியாவில் நடைபெற்ற ஐரோப்பிய ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஒரு கிராண்ட்மாஸ்டருக்கு எதிரான போட்டி ஆட்டத்தில் தோல்வியின்றி வெற்றி பெற்ற மிக இளைய நபர் என்ற பெருமையை அவள் பெற்றாள். அவளது முன்னேற்றம் அத்தகைய வேகத்தில் தொடர்ந்ததால், அவளுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, புடாபெஸ்டில் நடைபெறவிருந்த 2024 சதுரங்க ஒலிம்பியாட் போட்டிக்கு இங்கிலாந்து அவளைத் தேர்ந்தெடுத்தது.
2024 ஆம் ஆண்டில் எந்தவொரு சர்வதேச விளையாட்டிலும் பிரிட்டனை பிரதிநிதித்துவப்படுத்திய மிக இளைய நபர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார். அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பில், 60 வயதான மூத்த கிராண்ட்மாஸ்டர் பீட்டர் வெல்ஸைத் தோற்கடித்து செஸ் உலகை உற்றுநோக்கச் செய்தார்.
அதன் மூலம் ஒரு கிளாசிக்கல் கிராண்ட்மாஸ்டரைத் தோற்கடித்த மிக இளைய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
10 வயது, ஐந்து மாதம் மற்றும் மூன்று நாட்களில், ஒரு கிராண்ட்மாஸ்டரைத் தோற்கடித்த மிக இளம் வயது பெண் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். இதன் மூலம், அதற்கு முன்பு அமெரிக்க வீராங்கனை கரிசா யிப் வைத்திருந்த சாதனையை முறியடித்தார்.
கடந்த ஜூலை மாதம் பிரான்சில் நடந்த டோல் ஓபன் போட்டியில், 2628 ரேட்டிங் கொண்ட பிரெஞ்சு கிராண்ட்மாஸ்டர் மார்க்'ஆண்ட்ரியா மௌரிஸியைத் தோற்கடித்து, போதானா தனது முதல் ஐஎம் நார்மைப் பெற்றார்.
கடந்த ஆகஸ்ட் 26 மாதம், கோவென்ட்ரியில் நடைபெற்ற 2026 பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், பிரிட்டனின் மிக இளம் வயது மகளிர் சதுரங்க சாம்பியன் ஆனார். அதற்கும் முன்னதாகவே யுகே ஓபன் மகளிர் பிளிட்ஸ் சாம்பியனாகவும், பிரிட்டிஷ் மகளிர் ரேபிட் சாம்பியனாகவும்.அவர் சதுரங்க விளையாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
11 வயதில் ஒரே மாதத்தில் இரண்டு செஸ் மாஸ்டர் பட்டங்கள்:
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் 28-09-26 ல் நடைபெற்ற 46வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில், பிரிட்டன் சார்பில் பங்கேற்ற போதனா சிவானந்தன், 11 சுற்றுகளிலும் விளையாடி 8 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.
வுமன் கிராண்ட் மாஸ்டர்(women Grand master) பட்டம் பெற தேவையான 2300 மதிப்பீடுகளை அவர் கடந்துள்ளதை சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு உறுதிப்படுத்தியது. அதன் காரணமாக தனது 11 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற போதனா சிவானந்தன், உலகின் இளம் வயது பெண் கிரான்ட் மாஸ்டர் என்ற சாதனையை படைத்து. ரஷ்யாவின் கேடரினா லாக்னோ, 12 வயது 4 மாதங்களில் வைத்திருந்த இந்த 10 ஆண்டு கால சாதனையை போதனா சிவானந்தன் முறியடித்துள்ளார்.
