நமது உடலுக்கு வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துள்ள உணவுகளோடு ஆரோக்கியமான கொழுப்புகளும் அவசியம். வெண்ணெயின் சுவை பிடிக்காதவர்கள் வெண்ணெய்க்கு மாற்றாக உள்ள, அதேசமயம் கொலஸ்ட்ராலை அதிகரிக்காத பத்து விதமான பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ணலாம். அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெயில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. சமையல் செய்யும்போது ஒரு ஸ்பூன் வெண்ணெய்க்கு பதிலாக முக்கால் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம். இது இதயத்திற்கு இதமானது.
2. தேங்காய் எண்ணெய்: இது வெண்ணெய்க்கு மாற்றான ஒரு தாவர அடிப்படையிலான பொருளாகும். இது தனித்துவமான சுவை கொண்டது. ட்ரை கிளிசரைடுகள் நிறைந்தது. உடலின் ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அறை வெப்ப நிலையில் திடமான தேங்காய் எண்ணெய் வெண்ணெயின் அமைப்பைப் பிரதிபலிக்கிறது. சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம்.
3. அவகேடோ: பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்ணெய்க்கு மாற்றான ஒரு வெண்ணெய் பழம் இதுவாகும். இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும். மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் இது நிரம்பி உள்ளது.
4. நட்ஸ்: பாதாம், வேர்க்கடலை, முந்திரி போன்றவை வெண்ணெய்க்கு மாற்றான நல்ல கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களாகும். இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், வைட்டமின் ஈ, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
5. ஏடு இல்லாத தயிர்: குறைந்த கொழுப்பும் அதிக புரதச்சத்தும் சேர்ந்தது தயிர். இதை அனைத்து வயதினரும் எடுத்துக் கொள்ளலாம். பலவிதமான ஊட்டச்சத்துக்களை இது தருகிறது.
6. ஆப்பிள் சாஸ்: பேக்கிங் பொருட்களில் வெண்ணெய்க்கு மாற்றான ஒரு பொருள் ஆப்பிள் சாஸ் ஆகும். கேக்குகள், குக்கிகளில் இதைப் பயன்படுத்தலாம். இது இயற்கையான இனிப்பு சுவை மற்றும் ஈரப்பதம் நிறைந்தது. இதை சேர்க்கும்போது கொழுப்பு உள்ளடக்கத்தை குறைக்கிறது. ஆப்பிள் சாஸ் உபயோகிக்கும்போது இதில் உள்ள இனிப்பு காரணமாக சர்க்கரை அளவை சிறிது குறைத்துக்கொள்ள வேண்டும்.
7. வாழைப்பழங்கள்: இதில் இயற்கையான இனிப்புச் சத்து உள்ளது. பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது. பழுத்த வாழைப்பழங்களை அப்பம், ரொட்டிகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.
8. நெய்: வெண்ணெயில் இருந்து பெறப்படும் நெய் ஒரு லாக்டோஸ் இல்லாத மாற்றுப் பொருளாகும். இதன் சுவையும் நறுமணமும் தனித்துவமானது. இது வறுக்கவும் பொறிக்கவும் ஏற்றது. வெண்ணெயில் காணப்படும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, இ மற்றும் கே போன்றவற்றை நெய் தக்கவைத்துக் கொள்கிறது. பெரும்பாலான சமையல் குறிப்புகளில் வெண்ணெய்க்கு மாற்றாக நெய்யைப் பயன்படுத்தலாம்.
9. மோர்: இது சிறந்த திரவ உணவாகும். பேக்கிங் பொருட்களுக்கு உதவுகிறது. பான் கேக்குகள், பிஸ்கட்டுகள் மற்றும் மக்கன்கள் போன்ற சமையல் வகைகளுக்கு ஈரப்பதம் மற்றும் கசப்பான சுவையை சேர்க்கிறது. இதை குறைந்த அளவு எண்ணெய் அல்லது ஆப்பிள் சாற்றுடன் பயன்படுத்தலாம்.
10. முந்திரி கிரீம்: ஊற வைத்த முந்திரியை தண்ணீரில் கலந்து தயாரிக்கப்படும் முந்திரி கிரீம் ஒரு சிறந்த வெண்ணெய்க்கு மாற்றான பொருளாகும். இது சாஸ்கள் மற்றும் ஸ்பிரெட்டுகள் (Spread) போன்ற சுவையான உணவுகளுக்கு ஏற்றது.