

இதய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் மிக அதிகமாக உள்ளது. உலக சுகாதார மையம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இதுபற்றி விவரித்துள்ளது.
இதய நோய்களின் தலைநகரம் இந்தியா என்று வர்ணிக்கப்படும் நம் நாட்டில், இது பற்றிய விழிப்புணர்வோ, அக்கறையோ இன்னும் முழுமையாக இல்லை. நம்கோ, உறவினர்களுக்கோ இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அலட்சியமாக தான் அணுகுகிறோம்.
இந்தியாவில் மட்டுமே 50 வயதை கடந்தவர்கள் 25 சதவிகிதமும், 40 வயதை கடந்தவர்கள் 15 சதவிகிதமும் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிறுவயது இதய பிரச்சனைகளும் அதன் பாதிப்பும் தற்சமயம் அதிகரித்து வருகிறது.
இதய நோய் வராமல் தடுப்பதற்கு சில எளிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் என்றும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
நிம்மதியான தூக்கம் வேண்டும்:
அலுவலக பிரச்சனைகளை எப்போதும் நினைத்து டென்ஷனை ஏற்றிக் கொள்வது. சரியான உணவு பழக்கம் இன்றி நேரம் கடந்து தூங்க செல்வது நிச்சயமாக இதயத்தை பாதிக்கும். தூங்கும்போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக உறங்கி எழ வேண்டும். இரவு தூக்கம் பாதித்தால் உடல் ஆரோக்கியம் கெடுவதுடன் மனதளவில் நமக்கும், தூக்கத்திற்கு மான இடைவெளியை அதிகரித்துவிடும். உணவு உண்டபின் உடனே படுக்கைக்கு செல்வது கண்டிப்பாக தவிர்க்க பட வேண்டும்.
சராசரியாக எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். ஆரோக்கியமான உணவு பழக்கம், புகை பிடிக்காமை, மது அருந்தாமை, இவற்றுடன் தூக்க நேரத்தையும் சரியாக பின்பற்றிட இதயநோய் 90 சதவிகிதம் நெருங்க வாய்ப்பில்லை.
சிரிக்க கற்றுக் கொள்ளுங்கள்:
மாரடைப்புக்கும், சிரிப்புக்கும் மறைமுகமான அதேசமயம் நெருங்கிய தொடர்பு உண்டு. ரத்த குழாயில் உள்ள கொழுப்புக் கட்டி வெடித்து, ரத்தம் உறைந்து ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். இதயத்திற்கு செல்லும் ரத்தம் குறையும்போது மாரடைப்பு ஏற்படும். மனம் விட்டு சிரிக்கும்போது, நம் உடலில் நன்மை பயக்கும் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்கள், ரத்தக் குழாயில் படிந்துள்ள கொழுப்பு கட்டிகளை வெடிக்க விடாமல் செய்துவிடும். வாய்விட்டு சிரிக்க பழக உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது.
எடைக்கு ஏற்ற நடைப் பயிற்சி:
நம்மில் பலரும் சுகவாசிகள் தான். விரும்பிய நேரத்தில் சாப்பாடு, வேண்டிய இடத்துக்கு செல்ல வாகனம், கை நிறைய சம்பளம், ஓய்வு என ஒருவரின் முன்பாதி கழிந்தால், நோய் தாக்கி மருத்துவமனை, மருந்துகள் என பின்பாதி அவதியுற நேரிடும். காலை எழுந்தவுடன் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள, உடலில் ரத்த ஓட்டம் சீராகும். மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். உணவிற்கு பின் நடைப்பயிற்சியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சுவைக்கு அடிமையாக வேண்டாம்:
உலகிலேயே இந்தியர்கள் தான் சுவைக்கு அடிமையாக உள்ளனர். பிடித்த உணவை அதிகம் சாப்பிட்டு, பிடிக்காததை ஓரங்கட்டியும் விடுவதால் உடல் எடை அதிகரிப்பதோடு, இதய செயல்பாட்டிற்கும் இடையூறு ஏற்படுத்தி விடுகிறது.
நாள் ஒன்றுக்கு அவரவர் உடல் இயக்கத்திற்கு ஏற்ப கலோரிகள் தேவை. சராசரியாக 2,500 கலோரிகள் உடல் இயக்கத்துக்கு தேவை. இந்த அளவை தாண்டி உடலில் சேரும் கலோரிகள், கொழுப்பாக ரத்தத்தில் கலக்கின்றன. அசைவ உணவையும் அளவோடு சாப்பிட்டு வந்தால் உடல் எடை சமநிலை பெற்று ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும்.
கொழுப்பு குறைந்த உணவுகள், கீரை, காய்கறிகள், உடற்பயிற்சி, சந்தோஷமான மனநிலை, என வழக்கப்படுத்திக் கொள்ள இதயம் நம் நண்பனாக நன்கு இயங்கி நம்மை மகிழ்வித்து காக்கும்.