மெல்ல மெல்ல நம் உடலைச் சிதைக்கும் 10 ஆபத்தான பழக்கங்கள்... உங்கள் ஆயுளைக் குறைக்கிறதா?

Unhealthy habits
Unhealthy habitsImg credit: AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அறியாமல் செய்யும் சில சிறு தவறுகள் காலப்போக்கில் நம் உடல் நலனை பெருமளவில் பாதிக்கின்றன. அதிக சர்க்கரை, எண்ணெய் உணவுகள், போதிய உடற்பயிற்சி இன்மை, போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, தாமதமாக தூங்குவது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது என நாம் செய்யும் தவறுகள் தான் நாள்பட்ட நோய்களுக்கு வழி வகுக்கின்றன.

உடலை சேதப்படுத்தும் பழக்கங்கள்:

1) உடல் உழைப்பின்மை (Sedentary lifestyle):

உடலை மெதுவாக சிதைக்கும் ஒரு மௌனக் கொலையாளி (silent killer) இது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது வளர்சிதை மாற்றத்தை (metabolism) குறைத்து உடல் பருமன் மற்றும் தண்டுவட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடல் உழைப்பின்மையை மாற்றி சுறுசுறுப்பான வாழ்க்கையை மேற்கொள்வது நீண்ட ஆயுளுக்கும், நோயற்ற வாழ்க்கைக்கும் அவசியமாகும்.

2) தவறான உணவுப் பழக்கம்:

அதிக சர்க்கரை, உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது இதயம் மற்றும் மூளையை பாதிக்கிறது. அதிகப்படியான சர்க்கரை மூளை மற்றும் பற்களை பாதிப்பதோடு, உடல் எடையையும் அதிகரிக்கும். அதேபோல் உணவில் அதிக உப்பு சேர்ப்பது ரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடும். எனவே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்வதில் அதிக கவனம் அவசியம். பசி இல்லாத போது சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவையும் தவறான உணவுப் பழக்கங்களே.

இதையும் படியுங்கள்:
கசப்பிலும் இவ்வளவு இனிப்பா? வேப்பம் பூவை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அதிசயம்!
Unhealthy habits

3) தவறான உடல் தோரணை (Poor Posture):

முன்னோக்கி தள்ளிய கழுத்து, தோள்களை வளைத்து அமர்வது, நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பது போன்ற பழக்கங்கள் தசை பிடிப்பு, முதுகு/கழுத்து வலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். கணினி அல்லது மொபைல் பயன்படுத்தும் போது தவறான தோரணையில் இருப்பது கழுத்து மற்றும் முதுகு வலியை உண்டாக்கும். நிற்கும்பொழுதோ அல்லது அமரும் பொழுதோ முதுகுத்தண்டை நேராக வைக்காமல் இருப்பது, நீண்ட காலத்திற்கு முதுகு மற்றும் கழுத்து வலியை உண்டாக்கி முதுகெலும்பை சேதப்படுத்தும்.

4) தூக்கமின்மை:

நேரங்கழித்து தாமதமாக தூங்குவது அல்லது போதிய தூக்கம் இல்லாததும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து மன அழுத்தத்தை அதிகரிக்கும். தினமும் 6 மணி நேரத்திற்கு குறைவாகத் தூங்குவது இதய நோய், உடல் பருமன், டைப் 2 நீரிழிவு, மன அழுத்தம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும்.

மேலும் இது மூளையின் செயல்பாட்டையும், நினைவாற்றலையும் குறைக்கும். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் யோகா மூலம் தூக்கமின்மையை சரி செய்யலாம்.

