

ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 8 மணி நேர தூக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் முக்கியம். மறுநாள் சுறுசுறுப்பாக வேலைகளை தொடர ஆழ்ந்த உறக்கம் உதவி புரிகிறது. இந்த அவசர உலகில் பலரும் நிம்மதியான தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள். இது பல்வேறு உடல் மற்றும் மன பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்த வகையில் நிம்மதியான தூக்கத்திற்கு செய்ய வேண்டிய 10 விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அதாவது இரவு 9 மணிக்கு தூங்கச் சென்றால் காலை 5 மணிக்கு எழுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இது மாறாமல் இருந்தால் தூக்கமின்மை பிரச்சனை இருக்காது.
2. காபி, டீக்கு அடிமையானவர்கள் தினமும் 5 கப் காபி அல்லது டீ குடிப்பதால் தூக்கமின்மை ஏற்படும் என்பதால் நிம்மதியான உறக்கத்திற்கு ஒன்றிரண்டு கப்புகளுடன் காபி, டீ பருகுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.
3. தினமும் பல மணி நேரங்கள் இரவில் தூங்காமல் டிவி, மொபைல், கம்ப்யூட்டர் பார்த்துக் கொண்டிருந்தால், பலவித நோய்கள் ஏற்பட்டு தூக்கம் கெடுவதோடு நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்து கொண்டே வரும். சரியான தூக்கத்திற்கு அளவாக டிவி, கம்ப்யூட்டர், மொபைல் பார்ப்பதை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
4. காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதோடு, இரவு வயிறு முட்ட சாப்பிடாமல் பாதி வயிறு சாப்பிட்டு, சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் தூங்கச் செல்வது தூக்கத்திற்கு சிறந்த மருந்தாகும். மேலும் மூன்று வேளையில் ஒரு வேளை முழுவதும் சாப்பிடாமல் அடுத்த வேளை வயிறு முட்ட சாப்பிடுவதும் தவறான மற்றும் தூக்கத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு பழக்கமாகும்.
5. உடல் எடையை குறைக்கிறேன் என இரவில் முற்றிலும் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் தூங்கினால் தூக்கம் வராது. மேலும் இதனால் குடல் புண், அல்சர், வாயு பிரச்சனை, வாய்நாற்றம், உடல் பலவீனமடைதல் போன்றவை ஏற்படும் என்பதால் இரவு 8 மணிக்கு முன்பாக அரை வயிறு சாப்பிட்டு தூங்குவதால் தூக்கம் இதமாக கண்களை தழுவும்.
6. நிம்மதியான தூக்கத்திற்கு தினமும் செய்யும் உடற்பயிற்சி சிறந்த மருந்து என்பதால் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நிம்மதியான தூக்கமே மறுநாள் உங்களை சுறுசுறுப்பாக்கும்.
7. தூங்குவதற்கு முன்பாக அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டும். தடையின்றி நிம்மதியாக உறங்க, தூங்க செல்வதற்கு முன்பாக இரவில் அதிக அளவு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
8. விளக்கின் ஒளி நிம்மதியான தூக்கத்தை தராது என்பதால் தூங்கச் செல்லும் போது படுக்கையறையில் வெளிச்சம் இல்லாமல் இருக்க அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு தூங்க வேண்டும். வெளியில் இருந்து வரும் வெளிச்சத்தை தடுக்க ஜன்னல்களில் திரைச்சீலைகளைப் பயன்படுத்த வேண்டும்.
9. நாம் தூங்கும் மெத்தைகள், தலையணைகள், போர்வைகள், படுக்கைகள் தரமானவையாக இருந்தால்தான் நல்ல தூக்கம் கிடைக்கும். நல்ல தூக்கத்தை கெடுப்பவையாக படுக்கைகள் இருந்தால் அவற்றை உடனடியாக மாற்றி விட வேண்டும்.
10. காலையில் அலாரம் அடித்து அவசரமாக எழும்போது ரத்த அழுத்தம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் தினமும் சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுதும் போது மனதில் பதிந்து அலாரம் அடிக்காமலேயே எழும் பழக்கம் ஏற்பட்டுவிடும்.
மேற்கூறிய பத்து பழக்கவழக்கங்களை தவறாமல் பின்பற்றினால் தூக்கமின்மை பிரச்னையை துரத்தி அடிக்கலாம்.