நீரிழிவு நோயாளிகளுக்கான 10 பாத பராமரிப்பு குறிப்புகள்... இது ரொம்ப முக்கியமுங்க!

Foot care
Foot care
Published on

நீரிழிவு நோயாளிகள் பாதங்களைப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், விரல்களையோ கால்களையோ இழக்க வேண்டியிருக்கும்!

உடலின் இரத்த குளுக்கோஸ் அளவு ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவை விட, அதிகமாக உயரும் போது ஏற்படும் பொதுவான நோயான நீரிழிவு என்பது உடலின் இன்சுலின் உற்பத்தி செய்யும் திறனைத் தடுக்கிறது.

இன்சுலின் என்பது இரத்தத்தில் இருந்து சர்க்கரையை உயிரணுக்களுக்குக் கொண்டு சென்று ஆற்றலாக மாற்றுவதற்குப் பொறுப்பான ஹார்மோன் ஆகும். நீரிழிவு சரியாகக் கவனிக்கப்படாவிட்டால் ஒருவரின் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். நீண்டகால நீரிழிவு நரம்புகள், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளைச் சேதப்படுத்தும். குறிப்பாக, பாதங்களுக்குப் பெரிதும் தீங்கு விளைவிக்கும்.

நீரிழிவு நோயுடையவர்களின் பாதங்களுக்கு இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது மற்றும் ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இழக்கிறது. மேலும், நீரிழிவு கால்களில் சேதமின்றி உணர்வின்மையை ஏற்படுத்தும். புண்கள், காயங்கள், கொப்புளங்கள் மற்றும் வெட்டுக்கள் மிக மெதுவாகவேக் குணமடையச் செய்யும். இது தொற்றுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. சில வேளைகளில் உறுப்பு துண்டிப்பு செய்யும் கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. நீரிழிவு நோயுடையவர்கள், அவர்களது பாதத்தை முன்னெச்சரிக்கையுடன் பராமரிப்பது அவசியமாகும்.

நீரிழிவு நோயுடையவர்கள், பாதப் பராமரிப்புக்கென்று கீழ்க்காணும் 10 வழிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

1. நீரிழிவு நோயாளிகள், வெட்டுக்கள், புண்கள், கொப்புளங்கள், சிவத்தல், தோல் காய்ப்பு, தடிப்புகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகளைக் கண்டறிய தினமும் பாதங்களைச் சரிபார்ப்பது அவசியமாகும். குறிப்பாக, கால் விரல்களுக்கு இடையில் ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதாவென்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தத் தினசரி பராமரிப்பு அவசியமானது.

2. கால்களை நாள்தோறும் வெதுவெதுப்பான நீரில் கழுவுவதை ஒரு பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கால்களை வெதுவெதுப்பான நீரில் நனைப்பது அவற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவும். கால் விரல்களுக்கிடையில் சிக்கியுள்ள பாக்டீரியாக்களை அகற்றவும் இது உதவுகிறது. கால்களை ஊற வைப்பதற்கு முன் கையை முதலில் நனைத்து வெப்பநிலையினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கால்களை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருக்கக் கூடாது.

3. கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவிய பின், குறிப்பாக கால் விரல்களுக்கு இடையில் முழுமையாக உலர வைக்க வேண்டும். பல வேளைகளில், நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் காரணமாக விரிசல் மற்றும் வறண்ட சருமத்தால் பாதிக்கப்படலாம். விரிசல் ஏற்பட்ட சருமம் பாக்டீரியா தொற்றுகள் சருமத்தைப் பாதிக்க வழிவகுத்துவிடும். மேலும், தொற்றுகள் குணமாகும் செயல்முறையையும் மெதுவாக்கும். பாதங்கள் உலர்ந்த பிறகு, வறட்சியைத் தடுக்கப் போதுமான அளவு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். கால் விரல் நகங்களுக்கு இடையில் தேங்காயெண்ணெய் போடுவதைத் தவிர்க்கலாம்.

4. நீரிழிவு நோயுடையவர்கள், கால்களைப் பராமரிக்கும் போது, எப்போதும் மிகவும் வசதியான மற்றும் நன்கு பொருத்தமான காலணிகளை அணிவது நல்லது. காலணிகளை வாங்கிய முதல் வாரத்தில் 1 முதல் 2 மணி நேரம் வரை மட்டுமே புதிய காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும். அந்தப் புதுக் காலணிகளால் எவ்விதப் பிரச்சனையும் வராது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதேப் போன்று, காலணிகளை அணிவதற்கு முன் ஒவ்வொரு நாளும், காலணியில் கூர்மையான பொருட்கள், ஏதேனும் சறுக்கும் மூலைகள் அல்லது உங்கள் கால்களை காயப்படுத்தக்கூடிய வகையில் இருக்கிறதா? என்பதைச் சரிபார்க்கவும். தேவைப்படின் எளிதான காலுறை அல்லது முழங்கால் நீள அளவிலான காலுறைகளை அணிந்து கொள்ளலாம்.

