உறக்கம் என்பது ஓய்வு. பகல் முழுவதும் ஓய்வின்றி உழைத்துக் களைத்திருக்கும் நம் உடலும் மனமும் அமைதியாய் உறங்கி எழும்போது அடுத்த நாள் உற்சாகமாக ஆரம்பிக்கும். குறிப்பிட்ட சில வகை உணவுகளை இரவு நேரம் உட் கொள்வது எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணி உறக்கத்தை தொலைக்கச் செய்து விடும். அந்த மாதிரியான உணவுகளை பகலில் உட்கொள்ளும்போது பிரச்சினை எதுவும் வருவதில்லை. அதையே டின்னருடனோ அல்லது ஸ்னாக்ஸ்ஸாகவோ படுக்கைக்குப் போகும் முன் உட்கொண்டால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். அவ்வாறான 5 வகை உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
அதிகளவு காரமான உணவு உங்கள் நாவின் சுவை அரும்புகளுக்கு வேண்டுமானால் சூப்பராகத் தோன்றலாம். ஆனால் உங்கள் வயிற்றுக்குள் அது உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும். அமைதியும் குளிர்ச்சியுமான உணர்வுகளே உடனடியாக தூக்கத்தை வரவழைக்க மூளைக்கு செய்தி அனுப்பும் கருவிகளாகும்.
தூக்கமின்மைமேலும் ஸ்பைஸஸ் வயிற்றுக்குள் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வயிற்றுக் கோளாறுகளை உண்டுபண்ணும். அமைதியாக தூக்க நிலையை நோக்கி நகர வேண்டிய உடலை, உறக்கமின்றி அவதியுறச் செய்யும்.
சாக்லேட்டில், குறிப்பாக டார்க் சாக்லேட்டில் காஃபின் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை. இரவில் டின்னருக்குப் பின் ஒரு சிறு துண்டு டார்க் சாக்லேட் உட்கொண்டால் கூட அது மூளையை உறக்க நிலைக்கு செல்வதைத் தடுத்து விழிப்புணர்வுடன் இருக்கச் செய்துவிடும். அதற்குப் பதிலாக ஒயிட் சாக்லேட் அல்லது கரோப் (carob) பவுடர் சேர்த்து தயாரிக்கப்படும் சாக்லேட் எடுத்துக்கொள்ளலாம்.
இரவில், பக்கோடா, சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொரித்தெடுத்த ஸ்னாக்ஸை உட்கொள்வது மனதளவில் திருப்தியளிக்கலாம். ஆனால் வயிற்றுக்குள் சென்று ஜீரணமாக அவை வெகு நேரம் எடுத்துக்கொள்ளும். இரைப்பை குடல் இயக்க உறுப்புகள் விழித்திருந்து வேலை செய்யும் நிலை உருவாகும். மேலும் வயிற்று உப்புசம், அமைதியின்மை ஆகியவை உண்டாகி உங்களை அடிக்கடி விழித்தெழச்செய்யும்.
ஒரு துண்டு கேக் அல்லது சிறிது அல்வா சாப்பிடுவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆனால் அதிலுள்ள அதிகளவு சர்க்கரைச் சத்து உடலில் சக்தியின் அளவை உயரச் செய்யும். தளர்வுற்ற நிலையில் அமைதியுடன் உடலை உறக்க நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய வேளையில், இரத்த சர்க்கரை அளவை சமநிலையற்றதாகச் செய்யும்போது உடலுக்குள் விவரிக்க இயலாததொரு மந்த நிலை அல்லது பசியுணர்வு ஏற்பட்டு இம்சைப் படுத்தும்.
காபி மட்டுமின்றி, கோலா, குளிர்ச்சியூட்டப்பட்ட டீ மற்றும் சத்து பானங்களிலும் கூட காஃபின் கலந்திருக்கக் கூடிய வாய்ப்புள்ளது. இது, தூக்கத்திற்கு தூண்டுகோலாயிருக்கும் மெலட்டோனின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கவும், சரியான நேரத்திற்கு உங்களை தூங்க விடாமலும் செய்யும். எனவே இப்படிப்பட்ட பானங்களை இரவில் உட்கொள்ளாதிருப்பது உறக்கத்திற்கு உத்ரவாதம் தரும்.
குறிப்பிட்ட நேரத்திற்கு படுக்கைக்குச் சென்று, அமைதியாகத் தூங்கி எழ மேலே கூறப்பட்ட ஐந்து வகை உணவுகளை இரவில் உட்கொள்வதைத் தவிர்த்து விடுவது நல்லது.