

பல முயற்சிகள் செய்து எப்படியாவது அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு எழுந்து விட வேண்டும் என்கிற ஒரு இலக்கோடு நம்மில் பலர் இருக்கிறோம். ஆனால் அதிகாலை சுறுசுறுப்பாக எழுந்து விட்டால், அதே சுறுசுறுப்பு மதிய வேளையில் படிப்படியாக குறைய தொடர்கிறது அல்லவா..! இது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. இந்த மதிய நேரத்தில் ஏற்படும் மந்தத் தன்மையை (afternoon fatigue) எப்படி போக்குவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அதிகாலை எழுவதால், உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும், ஆரோக்கியம் சார்ந்தும் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. இந்நேரத்தில் மூளையானது சுறுசுறுப்போடு இயங்குகிறது. இதனால் நாம் படிக்கும் அனைத்தும் மனதில் பதிகின்றன. அதுமட்டுமில்லாமல் நமது வேலைகளையும், கடமைகளையும் விரைந்து முடிக்க இந்த அதிகாலைப் பொழுதானது உதவுகிறது.
அதிகாலையில் இருக்கும் ஆற்றல், மதிய வேளையில் குறைய காரணம் என்ன?
அதிகாலை சீக்கிரம் எழுந்து, மதிய வேளையில் தூங்கினால் நமது உடலும், மனமும் சோர்வடைகின்றன. இதனால் மூளையும் சோர்வடைய தொடங்குகிறது.
நாம் செய்யும் மிகப்பெரிய தவறு, மதியம் எடுத்துக் கொள்ளும் உணவுதான். சரியான முறையில் ஊட்டச்சத்துகள் அடங்கிய மதிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மனதின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் மந்தத்தன்மையாக இருப்பது, இரவில் அதிக நேரம் கழித்து தூங்கி, பின் அதிகாலை எழுவது முக்கிய காரணமாக அமைகிறது.
இதனால் ஏற்படும் களைப்பு மதிய வேளையில் நமக்கு தெரிய வருகிறது. ஏதோ ஒரு பிரயோஜனம் இல்லா பிரச்னையை யோசிப்பதாலும், குழம்பி போவதாலும் இந்த மந்தத்தன்மை ஏற்படுகிறது. எதிலும் கவனமில்லாமலும், சுறுசுறுப்பு இல்லாமலும் இருப்பது போன்ற பல காரணங்கள் நாம் மதிய வேளையில் சோர்வடைய காரணமாகின்றன.
மதிய வேளை மந்தத்தன்மையை விரட்டும் மூன்று மந்திர வழிகள்:
1. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்:
நாம் காலையில் சுறுசுறுப்பாக இருந்தாலும், மதிய வேளையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுதான், அதற்குப் பின்னே உள்ள நேரத்தில் நாம் எந்த அளவு சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது. இதனால், நாம் எடுக்கும் உணவு மிக முக்கியமானது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால், மதியம் எடுத்துக் கொள்ளும் உணவே மூலதனமாக அமைகிறது.
கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த சோறு போன்ற உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், மாவுச்சத்து நிறைந்த உணவு பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, புரதச்சத்து நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கிய காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் இறைச்சி வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
முக்கியமாக கீரைகள், பருப்புகள், காய்கறிகள் போன்ற இதெல்லாம் மதிய உணவில் அடங்கி இருந்தால் நமக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். முக்கியமாக, மதியம் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
2. குட்டித் தூக்கம்:
மதிய வேளையில் தூங்கக் கூடாது என்று சொல்லும்போது, குட்டி தூக்கம் போடுவது சரியாக இருக்குமா? என்ற கேள்விகள் நம்மில் பல பேருக்கு வரும். ஆனால், இந்த தூக்கமானது நீண்ட ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வதற்கு பதிலாக, 10-லிருந்து 20 நிமிடங்களுக்குள் (power nap) தூங்கி எழுவதை குறிக்கிறது. இதனால் நமது மூளையானது ஒரு புத்துணர்ச்சியோடும், சுறுசுறுப்போடும் மறுபடியும் இயங்க ஆரம்பிக்கும். நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் மதிய வேளையில் மந்தத்தன்மையை உணர்ந்தால், இடைவேளையில் ஒரு பத்து நிமிடம் குட்டி தூக்கம் போடுங்கள். அது உட்கார்ந்தவாரோ எப்படியோ உங்களின் வசதிக்கேற்ப தூங்குங்கள். 'குட்டி தூக்கம் என்பது சோம்பேறிகளின் அறிகுறி அல்ல. அது புத்திசாலிகளின் ஒரு உத்தி' என்று புகழ்பெற்ற எழுத்தாளரும், இலக்கியவாதியுமான டேனியல் ஹச் பிங்க் என்பவர் தனது WHEN என்கிற புத்தகத்தில் கூறுகிறார்.
மிக முக்கியமாக 20 நிமிடங்களுக்கு மேலே தூங்கி விடாதீர்கள். இப்படி தூங்கும் பொழுது நமக்கு மேலும் சோர்வு ஏற்படும். இதற்கு நீங்கள் ஒரு அலாரம் வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.
3. தண்ணீர் குடியுங்கள்:
மதிய வேளையில் சோர்வாக இருக்கும் பட்சத்தில், ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் அருந்துங்கள். இதனால் உடனே ஒருவித சுறுசுறுப்பு நமக்குள் ஏற்படும். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காராமல், எழுந்து கொஞ்ச நேரம் நடந்து செல்வது அல்லது எழுந்து நிற்பது என்று இருக்கலாம். பெரும்பாலும் மதிய வேளையில் டீ, காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. தூக்கம் வராமல் இருக்க பெரும்பாலும் நாம் அனைவரும் மதிய வேளையில் டீ, காபியைத்தான் குடிக்கிறோம். ஆனால் இனிமேல் நீங்கள் ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் குடியுங்கள். இதனால் உங்கள் உடலுக்கும் குளிர்ச்சியாக இருக்கும்.
அப்புறம் என்னங்க இந்த மூணு வழிகளையும் பின்பற்றுங்க…மதிய வேளை மந்தத்தன்மையை அடிச்சே விரட்டிறலாம்..! சின்ன சின்ன பழக்கங்கள் தான் பெரிய மாற்றத்துக்கு அடித்தளமாகும் என்பத நினைவுல வச்சுக்கோங்க..!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)