5. எவ்வளவு அவசரமான வேளையிலும், திடீரென அல்லது குறைவான தூரமேச் செல்ல வேண்டியிருந்தாலும் நீரிழிவு நோயாளிகள் வெறுங்காலுடன் நடப்பது பாதங்களில் பிரச்சனைகளை உருவாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்குக் கால்களில் ஏற்படும் காயங்கள் மிகவும் கடினமாகவும் மெதுவாகவுமேக் குணமாகும் என்பதால், நடக்கும் போது எப்போதும் காலணிகளை அணிய வேண்டும். காலணிகளின் துணி, தோல், ரப்பர் போன்றவை, சிலருக்குக் கால்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அது போன்ற காலணிகளைத் தவிர்க்கலாம். இல்லையெனில், அதன் பாதிப்பு வராதபடி சாக்ஸ் அணிந்து கொள்வது நல்லது.

6. நீண்ட காலமாகப் பராமரிக்கப்படாத கால் விரல் நகங்கள் வீக்கத்தையும், பூஞ்சைத் தொற்றையும் ஏற்படுத்தக்கூடும் என்பதுடன் பாதங்களைக் கடுமையாகப் பாதிக்கும். கால் விரல் நகங்களை வெட்டி, அதன் வளர்ச்சியைத் தடுப்பது நல்லது. கால் நகங்கள் நீண்டு விடுவதால், ஒரு காலிலிருந்து மற்றொரு காலில் சிறு காயங்கள் ஏற்படுவதற்கும், ஏதாவதொரு இடத்தில் நீண்ட நகங்கள் இடித்துக் கொள்ளும் போது, உட்பகுதியில் நகமுடைந்து புண்கள் ஏற்படுவதற்கும் காரணமாகி விடுகிறது. கால் நகங்களை வெட்டி எடுப்பதற்கு முன், அவ்விடத்தில் மருந்துக் குழைமத்தை (Lotion) பயன்படுத்தி மென்மையாக்கிக் கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
சத்தான, சுவையான வாழைப்பழம் இட்லி - குழந்தைகளுக்கு பிடிக்கும்!
Foot care

7. பாதப் பகுதிகளில் ஏற்படும் கால் ஆணி, நகச்சுத்தி (சுத்திவிரல்), பெருவிரல் முண்டு, தோல் காய்ப்பு போன்ற பிரச்சனைகளுக்குத் தாங்களாகவேச் சிகிச்சை செய்து கொள்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். காலில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும், மருத்துவரைச் சந்தித்து சரியான மருத்துவம் செய்து கொள்வது சிறந்தது.

8. நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பு வலி அல்லது பலவீனமான கால் தசைகள் இருந்தால், பாத மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. மேலும், நடைபயிற்சி மிகவும் வேதனையாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ இருக்கும் வேளைகளில், கால் பல்லிறுக்கி அல்லது எலும்பியல் காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும்.

9. நீரிழிவு நோயாளிக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது, ஆனால், கால்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க, எந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகா போன்ற தாக்கம் இல்லாத பயிற்சிகள் கால்களுக்கு மிகவும் இலேசான மற்றும் எந்த சேதமும் ஏற்படாத எளிமையான பயிற்சிகளைச் செய்யலாம்.

10. அனைத்து நீரிழிவு நோயாளிகளும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான குறிப்பு, கால்களில் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தைக் குறைக்க, இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பது, இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, அவ்வப்போது கால் பரிசோதனைகளை மேற்கொள்வது போன்றவைகளைச் சரியாகக் கடைப்பிடித்து வர வேண்டும்.

குறிப்பாக, நீரிழிவு நோயுடையவர்கள், எந்தவொரு பிரச்னைகளையும் மருத்துவரிடம் வெளிப்படையாகச் சொல்லித் தீர்வு காண்பதே மிகவும் முக்கியம்.

முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
இந்திய விமானப்படை ஓடுதளத்தையே விற்ற குடும்பம் - எப்படி நடந்தது?
Foot care

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com