
சுலபமான எடைக் குறைப்பிற்கு உதவும் எனக் கூறி பலவகையான 'டயட் முறைகள்' ட்ரெண்டிங்காகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில வகை டயட் நன்மை செய்வதற்குப் பதில், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கிழைப்பதாகவும் அமைந்து விடுகின்றன. நீண்ட கால ஆரோக்கியத்திற்கும், நலனுக்கும் உதவாத அந்த அபாயகரமான 5 வகை டயட் முறைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. குறைந்த அளவு உப்பு அல்லது உப்பே இல்லாத உணவுகள்: உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்து உண்பது உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு நன்மை தரும். மருத்துவரின் வழிகாட்டுதலின்றி குறைந்த அளவு உப்பு சேர்த்த அல்லது உப்பே சேர்க்காத உணவுகளை உட்கொள்ளுதல் உடலுக்கு தீமையே தரும். நம் உடலின் திரவ அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும், நரம்புகளின் சீரான செயல்பாடுகளுக்கும், தசைகள் சுருங்கி விரியவும் உப்பின் உதவி அவசியம் தேவை.
உப்பு சேர்த்த உணவை முழுமையாகத் தவிர்க்கையில், உடலில் சோடியத்தின் அளவு குறைந்து, அதன் விளைவாக உடல் சோர்வு, தசைப் பிடிப்பு மற்றும் இதயநோய் கூட உண்டாகும் அபாயம் ஏற்படும். உடல் இயக்கம் சரிவர நடைபெற குறைந்த அளவிலான உப்பின் உதவி அவசியம் தேவை.
2. அறவே கொழுப்பில்லாத உணவுகள்: மிக வேகமாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் சிலர், தங்கள் உணவில் கொழுப்பு அறவே இல்லாத உணவுகளை மட்டும் சேர்த்து உண்பர். அவகாடோ, நட்ஸ், ஆலிவ் ஆயில் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ள உணவுகள், ஹார்மோன் உற்பத்தி, இதய ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் போன்றவற்றிற்கு அவசியம் தேவை. இவற்றைத் தவிர்த்திடும்போது உடலில் கொழுப்பு அமிலங்களின் அளவு குறைந்து, சருமம் உலரவும், நோயெதிர்ப்பு சக்தி குறையவும், உடல் சோர்வடையவும் வழியாகிவிடும். சாச்சுரேட்டட் கொழுப்புள்ள உணவை குறைந்த அளவிலும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புள்ள உணவில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்தும் உட்கொள்வது ஆரோக்கியம் தரும்.
3. க்ராஷ் அண்ட் ஸ்டார்வேஷன் டயட்: சிலர் எடை குறைய, குறைந்த கலோரி கொண்ட உணவுகளை உட் கொள்வது மற்றும் தொடர்ந்து சிலநாட்கள் உணவை தவிர்த்து பட்டினி கிடக்கும் பழக்கத்தை பின்பற்றுவர். இதனால் உடலிலுள்ள நீர் மற்றும் தசையின் அளவு குறைந்து உடல் மெலியும். ஆனால் கொழுப்பு குறையாது. மெட்டபாலிச ரேட் குறையும். ஊட்டச்சத்து குறைவதால் நோயெதிர்ப்புச் சக்தி குறையும். மீண்டும் பழைய உணவு முறைக்குத் திரும்பியதும் எடை கூட ஆரம்பித்துவிடும்.
4. நச்சு நீக்கும் டயட் (Detox diet): இந்த முறையில் விரதம் இருப்பது போல் பட்டினி கிடந்து பழச்சாறுகளை அதிகம் எடுத்துக் கொள்வார்கள். இதில் கல்லீரல் மற்றும் கிட்னியிலுள்ள நச்சுக்கள் நீங்கும் என்றாலும் ஊட்டச்சத்துக்குறைபாடு ஏற்படவும் டீஹைட்ரேஷன் உண்டாகவும் வாய்ப்பாகும். நச்சு நீக்கும் டயட் உடலுக்குத் தேவையற்றது என்றே கூறலாம். ஏனெனில், நார்ச்சத்துமிக்க காய்கறிகள், முழு தானிய மற்றும் லீன் ப்ரோட்டீன் உணவுகள் போன்றவையே உடலிலிருந்து நச்சுக்கள் வெளியேறப் போதுமானது.
5. முட்டைகோஸ் சூப் டயட் (The Cabbage Soup Diet): இதுவும் மற்றொரு உதவாக்கரை பிளான் என்றே கூறலாம். அதிகளவு முட்டைகோஸ் சூப்புடன் மற்ற உணவுகளை குறைத்து உட்கொள்ளும்போது சில நாட்களிலேயே உடல் எடை குறையும். உடலில் ஊட்டச்சத்துக்களும் நீர்ச்சத்தும் குறைவதாலேயே இந்த எடையிழப்பு. இதனால் உடல் சக்தியை இழக்கும்; ஊட்டச்சத்துக்கள் சமநிலையற்றுப் போகும்; தசைகளின் அளவும் குறையும். இந்த டயட் பீரியட் முடிந்து, வழக்கமான உணவு முறைக்குத் திரும்பும்போது மீண்டும் உடல் எடை கூட ஆரம்பித்துவிடும்.
எனவே இந்த மாதிரியான டயட் பிளான்களையெல்லாம் விட்டுவிட்டு சரிவிகித உணவுடன் உடல் உழைப்பு, உடற்பயிற்சி, ஓய்வு, உறக்கம் என வாழ்வியலை அமைத்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.