5) நீரேற்றம் இல்லாமல் இருப்பது:

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது உடலை வறட்சியடையச் செய்து, சிறுநீரக பாதிப்பு, சோர்வு மற்றும் தலைவலிக்கு வழி வகுக்கும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் அது செரிமானம், ஆற்றல் அளவு மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதிக்கும். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் அவ்வப்பொழுது தண்ணீர் குடிப்பது அவசியம். நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய், ஆரஞ்சு போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதும், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற உடல்நல குறைபாடுகள் இருக்கும்போது கூடுதல் திரவ உணவுகளை எடுத்துக் கொள்வதும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
பப்பாளி விதையை சாப்பிடலாம்; ஆனால்... இந்தத் தப்பை மட்டும் செய்திடாதீங்க!
Unhealthy habits

6) மருந்துகளை தவறாக பயன்படுத்துவது:

சிறிய தலைவலி அல்லது காய்ச்சலுக்கு கூட மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்வது என்னும் சுயமருத்துவம் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை சேதப்படுத்தும். தேவையில்லாமல் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை பாதியிலேயே நிறுத்துவது, சுய மருத்துவம் மற்றும் காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்துவது போன்ற முக்கிய தவறுகளை தவிர்ப்பது அவசியம்.

7) மன அழுத்தத்தை புறக்கணித்தல்:

மன அழுத்தத்தைப் புறக்கணிப்பது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இது உடல் மற்றும் மன நலனை பாதிக்கும். மன அழுத்தத்தை புறக்கணிப்பதற்கு பதிலாக, ஆழ்ந்த சுவாசம், யோகா, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுமுறைகளை பின்பற்றி அவற்றை சரியான முறையில் நிர்வகிப்பதே சிறந்தது. பிடித்தமான செயல்களை செய்வது, இயற்கையில் நேரத்தை செலவிடுவது போன்றவை மன நலனை மேம்படுத்தும்.

8) காலை உணவை தவிர்ப்பது மற்றும் இரவில் தாமதமாக உண்பது:

காலை உணவைத் தவிர்ப்பது அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது உடலில் சத்து குறைபாட்டை ஏற்படுத்தி கவனச் சிதறலை உண்டாக்கும். அதேபோல் தூங்குவதற்கு முன்பு ஹெவியான உணவுகளை உண்பது செரிமானத்தை பாதிப்பதுடன், வளர்சிதை மாற்றத்தைக் குறைத்து உடல் எடையை அதிகரிக்கும். இரவில் தாமதமாக உண்பது ஜீரணக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கமின்மை போன்ற உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். இது இன்சுலின் அளவை பாதித்து மெட்டபாலிசத்தை மெதுவாக்குகிறது. உணவு உண்பதற்கும் தூங்குவதற்கும் இடையில் குறைந்தது 2 - 3 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்க கண்கள் 'குளு குளு'ன்னு இருக்கணுமா? கண்களை குளிர்ச்சியாக்கும் 10 வழிகள்!
Unhealthy habits

9) உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது:

நாள் முழுவதும் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வது, உடற்பயிற்சி செய்யாதது போன்ற செயல்கள் தசைகளை பலவீனமடையச் செய்துவிடும். உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை தசை வலிமையைக் குறைத்து உடல் பருமன், தசை பலவீனம், எலும்பு அடர்த்தி குறைவு மற்றும் இதய நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். தொடர்ச்சியான உடல் இயக்கம் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், நாள்பட்ட நோய்களை தடுக்கவும் உதவும்.

10) அதிகப்படியான மின்னணு சாதன பயன்பாடு:

அதிகப்படியான மின்னணு சாதன பயன்பாடு கண் எரிச்சல், பார்வை மங்குதல், தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் மடிக்கணினிகள் மற்றும் செல்போன்களிலிருந்து வெளிப்படும் மின்காந்த புலங்கள்(EMF) விந்தணுக்களின் இயக்கத்தை பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியான மின்னணு சாதனப் பயன்பாடு மன உளைச்சல் மற்றும் உடல் இயக்கமின்மையை உருவாக்கும்.

நாம் செய்யும் இதுபோன்ற சிறிய தவறுகள் தான் நாளடைவில் பெரும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இது போன்ற பழக்கங்களை தவிர்ப்பது அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com