
10 அணிகள் இடையிலான 18-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக இந்த சீசனில் தகிடுதத்தம் போடுகிறது. ஏற்கனவே அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பையும் பறிகொடுத்து விட்டது.
இந்நிலையில் அகமதாபாத்தில் நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி சென்னை அணியின் சார்பில் முதலாவதாக ஆயூஷ் மாத்ரே மற்றும் தேவோன் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.
ஆயுஷ் மாத்ரே 3 சிக்சர், 2 பவுண்டரி விளாசி, 34 ரன்களில் கேட்ச் அவுட்டாக 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய உர்வில் பட்டேலும் மட்டையை வேகமாக சுழற்ற, ஸ்கோர் 8.5 ஓவர்களில் 100-ஐ தொட்டது.
அணியின் ஸ்கோர் 107-ஆக உயர்ந்த போது உர்வில்பட்டேல் 37 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஷிவம் துபே 17 ரன்கள் மட்டும் எடுத்து அவுட்டாக, மறுமுனையில் அரைசதத்தை கடந்த கான்வே 52 ரன்கள் எடுத்தார். அடுத்த வந்த டிவால்ட் பிரேவிசும், ஜடேஜாவும் கைகோர்த்து ரன்ரேட்டை எகிற வைத்தனர். கடைசியில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது.
குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், சாய் கிஷோர், ரஷித்கான், ஷாருக்கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 230 ரன் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, சிஎஸ்கேயின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கேப்டன் சுப்மன் கில் 13 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 5 ரன்னிலும், ரூதர்போர்டு ரன் ஏதும் எடுக்காமலும் நடையை கட்டினர். சாய் சுதர்சன் தனது பங்குக்கு 41 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி 18.3 ஓவர்களில் 147 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வேகப்பந்து வீச்சாளர் அன்ஜூல் கம்போஜ், சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும் சாய்த்தனர். பிரேவிஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
தனது கடைசி லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். ஆனாலும் புள்ளி பட்டியலில் மாற்றமில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி 10 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. 5 முறை சாம்பியனான சென்னை அணி ஐ.பி.எல். வரலாற்றில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆறுதல் வெற்றியோடு சென்னை அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுகிறது.
சென்னை அணியின் கேப்டன் 43 வயதான டோனி அடுத்த ஆண்டும் விளையாடுவாரா? அல்லது இதுவே அவரது கடைசி ஆட்டமா? என்பது தெரியவில்லை. இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தனது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எதிர்காலம் குறித்து தனது மௌனத்தை கலைத்தார்.
நடந்து வரும் சீசனில் ஏமாற்றமளிக்கும் ஆட்டத்திற்குப் பிறகு தோனியின் எதிர்காலம் குறித்து நிறைய பேச்சுகள் எழுந்தன. காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, இந்த சீசனிலும் பெரும்பாலான போட்டிகளில் தோனி அணிக்கு தலைமை தாங்கினார். தனது எதிர்காலத்தை முடிவு செய்ய தனக்கு '4-5 மாதங்கள்' இருப்பதாகவும், அடுத்த சீசனில் மீண்டும் வருவேன் என்று கூறவில்லை என்றும் தோனி கூறினார்.
"ஒவ்வொரு சீசனுக்கும் உடல்தகுதியை பேணுவதற்கு 15 சதவீதம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கிறது. இத்துடன் முடித்து விட்டேன் என்றும் சொல்லவில்லை. திரும்பி வருகிறேன் என்றும் சொல்லவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது. எனவே இப்போது அவசரப்பட தேவையில்லை. வீட்டுக்கு சென்று நீண்ட நாள் ஆகி விட்டது. சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பி சில வாரங்கள் உற்சாகமாக பைக் ஓட்டி மகிழ்வேன். அதன் பிறகு அடுத்த ஐ.பி.எல்.-ல் ஆடுவது குறித்து 4-5 மாதங்களில் முடிவு செய்வேன்," என்றார்.
தோனியின் இந்த பதிலால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.