

வெளியே ஒல்லியாகத் தெரிந்தாலும் வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு, இந்தியர்களுக்கு இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது. நம் மரபணுவில் ஒளிந்துள்ள ‘ஏசியன் இந்தியன் பீனோடைப்’ (Asian Indian Phenotype) என்ற தன்மை இதற்குக் காரணமாக இருக்கிறது. இதன் காரணங்கள் என்ன? அதை எப்படி கட்டுப்படுத்தி இதயத்தை பாதுகாப்பது? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு மிக இளம் வயதிலேயே இதயக் குழாய் அடைப்பு ஏற்படுவதோடு, இதனால் ஏற்படும் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. இதய ரத்தக்குழாய் நோய், இதய செயலிழப்பு, பக்கவாதம், கால்களுக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதிப்பு என பல வகைகளில் இந்த பாதிப்புகள் வெளிப்படும். அதிக ரத்த சர்க்கரை காரணமாக நரம்பு மண்டலம் பாதிப்பு ஏற்பட்டு வலியை உணர முடிவதில்லை.
ரத்த ஓட்டம் குறைந்து வலி தெரியாத வகையிலான மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு பிரதான காரணம் கட்டுப்பாடற்ற சர்க்கரை ரத்தக்குழாய்களின் உட்புற சுவர்களில் அழுத்தத்தை உருவாக்கி நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களை உருவாக்குகிறது. இதனால் ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதயத்தின் மகா தமனி தடித்து விடுகின்றன ரத்தக்குழாய் அடைப்பு உள்ள பகுதிகளில் தொற்று ஏற்பட்டு மாரடைப்பு உண்டாகிறது.
ஏசியன் இந்தியன் பீனோடைப் (Asian Indian Phenotype)
நம் நாட்டில் இந்த பாதிப்புகள் தீவிரமாக இருப்பதற்கு காரணம் ஏசியன் இந்தியன் ஃபினோ டைப் எனப்படும் வயிறு இடுப்பு பகுதியை சுற்றி அதிக கொழுப்பு சேர்வது தான். இதற்கு நடு உடல் பருமன் என்று பெயர். இது நம் நாடு உட்பட ஆசிய மக்களின் மரபணுவில் உள்ளது.
குறைவான உணவு சாப்பிட்டு அதிக உடல் உழைப்பு செய்யும் விதமாக மரபு ரீதியில் நம் உடல் அமைப்பு உள்ளது. நம் முன்னோர்கள் அப்படித்தான் வாழ்ந்து வந்தனர்.
நம்முடைய வாழ்க்கை முறை 30 ஆண்டுகளில் இதற்கு நேர் எதிராக அதிகமாக உணவு, குறைந்த உடல் உழைப்பு என மாறிவிட்டது. இது இதய ரத்தக்குழாய் நோய்களை விரைவாக தூண்டுகிறது.
இதனால் ஐரோப்பியர்களை விட ஆசிய நாட்டவருக்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே இதய நோய்கள் ஏற்படும்போக்கு அதிகரித்துவிட்டது. ரத்த நாளங்களில் அடைப்பு உயர் ரத்த அழுத்தமும் இல்லாத நிலையிலும் சர்க்கரை நோயால் இதயத்தசைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு இதயம் பலவீனம் அடையலாம்.
இது இறுதியில் இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு பாதிப்பு ஏற்படுவதால் இஸ்கிமிக் (Ischemic) எனப்படும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் மிக அதிகம்.
வயிற்றுப் பகுதி கொழுப்பை குறைக்க சுத்திகரிக்கப்பட்ட மாவு சத்து உணவுகளை குறைத்து, பழங்கள், காய்கறிகள்,முழு தானியங்கள், பயிறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு முறையான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.
மருத்துவ சிகிச்சைகள்
சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி இதயத்தை பாதுகாக்கும் நவீன மருந்துகளான எஸ்.ஜி.எல் டி 2 இன்ஹிபிட்டர் (Inhibitor), ஜி. எல்.பி. 1 ரிசப்டார் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளும் போது இதயப் பாதிப்பின்றி இருக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)