அதே சமயம், சீனாவின் ஹூ யிஃபானும் அதே வயதில் இப்பட்டத்தைப் பெற்று, பின்னர் திறந்தநிலை கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அடைந்த மிக இளைய பெண் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 வயதில் மிக இளம் வயது மகளிர் சதுரங்க சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை ஏற்கனவே படைத்த போதனா சிவானந்தன் .தற்போது, 11 வயதில் மிக இளம் வயது பெண் சர்வதேச மாஸ்டர் (IM) என்ற மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார்.
23-10-26 அன்று ஐரோப்பிய நாடான மாண்டினீக்ரோவின் புத்வாவில் நடைபெற்ற ஐரோப்பிய கிளப் கோப்பையில், இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று, சதுரங்க வரலாற்றில் தலைசிறந்த பெண் வீராங்கனையாகப் பரவலாகக் கருதப்படும் ஹங்கேரிய சதுரங்க ஜாம்பவான் ஜூடிட் போல்கர் வைத்திருந்த 38 ஆண்டுகள் பழமையான சாதனையை முறியடித்தார்.
போல்கர் 1988-ல் தனது 12-வது வயதிலேயே தகுதி பெற்று, உலகின் முதல் 10 வீரர்களில் ஒருவராக உயர்ந்தார்; அவர் தலைசிறந்த ஆண் கிராண்ட்மாஸ்டர்களுக்கு எதிராகப் போட்டியிட்டுப் புகழ்பெற்றார்.
போதனா சிவானந்தன், முன்னாள் மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டியாளரான கிராண்ட்மாஸ்டர் அலெக்ஸாண்ட்ரா கோரியாச்கினாவிடம் முதல் சுற்றில் அடைந்த தோல்வியிலிருந்து மீண்டு, ஏழு ஆட்டங்களில் இருந்து 5.5 புள்ளிகளுடன் போட்டியை நிறைவு செய்தார்.
இறுதிச் சுற்றில் ஸ்வீடனின் மகளிர் சர்வதேச மாஸ்டர் விக்டோரியா ஜோஹன்சனை 32 நகர்வுகளில் அவர் வென்றது, 'ஷீ ப்ளேஸ் டு வின் லயனஸ் ஏ' என்ற அவரது அணிக்கு 4-0 என்ற வெற்றியைப் பெற்றுத் தந்ததுடன், சர்வதேச மாஸ்டர் பட்டத்திற்குத் தகுதி பெற்ற 10 இளம் வீரர்களில் ஒருவராகவும் அவரை நிலைநிறுத்தியது.
கடந்த செப்டம்பர் மாதம், மகளிர் கிராண்ட்மாஸ்டர் (WGM) பட்டத்திற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்து வரலாற்றிலேயே மிக இளவயது வீராங்கனை என்ற பெருமையை பெற்ற ஒரு மாத காலத்தில் சர்வதேச மாஸ்டர் பட்டமும் பெற்றது அவரை உலகமே வியந்து பார்க்க வைத்தது.
ஜனவரி 2026 முதல் போதனா சிவானந்தனுக்குப் பயிற்சியளித்து வரும் கிராண்ட்மாஸ்டர் மெர்ட் எர்டோக்டு, Chess.com-இடம், “அவர் இந்த விளையாட்டை நேசிப்பதாலும், மிகவும் கடினமாக உழைப்பதாலும் அவரது முன்னேற்றம் தவிர்க்க முடியாதது. நான் வாரத்திற்கு நான்கு முறை அவருடன் பயிற்சி செய்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
“அவரை ஒரு தலைமுறைத் திறமையாளர் என்றுதான் வர்ணிக்க முடியும், இது நடப்பதில் நான் மகிழ்ச்சிய டைகிறேன்,” என்று இங்கிலாந்து சதுரங்கக் கூட்டமைப்பின் சர்வதேச சதுரங்கம் மற்றும் வெளி உறவுகள் இயக்குநரான சர்வதேச மாஸ்டர் மால்கம் பெய்ன், Chess.com-இடம் கூறி போதனா சிவானந்தன் ஐ பெருமைப்படுத்தியுள்ளார்.