காமன்வெல்த் 2026: பதக்க வேட்டையில் இந்தியா: பதக்கம் வென்ற வீரர்களின் முழு விவரங்கள் இதோ.!

காமன்வெல்த் விளையாட்டில் பதக்க வேட்டையில் இந்திய வீரர்கள்.!
Commonwealth 2026
Commonwealth
Updated on

ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளுக்கு அடுத்ததாக, அதிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக திகழ்கிறது காமன்வெல்த் விளையாட்டு. கடந்த ஜூலை 23-ம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டு, ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. 23வது காமன்வெல்த் விளையாட்டில் 74 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

தடகளம், டிராக் சைக்கிளிங், குத்துச்சண்டை, நீச்சல், பேட்மிண்டன் மற்றும் ஜூடோ உள்ளிட்ட 10 வகையான விளையாட்டு போட்டிகள் காமன்வெல்த்தில் நடக்கின்றன. இதுவரை இந்தியா 10 பதக்கங்களைப் பெற்று, பதக்கப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா வென்ற பதக்கங்களின் விவரங்கள்:

1. பளு தூக்குதல் 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரிஷிகாந்தா சிங் 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த் 2026 போட்டிகளில் இம்முறை இந்தியாவின் முதல் பதக்கத்தைப் பெற்றவர் இவர் தான். இதன்மூலம் இந்தியா தனது பதக்கப் பட்டியலை வெள்ளியுடன் தொடங்கியது.

இதையும் படியுங்கள்:
செஸ் மைந்தர்களுக்கு சர்ப்ரைஸ்: எல்லா உதவிகளையும் அரசு வழங்கும்: முதல்வர் விஜய்யின் அதிரடி வாக்குறுதி
Commonwealth 2026

2. பளு தூக்குதல் 48 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் மீராபாய் சானு முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். மீராபாய் சானுவுக்கு காமன்வெல்த்தில் இது 4வது பதக்கமாகும். மேலும் தொடர்ந்து 3 தங்கப் பதக்கங்களை வென்று ஹாட்ரிக் சாதனையும் நிகழ்த்தி உள்ளார் மீராபாய்.

3. ஆண்களுக்கான பளுதூக்குதல் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி. தமிழக வீரரின் சாதனையைப் பாராட்டி முதல்வர் ஜோசப் விஜய், ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

4. மாற்றுத் திறனாளர்களுக்கான பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவின் ஜந்து குமார் 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இவர் தனது முதல் முயற்சியில் 181 கிலோ எடையையும், 2-வது முயற்சியில் 190 கிலோ எடையையும் தூக்கினார். 3-வது முயற்சியில் 196 கிலோ எடையைத் தூக்க முயன்று தவறவிட்டார், இருப்பினும் 130.9 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார்.

5. மகளிருக்கான பளு தூக்குதல் 53 கிலோ எடைப் பிரிவில், ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோ மற்றும் கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோ என மொத்தமாக 199 கிலோ எடையைத் தூக்கி இரண்டாம் இடம் பிடித்தார் ஞானேஸ்வரி.

6. ஆடவருக்கான பளு தூக்குதல் 79 கிலோ எடைப் பிரிவில், வல்லூரி அஜய் பாபு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 330 கிலோ வரை தூக்கிய அஜய் பாபு, வெறும் 1 கிலோ வித்தியாசத்தில் மலேஷியா வீரரிடம் தங்கப் பதக்கத்தை இழந்தார்.

காமன்வெல்த் போட்டிகள் - Glasgow Commonwealth Games 2026
காமன்வெல்த் போட்டிகள் - Glasgow Commonwealth Games 2026
இதையும் படியுங்கள்:
2036 ஒலிம்பிக் கனவு: பிக் பாஷ் மூலம் வலுவடையும் இந்திய-ஆஸ்திரேலிய உறவு!
Commonwealth 2026

7. இந்தியாவுக்கு பாரா தடகளப் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார் ஷர்மிளா தண்கர். இவர் குண்டு எறிதலில் 9.81 மீட்டர் வரை எறிந்து தங்கத்தை வென்று அசத்தினார். நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியா வென்ற 2வது தங்கம் இதுவாகும்.

8. ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார் சர்வேஷ் குஷாரே. காமன்வெல்த் விளையாட்டில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற மெகா சாதனையைப் படைத்துள்ளார் சர்வேஷ்.

9. மகளிருக்கான பளு தூக்குதல் 58 கிலோ எடைப் பிரிவில், பிந்தியாராணி தேவி வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ மற்றும் கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 112 கிலோ என மொத்தமாக 199 கிலோ எடையைத் தூக்கி 3-ம் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக 2022 காமன்வெல்த்தில் இவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இதையும் படியுங்கள்:
காமன்வெல்த்: வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் பரிசு.!
Commonwealth 2026

10. மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் குண்டு எறிதல் F57 பிரிவில் ஷில்பா கே. ஷைலா, 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். தொடக்கத்தில் இவர் 7.26 மீட்டர் தூரம் எறிந்து 4வது இடத்தைப் பிடித்திருந்தார். பின்னர் நைஜீரிய வீராங்கனையின் தகுதி நீக்கத்தால், இறுதி முடிவு மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஷில்பாவின் சொந்த முயற்சியான 7.26 மீட்டர், மூன்றாவது சிறந்த தூரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதே போட்டியில் தான் இந்திய வீராங்கனை ஷர்மிளா தண்கர் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

பதக்கப் பட்டியலில் 59 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 32 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 21 பதக்கங்களுடன் கனடா 3வது இடத்திலும் உள்ளன. 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com